பள்ளிகளின் தரத்தினை உயர்த்திடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய வகையில் பாராட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதேநேரத்தில் சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் கற்றல் இடைவெளியை கண்டறிய மாநில கற்றல் அடைவு ஆய்வு (எஸ்.எல்.ஏ.எஸ்.) நடத்தப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட மாநில அடைவு ஆய்வு முடிவுகள் கல்வியியல் மேலாண்மை தகவல் அமைப்பில் (எமிஸ்) பதிவேற்றம் செய்யப்பட்டது.
இந்த முடிவுகளின் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் சில அறிவுரைகளை பின்பற்றிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது. அதன் விவரங்களை பார்ப்போம்.
* மாநில கற்றல் அடைவு ஆய்வில் அந்தந்த பள்ளி பெற்ற தரநிலையை பள்ளியில் அனைவரும் பார்க்கும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம் பெற செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவரின் தரநிலை குறித்து நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
* தரநிலையில் பின்தங்கி உள்ள பள்ளிகள் முன்னேற்றம் அடைய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பதை செயல்திட்டமாக எடுத்து கொண்டு தொடர்ந்து வரும் நாட்களில் கற்றல்-கற்பித்தல் செயல்பாடு அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* தலை சிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம் பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.
* கற்றலில் பின்தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களின் முன்னேற்றத்துக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளின் தரத்தினை உயர்த்திடும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய வகையில் பாராட்டப்படுவதை உறுதி செய்யவேண்டும். அதேநேரத்தில் சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
* கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள், ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக