அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்., மாத ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறை கட்டுப்பாட்டில், 8,197 அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், 74 ஆயிரத்து 364 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம், மாதாந்திர ஊதிய பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் 15ம் தேதிக்குள், பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது ஆசிரியர்களின் வருகை மற்றும் விடுப்பு விபரங்கள் அடிப்படையில், மாதாந்திர ஊதிய பட்டியல், களஞ்சியம் இணையதளம் வழியே தயார் செய்யப்படுகிறது.
அந்த பட்டியல், வட்டாரக் கல்வி அலுவலர் அல்லது மாவட்ட கல்வி அலுவலர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். பின், அந்த பட்டியல் களஞ்சியம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
அதன்பின், ஊதிய பட்டியல் மாவட்டக் கருவூலம் அல்லது சார்- கருவூலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து மின்னணு நிதி பரிமாற்றம் வழியே, நேரடியாக ஆசிரியர்களின் வங்கி கணக்கில், ஊதியம் வரவு வைக்கப்படும்.
இம்மாதம், சம்பள பட்டியல் தயாரிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. களஞ்சியம் இணைய தளம் வழியே, சம்பள பட்டியல் தயாரிக்க முயன்றால், தடை ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் மாதத்திற்கான மானியத்தை விடுவிக்காததால், 18ம் தேதி முடிந்தும் பட்டியல் தயாரிக்க முடியவில்லை. இதனால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, செப்டம்பர் மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக