மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வாரத்தில் 3 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவில் மாநில கற்றல் அடைவுத்திறன் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், மாநில அடைவு திறன் தேர்வின் அடிப்படையில் கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது;
'' அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய 2025 பிப்ரவரி 4, 5 மற்றும் 6ஆம் தேதிகளில் மாநில அடைவு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வினை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் 38,670 மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு நடத்தப்பட்டது.
மாநில அடைவு ஆய்வின் முடிவுகள் கல்வியியல் மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாநில அடைவு ஆய்வின் முடிவுகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும், தங்கள் நிர்வாக எல்லைக்குள் அமைந்த பள்ளிகளின் தரநிலை ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் ஒப்பீடு செய்யப்பட்ட விவரங்களுடன் எளிதில் இனம் காணும் வகையில் ஆய்வுகளின் முடிவுகள் தொடர்புபடுத்தப்பட்டு உள்ளன. ஆய்வு முடிவுகளை கல்வித்துறை அலுவலர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் செய்ய வேண்டியவை
- ஒவ்வொரு பள்ளியிலும் மாநில அடைவு ஆய்வில் அப்பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய அளவில் (எ.கா 5/60), மாவட்ட அளவில் (எ.கா 39/480), மாநில அளவில் (எ.கா 721/25320) எந்த தரவரிசையில் உள்ளது என்ற விவரத்தினை பெற்றோர்கள், கல்வி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பார்வைக்கு எளிதில் தெரியும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு மாணவனின் தர நிலை குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்பிற்கு எந்த தரநிலையில் உள்ளது? என்ற விவரத்தினை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- தர நிலையில் பின்தங்கி உள்ள பள்ளிகள் முன்னேற்றம் அடைய எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? என்பதை செயல் திட்டமாக எடுத்து கொண்டு தொடர்ந்து வரும் நாட்களில் கற்றல் கற்பித்தல் செயல்பாடு அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- தாங்கள் பணிபுரியும் பள்ளியானது மாவட்டத்தில் தலைசிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும்.
- கற்றலில் பின்னடைவு உடைய மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் எடுத்திடல் வேண்டும்.
- ஒவ்வொரு வாரமும் வகுப்புவாரியாக மாணவர்களின் முன்னேற்ற நிலையினை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து தேவையான பதிவுகளை குறித்துக் கொண்டு தொடர் கண்காணித்தலை தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வர வேண்டும்.
- பெற்றோர் கூட்டங்கள், ஆசிரியர் கூட்டங்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல் மாணவர்களின் உண்மையான வளர்ச்சிக்கும் பள்ளியை மாவட்டத்தின் சிறந்த பள்ளியாகமாற்றுவதற்கும் செயல்திட்டம் வகுத்து செயல்படுத்தப்படும் நிலையினை உடையதாக இருத்தல் வேண்டும்.
- முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்று வருகின்றது? என்பதை வாரத்தில் 3 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்று? வருகின்றது என்பதை வாரத்தில் 4 நாட்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும்.
- அடிப்படை நிலை, எளிய நிலை வினாக்கள், பயன்பாட்டுத் திறன் வினாக்கள், உயர் சிந்தனை வினாக்கள் மற்றும் அன்றாட வாழ்வில் இடம்பெறும் வகையிலான வினாக்களுக்கு மாணவர்கள் எத்தகைய பதில் விவரங்களை அளிக்கின்றனர்? என்ற வகையில் உரிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்'' உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக