இந்த வலைப்பதிவில் தேடு

பொங்கல் ஸ்பெஷல் - பல வகையான பொங்கல் மற்றும் வடைகள் செய்முறை...

வெள்ளி, 10 ஜனவரி, 2025







மிளகு பொங்கல்






பச்சரிசி - 2 கப்
பயத்தம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - இரண்டு சிட்டிகை
மிளகு - ஒன்றரை மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 12
இஞ்சி - அரை அங்குலத் துண்டு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நெய் - 50 கிராம்
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.




குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும்.


தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து சூடாக்கி அதில் பயத்தம் பருப்பு போட்டு வாசனை வர ஒரு நிமிடம் வறுக்கவும்.


பிறகு அதனுடன் அரிசியை போட்டு மேலும் ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அரிசி, பருப்பை தண்ணீர் ஊற்றி ஒரு முறை களைந்து விட்டு, குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்கு கிளறி விட்டு வேக விடவும்.


வாணலியில் நெய் 3 மேசைக்கரண்டி ஊற்றி முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு வறுத்துக் கொள்ளவும்.


சுமார் 20 நிமிடங்கள் கழித்து, அரிசி வெந்ததும் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு போடவும்.


அத்துடன் வறுத்து வைத்துள்ளவற்றையும் போட்டு நன்கு கிளறி விடவும்.


மேலும் அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, வெய்ட் போட்டு வேக வைக்கவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி விடவும்.


சுமார் 5 நிமிடம் கழித்து ஆவி அடங்கியவுடன் திறந்து, மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி கிளறி விடவும். இப்போது சுவையான மிளகு பொங்கல் தயார்.




இந்த மிளகு பொங்கலை தயாரித்துக் காட்டியவர், திருமதி. ஜெயா ரவி அவர்கள். வகை வகையான சைவ சமையல்கள் செய்வதில் திறன் வாய்ந்தவர். அனைத்து வகை பிராமண உணவுகளையும் சுவைபட தயாரிக்கக் கூடியவர். புது வகை உணவுகளை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகின்றார்

சர்க்கரைப் பொங்கல்



தேவையானவை: அரிசி - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 20, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, உலர்ந்த திராட்சை - 20, பால் - 200 மில்லி, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை.



செய்முறை: அரிசியை லேசான சூட்டில் வறுக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு... பாலும் தண்ணீரும் சேர்த்து நான்கு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை பொடித்து தண்ணீர் விட்டு, சிறிது கொதித்தவுடன் வடிகட்டி, உருட்டும் பதம் வரும்வரை பாகு காய்ச்சவும். வேக வைத்த சாதத்துடன் பாகு சேர்த்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். உலர்ந்த திராட்சையை சிறிதளவு நெய்யில் வறுத்துப் போடவும். குங்குமப்பூ மற்றும் மீதமுள்ள நெய்யை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: அம்மனுக்கு பூஜை செய்யும்போது இந்தப் பொங்கல் மிகவும் சிறந்தது. விருப்பப்பட்டால், சிறிது பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.
சோள வடை



தேவையானவை: இனிப்பு சோளம் (ஸ்வீட் கார்ன்) - 4 கதிர், பொட்டுக்கடலை - ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: இனிப்பு சோளத்தை கத்தியின் உதவியால் சுரண்டி எடுத்து... பொட்டுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: சோளத்தில் புரதச் சத்து அதிகம். சோளம் அதிக மாக கிடைக்கும் சீஸனில் வடை, அடை, சூப், கஞ்சி என விதம்விதமாக தயாரித்து சாப்பிடலாம்.



வெண் பொங்கல்



தேவையானவை: அரிசி - 250 கிராம், நெய் - 100 மில்லி, பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 20, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.


செய்முறை: பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். அரிசியுடன் பாசிப்பருப்பு சேர்த்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துக் கொண்டு, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து, சிறிதளவு நெய்யில் வறுக்கவும். கறிவேப்பிலையையும் நெய்யில் வறுக்கவும். வேக வைத்த அரிசி - பருப்பு கலவையுடன் வறுத்த முந்திரி, வறுத்த மிளகு - இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்றாகக் கலக்கினால்... வெண் பொங்கல் தயார்.

குறிப்பு: மார்கழி மாதத்தில் கோயில்களில் இந்த வெண் பொங்கல் அதிகாலை நைவேத்யம். வடை - தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.



கீரை வடை



தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பொடியாக நறுக் கிய கீரை - ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை : உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். கீரையை நன்கு கழுவி, பொடி யாக நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு நன்கு வதக்கி, மாவுடன் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: முருங்கைக் கீரை, முளைக்கீரை, அரைக்கீரை என ஏதாவது ஒரு வகை கீரையில் செய்யலாம். இதற்கு சாம்பார் சிறந்த காம்பினேஷன்.

புளி பொங்கல்



தேவையானவை: அரிசி - 250 கிராம், புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசியை உப்புமா ரவை போல உடைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்துக் கொள்ளவும். குக்கரில் நல்லெண்ணெய் விட்டு... கடுகு, கிள்ளிய மிளகாய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். புளித் தண்ணீருடன் நான்கு மடங்கு தண்ணீர் கலந்து இதில் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், உடைத்து வைத்து இருக்கும் அரிசி ரவையை தூவிக் கிளறி, குக்கரை மூடி வெயிட் போட்டு, நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

குறிப்பு: இது, கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொங்கல். புளிப்பும், காரமுமாக...நல்லெண்ணெய் மணத்துடன் அசத்தலான சுவையில் இருக்கும்.

துவரைக்காய் அவல் வடை



தேவையானவை: பச்சைத் துவரைக்காய் - 200 கிராம், (தோல் உரித்து எடுக்கவும்), கேரட் துருவல், நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - தலா ஒரு கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, அவல் - ஒரு கப் (ஊற வைக்கவும்), எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: துவரைக்காயுடன் பச்சை மிளகாய், அவல், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக அரைக்கவும். மாவுடன் துருவிய கேரட், வாழைத் தண்டு, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து... எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: துவரைக்காய் சீஸனில் இந்த வடை மிகவும் ஸ்பெஷல் அயிட்டம். துவரைக்காயில் பொரியல், குருமா, கூட்டு என பலவிதமான 'டிஷ்'கள் தயாரிக்கலாம் .


மசால் வடை



தேவையானவை: கடலைப்பருப்பு - 200 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடித்துக் கொள்ளவும். தோல் சீவி, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக் கிய கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்க வும்.

குறிப்பு: சாம்பார் - சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். புதினாவை நறுக்கி சேர்த்தும் செய்யலாம்.

சோளம் பார்லி அவல் பொங்கல்




தேவையானவை: பார்லி - 100 கிராம், அவல் - 250 கிராம், உடைத்த சோளம் - ஒரு கப், மிளகு - சீரகம் (பொடித்தது) - 2 டீஸ்பூன், வறுத்த முந்திரிப் பருப்பு - 20, நெய் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பார்லி, அவல், சோளம் மூன்றையும் தனித்தனியாக தண்ணீர் விட்டு 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு அவற்றை ஒன்று சேர்த்து, மூன்று மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், இஞ்சியை வறுத்து... வேக வைத்த சோளம், பார்லி, அவல் கலவையுடன் சேர்க்கவும். மீதமுள்ள நெய்யை விட்டு... உப்பு, வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு: சுகர் கம்ப்ளெயின்ட் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது இந்தப் பொங்கல்.

ரவை பொங்கல்



தேவையானவை: வறுத்த ரவை - கால் கிலோ, மிளகு - 10, சீரகம் - ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு (பொடியாக நறுக்கவும்), வறுத்த முந்திரிப் பருப்பு - 10, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 100 மிலி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: மிளகு - சீர கத்தை பொடித்துக் கொள்ள வும். கடாயில் நெய் விட்டு... பொடித்த மிளகு - சீரகம், நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். இதில், ஒரு பங்கு ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீரை விட்டு உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். நன்றாக கொதிக்கும்போது ரவையை போட்டு கிளறி, இறக்கி முந்திரிப் பருப்பு சேர்க்கவும்.

குறிப்பு: இது, எளிதாக செய்யக் கூடிய பொங்கல். புதினா சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

தயிர் வடை



தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், பச்சை மிளகாய் - 3, மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, கேரட் துருவல் - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, தயிர், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, மிளகு சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அரைக்கவும். மாவை நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கெட்டியான தயிரைக் கொட்டி வைக்கவும். லேசாக சூடாக்கிய தண்ணீரில் வடைகளை போட்டு, உடனே எடுத்து தயிரில் போட்டு, ஒரு பெரிய பிளேட்டில் பரவலாக வைக்கவும். மேலே கொத்தமல்லி, கேரட் துருவல் போட்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: தயிர் மிகவும் புளிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். இஞ்சி, புதினா, கொத்தமல்லியை அரைத்து தயிரில் கலந்தும் தயிர் வடை தயாரிக்கலாம்.

வெரைட்டி வெஜிடபிள் வடை



தேவையானவை: உளுத்தம்பருப்பு - 200 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பச்சைப் பட்டாணி - தலா ஒரு கப், புதினா - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீர் வடித்து, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவு டன் கேரட் துருவல், கோஸ் துருவல், குடமிளகாய், புதினா, பட்டாணி சேர்த்துப் பிசைய வும். வாணலியில் எண்ணெயை காய வைத்து, மாவை வடை களாக தட்டிப் போட்டு பொரித்தெடுக்வும்.

குறிப்பு: அவரவர் விருப்பப் படி பிடித்த காய்களை பொடி யாக நறுக்கி சேர்த்து வடை தயாரிக்கலாம். இந்த வடைக்கு சில்லி சாஸ், தக்காளி சாஸ் சிறந்த காம்பினேஷன்.

பால் பொங்கல்



தேவையானவை: அரிசி - 250 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 500 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப் பருப்பு - 20, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 100 மில்லி.



செய்முறை: அரிசியுடன் பாலை கலந்து குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். இதனுடன் சர்க்கரை, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துக் கிளறி, நெய் விட்டு இறக்கவும்.

குறிப்பு: சர்க்கரைக்குப் பதில் கல்கண்டு சேர்க்கலாம். பிஸ்தா பருப்பு, பாதாம் பருப்பு வறுத்து சேர்க்கலாம்.

ஜவ்வரிசி வடை

தேவையானவை: ஜவ்வரிசி - 250 கிராம், பார்லி, அவல் - தலா அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கறிவேப்பிலை சிறிதளவு, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பார்லி, ஜவ் வரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, அவல் சேர்த்துப் பிசையவும். இதனுடன் உப்பு, இஞ்சி, வெங்காயம், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு: அரிசி மாவு, கடலை மாவு சேர்த்து பக்கோடா போல கிள்ளிப் போட்டும் பொரிக்கலாம். இதற்கு சாஸ், சட்னி சிறந்த காம்பினேஷன்.


வெஜிடபிள் பொங்கல்



தேவையானவை: பாசிப்பருப்பு (வறுத்தது) - 100 கிராம், அரிசி - 250 கிராம், கோஸ் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பட்டாணி - தலா ஒரு கப், இஞ்சி (துருவிக் கொள்ளவும்) - ஒரு சிறிய துண்டு, மிளகு - 20, சீரகம் - ஒரு டீஸ்பூன், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரிப் பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை கலந்து, நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மிளகு - சீரகத்தை ஒன்றிரண்டாக பொடித்து நெய்யில் வறுக்கவும். நறுக்கிய, துரு விய காய்கறிகள் எல்லாவற் றையும் கடாயில் போட்டு... நெய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சாதத்துடன் வதக்கிய காய் கறிகள், வறுத்த மிளகு - சீரகம், முந்திரி, நெய் சேர்த்து நன்கு கிளறவும்.

குறிப்பு: காய்கறிகள் சாப் பிடாத குழந்தைகளை இப்படி காய்கள் சேர்த்த பொங்கல் செய்து சாப்பிட வைக்கலாம். உலர்ந்த திராட்சை, ஸ்வீட் கார்ன் சேர்த்தும் செய்யலாம்.

ஃப்ரூட்ஸ் பொங்கல்



தேவையானவை: அரிசி - கால் கிலோ, உலர்ந்த திராட்சை - 20, மாதுளை முத்துக்கள் - ஒரு கப், வாழைப்பழம் - 2, ஆப்பிள் - ஒன்று, சப்போட்டா - 2, பப்பாளிப்பழத் துண்டுகள் - ஒரு கப், நெய் - 100 மில்லி, வறுத்த முந்திரி - 10, உப்பு - ஒரு சிட்டிகை.



செய்முறை: அரிசியை நான்கு பங்கு தண்ணீர் விட்டு குக்கரில் குழைவாக வேகவிடவும். ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். வாழைப்பழத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கவும். சப்போட்டாவை தோல் உரித்து விதை நீக்கி நறுக்கவும். பப்பாளியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வேக வைத்த சாதத்தை ஒரு அகலமான பேஸினில் போட்டு, எல்லா பழங்களையும் சேர்த்து, நெய் விட்டு, உப்பு, வறுத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். மேலே உலர்ந்த திராட்சையை தூவவும்... ஃப்ரூட்ஸ் பொங்கல் ரெடி!

குறிப்பு: வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற பொங்கல் இது. பிஸ்தா, பாதாம், பேரீச்சை சேர்த்தும் தயாரிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent