பள்ளி மாணவ - மாணவியரின் ஆதார் விபரங்கள் 'அப்டேட்' செய்யப்படாமல் இருப்பதால், கல்வி உதவித்தொகை மற்றும் பிற சலுகைகள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 140 பள்ளிகள் உள்ளன. ஐந்து முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவ -- மாணவியர், தங்கள் ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். நீட், ஜே.இ.இ., - கியூட் போன்ற நுழைவுத் தேர்வுகள் எழுதவும், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறவும் ஆதார் எண் மிகவும் அவசியம்.
திருவாலங்காடு ஒன்றியத்தில், தற்போது சில மாணவர்களின் ஆதார் விபரங்கள் 'அப்டேட்' செய்யப்பட்டுள்ளன. ஏராளமான மாணவர்களின் ஆதார் விபரங்கள் சரியாக 'அப்டேட்' செய்யப்படவில்லை.
இதுகுறித்து, திருவாலங்காடைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
மாணவர்களின் ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளை இ - -சேவை மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த மையங்களுக்கு மாணவர்களை அழைத்து கொண்டு பெற்றோர் அலைய வேண்டியுள்ளது.
பள்ளி விடுமுறை நாட்களில் ஆதார் மையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் விபரங்களை 'அப்டேட்' செய்ய முடியாமல் பெற்றோர் மற்றும் மாணவ - மாணவியர் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக, மாணவர்களுக்கான உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, ஆதார் 'அப்டேட்' செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி, உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக