ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும் பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டு ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவால் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் இனி ராமநாதபுரத்திற்கு அலைந்து திரியும் நிலை ஏற்படுவதால் கால விரயம், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும், என ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலகம் 1976 இல் துவக்கப்பட்டு 45 ஆண்டுகளை கடந்துள்ளது. இங்கு பரமக்குடி, போகலூர், முதுகுளத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகள் இதன் கீழ் இயங்குகின்றன.இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் அதிக பள்ளிகள் இருந்ததால் 2018--19ல் மண்டபம் கல்வி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்டங்களையும் ஒருங்கிணைத்தால் 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒரே மாவட்ட கல்வி அலுவலர் நிர்வகிக்கும் நிலை ஏற்படும்.நிர்வாக காரணங்களுக்காக ஒருங்கிணைக்க அரசு உத்தரவிடும் நிலையில் அலுவலக பணிகளை கையாள்வதில் சிக்கல் ஏற்படும். மேலும் கமுதி, சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், பார்த்திபனூர் என கடை கோடியில் உள்ள அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் இல்லை.
இதனால் ஒவ்வொரு முறையும் மாவட்ட கல்வி அலுவலர் கேட்கும் ஆவணங்களை கொண்டு செல்ல தலைமை ஆசிரியரே நேரடியாக ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். மேலும் பள்ளி தேர்வுகள், அரசு பொது தேர்வுகளின் போது வினாத்தாள்கள் பெறுவதில் தொடங்கி அனைத்திற்கும் இக்கட்டான நிலை ஏற்படும்.ஒரே அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளம் முதல், பணி பதிவேடுகளை கையாள்வதிலும் காலதாமதம் ஏற்படும். முக்கியமாக தனித் தேர்வர்கள் தொலைதூரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்ல நேரிடும் என்பதால் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அரசின் உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க இணை செயலாளர் நுாருல் அமீன் கூறுகையில், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள நீராவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் அலுவலர்கள் 100 கி.மீ.,க்கு மேல் ராமநாதபுரம் செல்லும் நிலை ஏற்படும். இதனால் கால விரயம் ஏற்படும். வழக்கம் போல் பரமக்குடியில் கல்வி மாவட்ட அலுவலகம் செயல்பட வேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக