இந்த வலைப்பதிவில் தேடு

அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் இடஒதுக்கீடு - ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

வியாழன், 26 ஜூன், 2025

 




மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு போல், அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழகத்தில், மொத்தம் 8 ஆயிரத்து 328 அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 1,600க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. 


குறிப்பாக, கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்நிலையில், இங்கு பயிலும் மாணவர்கள், அரசு வழங்கும் நலத்திட்டங்களை முழுமையாக பெற முடிவதில்லை என்பதால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் கல்வி பெறும் மாணவர்களையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அமல்ராஜன் கூறுகையில், 


“மருத்துவக் கல்விக்காக நீதிபதி கலையரசன் குழு, வேளாண்மை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்விக்காக நீதிபதி முருகேசன் குழு ஆகியவை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசிடம் பரிந்துரை செய்தன. இதன் அடிப்படையில் தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 


மீதமுள்ள 2.5 சதவீத இட ஒதுக்கீடு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஏனெனில், இப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் கல்வி பயின்று வரும் நிலையில், அவர்களும் அரசு வழங்கும் சலுகைகளை பெற உரிமையுடையவர்கள்” என்றார்.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி கூறுகையில், “அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் செயல்படுகின்றன. மெட்ரிக் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் பயனடைகின்றனர். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த சலுகை இல்லை” என்றார்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent