தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்திய பின்னரே, முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும் என அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:
தலைமை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் நேற்று முதல் நடந்து வருகிறது. பொதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடந்து முடிந்த பிறகு, முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடக்கும்.
இந்தாண்டு முதுகலை ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்காமல் பணியிட மாறுதல் கவுன்சிலிங் மட்டும் நடத்தப்படுவது சிக்கல்களை ஏற்படுத்தும். தற்போதைய நிலையில், 427 தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக, நேற்று நடத்த உள் மாவட்ட தலைமை ஆசிரியர் பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்த பின் தகவல் கிடைத்துள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கு, முதுகலை ஆசிரியர் பணி நிலையிலிருந்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டும். அப்போது, முதுகலை ஆசிரியர்களுக்கு நடக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கூடுதல் காலி பணியிடங்கள் கிடைக்கும்.
அதனால் பல ஆசிரியர்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மாறாக தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்காமல், முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தினால், தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களையும், முதுகலை ஆசிரியர்களே கூடுதல் பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டி இருக்கிறது.
தலைமை ஆசிரியர் இல்லாமல் பள்ளியை நிர்வாகம் செய்வது சிக்கலான சூழ்நிலையை உருவாக்கும். இதை, கவனத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடமாறுதல் கவுன்சிலிங் முடிந்தவுடன், முதுகலை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன் பின், முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக