பள்ளிக்கல்வித் துறை சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனிற்காக பள்ளிகளில் மாபெரும் நூலகங்கள், மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற பல்வேறு முன்னோடி திட்டங்களை திராவிட மாடல் அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, கடந்த நான்கு ஆண்டு காலங்களில் ரூ.519.73 கோடியில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்), ரூ.455.32 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்), ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் ரூ.352.42 கோடி செலவில் 38 மாதிரிப் பள்ளிகள், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,833.02 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள், கழிப்பறைகள் மற்றும் சுற்றுசுவர் என மொத்தம் 3160.49 கோடியில் பள்ளிக்கல்வித் துறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதன்படி, 72 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் ரூ.99 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 403 வகுப்பறைகள், 54 கழிவறைகள், 13 ஆய்வகங்கள், 2 குடிநீர் வசதிகள் என 472 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பி.சந்தரமோகன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக