இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி மாணவர்கள் 'Guide' பயன்படுத்தியதால் ஆசிரியருக்கு "Memo" - முதன்மை கல்வி அலுவலர்

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

 





மாணவர்களை தனியார் 'கைடு'களை வைத்து படிக்க நிர்பந்தித்ததாக கூறி, அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கான புத்தகங்களை, பள்ளி கல்வித்துறை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த புத்தகங்களை பயன்படுத்தி, பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த பாடப் புத்தகங்களை மாணவர்கள் முழுமையாக படித்தால் மட்டுமே அனைத்து கேள்விகளுக்கும் விடை எழுத முடியும்.



இதனிடையே, புத்தகங்களில் உள்ள பாடங்களை எளிய முறையில் விளக்குவதற்காக தனியார் சார்பில் கைடுகளும் விற்கப்படுகின்றனர். பல மாணவர்களும் அவற்றை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் அறிவுரைபடி, மாணவர்கள் சில குறிப்பிட்ட கையேடுகளை வாங்கி பயன்படுத்துவதும் வழக்கமாக உள்ளது. அதே சமயத்தில், கைடுகளை படித்தால், பாடத்தினை முழுவதும் படிக்காமல் கேள்வி பதில் மட்டுமே படிக்கும் நிலை உருவாகும் என்பது கல்வியாளர்களின் வாதமாக உள்ளது. எனவே, பாடப் புத்தகத்தை முழுமையாக நடத்த வேண்டும் என பள்ளிக் கல்விதுறையும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.


இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்களுக்கு தனியார் கையேடு மூலம் ஆங்கில ஆசிரியர் ஒருவர், பாடம் நடத்தியது தெரிய வந்தது, மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடமும், அந்த ஆசிரியரிடமும் முதன்மைக் கல்வி அலுவலர் விளக்கம் கேட்டுள்ளார்.



ஆனால், முறையான பதில் கிடைக்காததால், முதன்மை கல்வி அலுவலர் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட ஆசிரியைருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில், “தென்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 8-ம் தேதி அன்று மாலை சிறப்பு வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது. முதன்மைக் கல்வி அலுவலர் பார்வையிட சென்றார்.


அப்போது 11 ஆம் வகுப்பு மாணவர்கள், ஆங்கில பாடப் புத்தகம் அல்லாமல், தனியார் கையேடுகளை வைத்திருந்தனர். இதைப் பார்த்த முதன்மைக் கல்வி அலுவலர், மாணவர்களிடம் இது குறித்து விசாரித்த போது தாங்கள் இதை மட்டுமே பின்பற்றி படித்து வருவதாக கூறினர். மேலும், பள்ளி பாடவேளைகளிலும் தனியார் கைடு மூலம் மட்டுமே பாடம் எடுக்கப்படுவதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.



இது பற்றி ஆசிரியரிடம் விசாரித்த போது, உயர் அலுவலரிடம் ஆசிரியர் முறையற்ற வார்த்தைகளையும், குரலை உயர்த்தியும் பேசி அவமதித்தார். மேலும், அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் நான்கு பாடவேளையில் பாடப் புத்தகத்தை வைத்து முழுமையாக மாணவர்களுக்கு பாடம் எடுக்க இயலாது. எனவே தான், தனியார் மூலம் தயாரித்த கையேடுகளை வைத்து மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறேன்" என்றும் கூறினார்.


ஆசிரியரின் செயல், அரசின் பாடத் திட்டத்தையும், பள்ளியில் ஒதுக்கப்படும் பாடவேளைகளையும் அவமதிப்பதாக உள்ளது. இது முற்றிலும் அரசுக்கு எதிராக செயல்படும் நோக்கமாக கருதப்படுகிறது. எனவே, அதற்கு உண்டான விளக்கத்தை ஆசிரியர் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு விளக்கம் அளிக்க தவறினால், ’ஆசிரியர் விளக்கம் அளிக்க ஏதும் இல்லை’ என கருதி, அவர் மீது தமிழ்நாடு குடிமைப்பணி விதிகளின்படி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள் பரிந்துரை செய்யப்படும்” என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent