''ஆவியில் வேக வைப்பதால், கொழுக் கட்டை எளிதில் ஜீரணமாகும்.
விநாயகர் அருளால் உங்கள் இல்லத்தில் எல்லா வளமும் நிறைந் திருக்கட்டும்'' என்று மனமார வாழ்த்தும் சீதாவின் ரெசிபிகளை, உள்ளத்தை கொள்ளை கொள்ளும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.
புரோட்டீன் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், சோயா பீன்ஸ் - அரை கப், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சோயா பீன்ஸை ஊற வைத்து, ரவை போல கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், சிறிதளவு உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து இதனுடன் கலக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, பெருங்காயத்தூள் சேர்க்கவும். அத்துடன் அரைத்த சோயா பீன்ஸ் விழுது சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாகும் வரை கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - 30 வகை கொழுக்கட்டை
கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு உப்பு, ஒரு டீஸ் பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவில் எலுமிச்சம் பழ அளவு எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் சோயா பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புரோட்டீன் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: சத்தான, புதுமையான இந்தக் கொழுகட்டை, எல்லோருக்கும் ஏற்றது. எளிதில் ஜீரணம் ஆகக் கூடியது.
பீட்ரூட் கொழுக்கட்டை
தேவையானவை: பீட்ரூட் துருவல், அரிசி மாவு - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10.
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டவும். அரிசி மாவுடன் பீட்ரூட் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு, நெய் விட்டு கலந்து... வடிகட்டிய வெல்லக் கரைசலை அதில் விட்டு, கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கலவையில் சிறிது சிறிதாக எடுத்து உருட்டி, லேசாக தட்டி, ஆவியில் வேக வைத்து எடுக் கவும். மேலே முந்திரிப்பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.
ஹெர்பல் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி மாவு - ஒரு கப், கொத்தமல்லி இலை - ஒரு கப், புதினா - கால் கப், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதில் எலுமிச்சைச் சாறு விட்டு கலக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு உப்பு, சிறிதளவு எண்ணெய், அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் (ஒரு கொதி போதுமானது). இதில் பச்சரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு கலவையில் சிறிது எடுத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஹெர்பல் கொழுக்கட்டை தயார்.
குறிப்பு: இது, நல்ல வாசனை யாகவும் ருசியாகவும் இருக்கும். பித்தத்தை தணிக்கும். பசியைத் தூண்டக்கூடியது.
பஞ்சரத்ன கொழுக்கட்டை
தேவையானவை: இட்லி அரிசி, துவரம்பருப்பு, பயத்தம்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 6, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி - கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பருப்புகளை சுத்தம் செய்து ஒன்றாக சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய், உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு கலக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி விட்டு, அரைத்து எடுத்த கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி வைக்கவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, பெருங்காயம் தாளித்து, வேக வைத்த உருண்டைகளைப் போட்டு கலந்து எடுக்கவும்.
காரடையான் நோன்பு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், காராமணி - கால் கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், தேங்காய் துண்டுகள் - 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - அரை டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: காராமணியை வெறும் கடாயில் வறுத்து வேகவிட்டு எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்து, மீண்டும் கொதிக்கவிடவும். இத்துடன் வேக வைத்த காராமணி, தேங்காய் துண்டுகள், உப்பு, ஏலக்காய்த் தூள், நெய் கலந்து... கொதிக்கும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் ஈர கையினால் கலவையை நன்கு பிசைந்து கலக்கவும். சிறிதளவு கலவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள ஃப்ரெஷ் வெண்ணெய் ஒரு டீஸ்பூன் வைத்து பரிமாறவும்.
ஏகாதசி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி ரவை, தேங்காய் துருவல் - தலா ஒரு கப், வெல்லத்தூள் - கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். உடனே அரிசி ரவையைப் போட்டு கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி ரவை கலவையில் இருந்து சிறிய கமலா ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டி, நடுவில் குழி செய்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் கலவை வைத்து மூடி, வட்டமாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: நம் முன்னோர்கள் ஏகாதசிக்கு இதை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதனால்தான் இந்தப் பெயர்!
சேமியா கொழுக்கட்டை
தேவையானவை: சேமியா - 200 கிராம், தேங்காய் - ஒன்று (துருவிக் கொள்ளவும்), காய்ச்சிய பால் - 2 கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது), கடுகு, சீரகம், எள் - தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சேமியாவை வறுத்து, பாலில் 30 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், நறுக்கிய பச்சை மிள காய் ஆகியவற்றை வதக்கவும். தேங்காய் துருவல் சேர்த்து, தீயை நிறுத்திவிட்டு கலக்கவும். பாலில் ஊறிய சேமியா, உப்பு, அரிசி மாவு, எள்ளு, சீரகம் ஆகிய வற்றையும் அதில் கலக்கவும். கையினால் நன்கு மசித்து கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
பாஸ்தா மசாலா கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தக்காளி - 2, வெங்காயம், குடமிளகாய், கேரட் - தலா ஒன்று, பாஸ்தா (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாஸ்தாவில் கொதிநீர் விட்டு 10 நிமிடம் ஊற வைத்து எடுக்கவும். அரிசி மாவை வெறும் கடாயில் வறுத்து... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கலந்து, தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அரிசி மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், கேரட் துண்டுகள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, தண்ணீர் தெளித்து வேக வைக்கவும். வெந்து சேர்ந்தாற்போல் வந்ததும், பாஸ்தாவை அதில் சேர்த்து கலந்துவிடவும். ஆவியில் வேக வைத்த அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து, லேசாக கலக்கவும். நிறைவாக, தக்காளி சாஸ், புதினா, கொத்தமல்லி தூவி கலக்கினால்... பாஸ்தா மசாலா கொழுக்கட்டை தயார்
சேவரி கொழுக்கட்டை
தேவையானவை: மிச்சமாகிப் போன சேவரி (ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி போன்றவை) - ஒரு கப், அரிசி மாவு - ஒரு கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றரை கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மிச்சமாகிப் போன ஓமப்பொடி, தேன்குழல், காராசேவு, காராபூந்தி எதுவாகிலும் ஒன்றாகக் கலந்து, மிக்ஸியில் கொரகொரப்பாக தூள் செய்யவும். இதனுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்தால்... பூரணம் தயார். கடாயில் தண் ணீர், உப்பு, எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கிளறி எடுத்து ஆறவிடவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழி செய்து, பூரணம் ஒரு டீஸ்பூன் அளவு வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதை நினைத்த நேரத்தில் செய்து அசத்தலாம்.
டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10, திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு... அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு. முந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸி யில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால்... பூரணம் தயார். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில் வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: திராட்சை, பேரீச்சம்பழத்தை வெந்நீரில் ஊற வைத்தும் அரைத்து எடுக்கலாம்.
ராகி கொழுக்கட்டை
தேவையானவை: ராகி (கேழ்வரகு) மாவு - 2 கப், அரிசி மாவு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் கடாயில் சூடுபட வறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு புரட்டவும். உப்பு சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, கொதி வந்தவுடன் மாவு தூவி கிளறவும். கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். ஈரக் கையினால் கலவையில் சிறிதளவு எடுத்து உருட்டி லேசாக தட்டி வைக்கவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு: இது எல்லோருக்கும் ஏற்றது. சுகர் பிராப்ளம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
மின்ட் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, புதினா - தலா அரை கப், பச்சை மிளகாய் - 4, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை, புதினா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து, உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு... உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலந்து கொதிக்கவிடவும். கொதி வந்ததும் அரைத்து வைத்த விழுதை போட்டு கலக்கவும். உடன் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறுசிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
சோயா சங்ஸ் ஸ்வீட் கொழுக்கட்டை
தேவையானவை: சோயா சங்ஸ் (பெரிய மளிகைக் கடைகளில் கிடைக்கும்) - 20 அல்லது 25, பொடித்த வெல்லம் - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பச்சரிசி மாவு - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: சோயா சங்ஸை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து உதிர்த்து துளாக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல் லத்தை கரையவிட்டு வடிகட்டி, பச்சை வாசனை போக கொதிக்கவிடவும். தூளாக்கிய சோயா சங்ஸை இதில் போட்டு, ஏலக்காய்த்தூள் கலந்து, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம்.
கடாயில் தண்ணீர் விட்டு, உப்பு, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். இதில் பச்சரிசி மாவைத் தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கட்டி இல்லாது பிசைந்து கொள்ளவும். மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, தேவையான அளவு சோயா சங்ஸ் பூரணம் வைத்து மூடவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கம்பு இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - 2 டீஸ்பூன், கம்பு மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - முக்கால் கப்.
செய்முறை: அரிசி மாவு, கம்பு மாவை வெறும் கடாயில் சேர்த்து சூடுபட வறுத்து, கலந்து எடுத்து வைக்கவும். வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். மாவுக் கலவையில் ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கலக்கவும். இதில் வெல்லக் கரைசலை விட்டுக் கலந்து, சப்பாத்தி மாவு போல பிசையவும். கலவையில் சிறிது எடுத்து நீளவாட்டில் உருட்டவும். தயாரித்தவற்றை ஆவியில் வேக வைத்து எடுக் கவும்.
கேபேஜ் கொழுக்கட்டை
தேவையானவை: முட்டைகோஸ் துருவல் - 2 கப், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 2 கப், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு வறுத்து எடுக்கவும். அதே கடாயில் முட்டைகோஸ் துருவலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். ஆறியதும் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு, புளி, உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். தண்ணீரை கொதிக்க வைத்து... உப்பு சேர்த்து, எண்ணெய் விட்டு, இதில் அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவில் சிறிது எடுத்து உருட்டி தட்டையாக செய்து, அதில் 2 டீஸ்பூன் அளவு முட்டைகோஸ் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
உசிலி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், கடுகு - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவை வெறும் கடாயில் வறுக்கவும். உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கலக்கவும். சுடுநீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீர் வடித்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு, சிறிதளவு உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள் தாளிக்கவும். இஞ்சித் துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை போட்டு கிளறவும். அதனுடன் அரைத்த உளுத்தம்பருப்பு விழுதை சேர்த்துக் கிளறவும். வெந்து உதிரியாக வந்ததும், வேக வைத்த கொழுக்கடைகளை சேர்க்கவும். லேசாக கலந்து இறக்கவும்.
ஸ்பிரவுட் கொழுக்கட்டை
தேவையானவை: முளைகட்டிய பயறு - ஒரு கப், பச்சை மிளகாய் - 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், அரிசி மாவு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும். பயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும். கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி... உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.
மணி பேக் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பட்டாணி, வெல்லம் - தலா அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஏலக்காய்த் தூள் - அரை டீஸ்பூன், எண் ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: பட்டாணியை முதல் நாளே ஊற வைத்து, அடுத்த நாள் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் விட்டு... உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி, கட்டி இல்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி, வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். அதில் பட்டாணி விழுது, தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அடிபிடிக்காமல் கிளறி எடுக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி மாவு கலவையில் இருந்து சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, அதனுள் பூரணத்தை கொஞ்சம் வைத்து, பை போல் சுருக்கி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சுருக்குப் பை வடிவத்தில், பார்க்க அழகாக இருக்கும் இது, சுவையிலும் சூப்பர்தான்!
முத்து கொழுக்கட்டை
தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், மைதா - 2 டீஸ்பூன், இஞ்சி - பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை தேவையான அளவு சுடுநீர் விட்டு 2 மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் அழுத்தி பிசையவும். அத்துடன் மைதா, உப்பு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து... கறிவேப்பிலை, கொத்தமல்லி கிள்ளி போட்டு, மிளகாய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்து, எண்ணெய் விட்டுக் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக தயார் செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்.... முத்து கொழுக்கட்டை தயார்.
பூந்தி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், இனிப்பு பூந்தி - ஒரு கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் ஒன்றரை கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கெட்டியாக கிளறி எடுக்கவும். ஆறியதும், கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து உருட்டி கிண்ணம் போல செய்து, அதனுள் 2 டீஸ்பூன் அளவு பூந்தி வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். தயாரித்த வற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கருப்பட்டி கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கருப்பட்டி - அரை கப், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டீஸ் பூன், தண்ணீர் - ஒன்றே கால் கப், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு... உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும். கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
வெஜிடபிள் கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், கொத்தமல்லி இலை - கால் கப், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தேவையான அளவு தண்ணீர் விட்டு.. சிறிதளவு உப்பு சேர்த்து, கொஞ்சம் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும். அதில் அரிசி மாவு தூவி கட்டி இல்லாது கெட்டியாக கிளறி எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, சூடானதும் முட்டைகோஸ், கேரட் துருவல், கொத்தமல்லி இலை, இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து சுருள கிளறவும். மிளகுத்தூள் கலந்து இறக்கவும். இதுதான் பூரணம். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு அரிசி மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து அதில் பூரணம் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
தினை மாவு பனைவெல்ல கொழுக்கட்டை
தேவையானவை: தினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் - தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் - அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை மாவை வெறும் கடாயில் வறுத்து... உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும். பனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கார கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, இட்லி மிளகாய்ப் பொடி, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர் விட்டு, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து, அடுப்பில் வைக்கவும். கொதி வந்ததும் கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். தேங்காய் துருவல், இட்லி மிளகாய்ப் பொடி, அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறவும். தீயை நிறுத்திவிட்டு, ஆறவிடவும். கையில் எண்ணெயை தடவிக் கொண்டு, பெரிய நெல்லிக்காய் அளவு அரிசி மாவு கலவை எடுத்து உருட்டி தயார் செய்யவும். அவற்றை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இஞ்சி இனிப்பு கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், நறுக்கிய இஞ்சி, பொடித்த வெல்லம் - தலா அரை கப், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். கடாயில் நீர் விட்டு சூடாக்கி வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி எடுக்கவும். இஞ்சித் துண்டுகள், பொட்டுக்கடலையை சேர்த்து அரைத்து, வெல்லக் கரைசலில் சேர்த்து, நெய் விட்டு பூரணமாக கிளறி எடுக்கவும். அரிசி மாவு கலவையில் கொஞ்சம் எடுத்து உருட்டி, குழி செய்து, சிறிது இஞ்சி பூரணம் வைத்து மூடி உருட்டி, லேசாக அழுத்தவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
கம்பு மசாலா கொழுக்கட்டை
தேவையானவை: கம்பு மாவு - ஒரு கப், வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒன்று, வெங்காயம் - ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - ஒன்றே கால் கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது கம்பு மாவை சேர்த்து, கட்டி இல்லாமல் கிளறி எடுத்து வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும். இத்துடன் வெங்காய துண்டுகள், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு கலந்து பிசைந்து சிறு உருண்டைகள் செய்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, கம்பு மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி குழித்து, மசாலா கலவை உருண்டையை அதில் வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
கோதுமை மாவு கொழுக்கட்டை
தேவையானவை: கோதுமை மாவு - அரை கப், தேங்காய் துருவல் - 2 கப், வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் உப்பு சேர்த்துக் கலக்கி, தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல கெட்டியாக பிசையவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு... தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும். பிசைந்து வைத்த கோதுமை மாவில் சிறிது எடுத்து உருட்டி கிண்ணம் போல் செய்து, பூரணம் கொஞ்சம் வைத்து மூடி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும். சூடான எண்ணெயில் 4, 5 கொழுக்கட்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: ஹோமம் செய்யும் நாளில் இதனை தயாரிப்பது வழக்கம்.
கோசுமல்லி கொழுக்கட்டை
தேவையானவை: மைதா - ஒரு கப், பாசிப்பருப்பு, கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை - தலா 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மைதா மாவில் உப்பு, எண்ணெய் விட்டு கலந்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடித்து எடுக்கவும். இத்துடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். மைதா மாவில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து, சப்பாத்தி போல இட்டு, அதனுள் ஒரு டீஸ்பூன் அளவு பருப்பு - காய் கலவை வைத்து மூடி ஒட்டிவிடவும். அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
உண்டிலி பாயச கொழுக்கட்டை
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், வெல்லம் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், சாரைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பால் - 500 மில்லி, உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, சிட்டிகை உப்பு போட்டு கலக்கவும். அதில் கொதி நீர் விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, மணி மணியாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து, பாலில் கலந்து கொதிக்கவிடவும். பால் கலவை பாதியாக குறுகியதும், ஒரு டீஸ்பூன் நெய்யில் சாரைப்பருப்பை வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். உருட்டி, வேக வைத்த கொழுக்கட்டைகளை, பால் கலவை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கவும்.
டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை
தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், பேரீச்சம்பழம் - 10 (விதை நீக்கவும்), பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், வெல்லம் - பெரிய எலுமிச்சம் பழ அளவு, அரிசி மாவு - ஒரு கப், நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: ஓட்ஸ், பொட்டுக்கடலையை மிக்ஸியில் தூளாக்கவும்.. கடாயில் வெல்லம், தண்ணீர் சேர்த்து சூடாக்கி... வெல்லத்தை கரைய விட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து, ஓட்ஸ் - பொட்டுக்கடலை பொடி சேர்த்து கெட்டியாக கிளறி எடுத்தால்... பூரணம் தயார். பேரீச்சம்பழத்தை நடுவில் நீள வாட்டில் பிளந்து பூரணத்தை ஸ்டப் செய்து கொள்ளவும். கடாயில் தண்ணீர், உப்பு சேர்த்து சுட வைத்து, கொதித்து வரும்போது அரிசி மாவை தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். பெரிய நெல்லிக்காய் அளவு மாவுக் கலவை எடுத்து, உருட்டி குழி செய்து, அதில் டேட்ஸ் - ஓட்ஸ் பூரணத்தை வைத்து மூடவும் அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... புதுமையான, சத்தான டேட்ஸ் அண்ட் ஓட்ஸ் கொழுக்கட்டை தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக