தமிழகத்தில் தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டதை நாம் நன்கறிவோம். மேலும், இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று வானிலையாளர்கள் கணித்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு கல்வியாண்டில் பள்ளி வேலைநாள்கள் முழுமையாக இருந்தால்கூட அனைத்துப் பாடப்பகுதிகளையும் நிறைவாக நடத்தி முடிக்க இயலாத நிலையிலேயே இன்றைய பாடத்திட்டங்கள் பெரும்பாலும் உள்ளன.
உயர்தரமான, உலகத் தரமான கல்வி என்று உரக்கக் கூவி பாடச்சுமையைக் கிராமப்புற, மிகவும் பின்தங்கிய, கற்றல் குறைபாடுகள் மிகுந்த, எழுதப் படிக்கவே தெரியாத மாணவர்களைப் புறந்தள்ளி, வெகுவாக அதிகரித்ததன் விளைவு ஆசிரியர்களும் மாணவர்களும் போதிய குறைந்தபட்ச கற்றல் இலக்குகளை அடைய முடியாமல் ஒருசேர மாணவர்களுடன் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழலில், தீவிர பருவ மழைக்கால விடுமுறைகள் மாவட்ட நிர்வாகத்தின்மூலம் அறிவிக்கப்படுவது ஒருபுறம் என்றால் மாணவர்கள் தினசரி வருகையை மழை பாதிப்பது மறுபுறமாக இருக்கிறது.
சரியாக சொல்ல வேண்டுமேயானால், ஒவ்வொரு கல்வியாண்டிலும் இரண்டாம் பருவ காலமென்பது பருவமழைக் காலமாக இருந்து வருகிறது. இக்காலகட்டத்தில், கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் பெரும்பாலும் முழு அளவில் திருப்திகரமாக நடைபெறுவதென்பது முயற்கொம்பேயாகும்.
இந்த இயற்கை பேரிடர் நிலையில் தொடக்கக்கல்வித்துறையின் கீழுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்தாம் இந்த வடகிழக்குப் பருவமழை காலத்தில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றன. குறிப்பாக, பொதுத்தேர்வுகள் எழுதவிருக்கும் உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் மழைக் காலங்களில் அடையும் சிரமங்கள் கணக்கிலடங்கா. ஒழுங்காக வகுப்பிற்கு வர முடியாமல் படிப்பும் கெட்டு கொட்டும் மழையில் வேறு வழியின்றி நனைந்து உடல்நலனும் கெட்டு இன்னலுக்கு ஆளாகும் சூழ்நிலையை எளிதில் கடந்து விட முடியாது.
தமிழகக் குடும்பங்களில் காணப்படும் ஏழ்மையும் வறுமையும் அறியாமையும் பள்ளிப் பிள்ளைகளைப் படிக்க விடாமல் தொடர்ந்து பின்னோக்கி இழுத்து வந்தாலும் அரசின் பல்வேறு மாணவர் நலன் முன்னெடுப்புகளால் இந்திய ஒன்றிய அளவில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க இடத்தில் கல்வியில் புள்ளி விவர ஆய்வு முடிவுகள் அடிப்படையில் முன்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது.
இதில் பருவ மழைக்காலம் என்பது மிக மோசமானதும் தவிர்க்க முடியாததும் கூ. இக்காலகட்டத்தில் மாணவர் தினசரி வருகைப் பதிவானது பெரிய வீழ்ச்சியைக் காண்பதாக உள்ளது.
குறிப்பாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு, விளிம்பு நிலைக் குழந்தைகள் மழைக்காலத்தில் வறுமை மற்றும் ஏழ்மை காரணமாகப் பள்ளி வருவது பேரிடராக இருப்பது உண்மை. பெய்யும் மழையிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள போதிய மழைப் பாதுகாப்புப் பொருள்களான குடைகள் மற்றும் கவச உடைகள் மாணவர்கள் வீடுகளில் இல்லாத நிலையே அதிகமுள்ளது.
கிழிந்த, உடைந்த குடைகளில் தம்பி தங்கைகளோடு முக்கால்வாசி நனைந்த நிலையிலேயே பள்ளி வரும் அவலநிலை பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காணக்கூடியதாக உள்ளது.
இதுதவிர, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பழைய நெகிழிக் கோணிப்பையைத் தலையில் கவிழ்த்துவரும் கொடுமையும் அரங்கேறி வருவது பரிதாபத்திற்குரியது. மேலும், மழைக்காலத் தொற்று மற்றும் இதர நோய்கள் தாக்கப்படுவதும் அவதியுறுவதும் அதன் காரணமாகப் படிப்புப் பாதிப்பதும் நடப்பாக இருப்பது கவலைக்குரிய ஒன்றாகும்.
இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் 14 வகையான இலவச கல்வி சார்ந்த பொருள்களுடன் கூடுதலாக, கல்வி நலன் மற்றும் உடல் நலன் பேணுதல் பொருட்டு நல்ல, தரமான மழைக் கவச உடைகளை (Rain Coats) அவசர அவசியம் கருதி உடன் வழங்கிட தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் இன்றியமையாதது ஆகும். பள்ளிக்கல்வித்துறை செவிமடுக்குமா?
எழுத்தாளர் மணி கணேசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக