இந்த வலைப்பதிவில் தேடு

TET பணி சான்றிதழ் வழங்குவதில் குழப்பம் - அதிருப்தியில் ஆசிரியர்கள்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி சான்றிதழ் வழங்க பணிப்பதிவேடு ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஆசிரியர்கள் ஏற்கனவே எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆவணங்களை வைத்து சான்றிதழ் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பணியை தொடரவும், பதவி உயர்வுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 


இதையடுத்து சிறப்பு டெட் தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏப்.,10 கடைசி நாள். விண்ணப்பத்துடன் பணி சான்றிதழ் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. பணி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் டி.ஆர்.பி., இணையதளத்தில் உள்ளது. 


இதை பூர்த்தி செய்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் கையொப்பத்துடன் பதிவேற்ற வேண்டும். படிவத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், கல்வித்தகுதி, தற்போது வகிக்கும் பதவி, பள்ளி விபரங்கள் கோரப்பட்டுள்ளன. 


இத்தகவல் ஏற்கனவே ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ளது. இப்பதிவேடு வட்டார கல்வி அலுவலகம், பள்ளி தலைமையாசிரியர் மூலம் பராமரிக்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான எமிஸ் இணையதளத்திலும் உள்ளது. 


இந்த ஆவணங்களை நகலெடுத்து பணி சான்றிதழ் படிவத்துடன் இணைத்து அனுப்புமாறு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 


ஆசிரியர்கள் கூறியதாவது: 


பணிப்பதிவேடு, எமிஸ் இணையதளத்தில் ஆசிரியர்களின் அனைத்து விபரங்களுடனான அசல் சான்றிதழ் உள்ளது. இதை பார்வையிட்டு பணி சான்றிதழ் வழங்கலாம். 


இதை செய்யாததால் ஒவ்வொருவரும் 50 பக்க நகல் எடுத்து சமர்பிக்க வேண்டியுள்ளது. ஒரு சான்றிதழ் வழங்க பல ஆவணங்களின் நகல்களை கேட்பது ஆசிரியர்களுக்கும், சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவோருக்கும் பணிச்சுமையை ஏற்படுத்தும். அதிகாரிகள் குழப்பம் ஏற்படுத்தாமல் எமிஸ் இணையதளத்தில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பணி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent