இந்த வலைப்பதிவில் தேடு

அரசு ஊழியர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் - சீமான் குற்றச்சாட்டு

ஞாயிறு, 24 நவம்பர், 2024

 



ஓய்வூதிய இயக்குநரகத்தை கலைத்ததன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை எந்த காலத்திலும் கொண்டுவர முடியாத கொடுஞ்சூழலை உருவாக்கிய தி.மு.க., அரசு மிகப்பெரிய அநீதியை அரசு ஊழியர்களுக்கு இழைத்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.


கொடுங்கோன்மை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் தி.மு.க., அரசு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவது வன்மையான கண்டனத்திற்குரியது. 


கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்று மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை நிறைவேற்ற மறுத்து அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.


கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரலில் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்' எனப்படும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டனர். இதனால், அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் போய்விட்டது. 


அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அ.தி.மு.க., அரசு அறிவித்தது. ஆனால் தொடக்கம் முதலே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர்.


அரசு ஊழியர்களின் 13 ஆண்டுக்காலப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வல்லுநர் குழு ஒன்றை அமைத்தார். 


அக்குழு அமைக்கப்பட்ட 4 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் அளிக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகால தாமதத்திற்குப் பிறகு வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையை 2018 ஆண்டு தான் தமிழக அரசிடம் அளித்தது.


தொடர்கதை

ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அன்றைய அ.தி.மு.க., அரசு, வல்லுநர் குழு அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டது. அதன்பின், சென்னை ஐகோர்ட், 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வல்லுநர் குழு அறிக்கையை நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிட்டதையடுத்து, வேறு வழியின்றி, 2019 ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது. இதனால் அரசு ஊழியர்களின் கண்ணீர்ப் போராட்டம் மீண்டும் தொடர்கதையானது.


பச்சைத் துரோகம்

இதற்கிடையில், கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியளித்து அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த தி.மு.க.., ஆட்சிக்கு வந்த உடனேயே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்கும் என்று ஆவலோடு அரசு ஊழியர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 


ஆனால், ஆட்சி அதிகாரத்தை ஏமாற்றிப் பிடித்துவிட்டோம் என்ற இறுமாப்போடு, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவுபெறும் நாளில், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட சாத்தியமே இல்லை என்று கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சட்டப்பேரவையிலேயே அறிவித்து, நம்பியிருந்த அரசு ஊழியர்களை ஏமாற்றியது 'திராவிட மாடல்' தி.மு.க., அரசு. 


எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent