இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு EMIS முலம் பணியிட மாற்றம் - பள்ளிக்கல்வித்துறை

திங்கள், 21 செப்டம்பர், 2026



 
ஆசிரியர் அல்லாத பணியாளர் விவரங்களை வரும் 25ஆம் தேதிக்குள் EMIS (எமிஸ்) இணையதளத்தில் ஏற்றவும், தரவுகளை சரிபார்க்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் அல்லாத அலுவலக பணியாளர்கள் ஒரே அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரியும்போது பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும், ஆசிரியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட பண பலன்கள் வழங்குவதற்கும் சில அலுவலர்கள் காலதாமதம் செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே, ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பணிபுரியும் பணியாளார்களை பணியிட மாற்றம் செய்வதற்கு ஏதுவாக அலுவலர்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் லதா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில், ஒரே பணியிடத்தில் பணிபுரிந்துவரும் அலுவலகப் பணியாளர்களுக்கு கட்டாய மாறுதலும், அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் ஆகியவை நடத்தப்பட்டு வந்தது.

தற்போது அனைத்து அலுவலகப் பணியாளர்களுக்கான கட்டாய மாறுதல், விருப்ப மாறுதல், மாவட்ட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் ஆகிய அனைத்தும் கல்வித் தகவல் மேலாண்மை இணையதளம் மூலமாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அலுவலகப் பணியாளர்களின் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் ஆய்வு செய்ததில், தற்போது பணிபுரிந்து வரும் பதவி வாரியான அலுவலகப் பணியாளர்களின் எண்ணிக்கைக்கும், பள்ளிக்கல்வித்துறையின் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பதவி வாரியான அலுவலக பணியாளர்களின் எண்ணிக்கைக்கும் அதிக அளவில் (Shortfall entries) வேறுபாடுகள் உள்ளன.

எமிஸ் இணையதளம்

எனவே, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி எமிஸ் இணையதளத்தில் பணியாளர்களின் விவரங்கள் அடங்கிய பதிவுகள் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளவும்.

பணியாளர் சார்ந்த பதிவுகள் எமிஸ் இணையதளத்தில் இல்லையெனில் புதிய உள்ளீடுகள் (Fresh Entries) பதிவுசெய்தல், ஏற்கனவே பணியாற்றிய அலுவலகத்திலிருந்து தற்போது பணிபுரியும் அலுவலகத்திற்கு பணியாளர் சார்ந்த பதிவுகள் மாற்றம் செய்யப்படாத நிலையில் அதனை மாற்றம் செய்தல், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள உள்ளீடுகளில் சரியான திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது மிக மிக அவசியமாகிறது.


இனிவரும் காலங்களில் அலுவலகப் பணியாளர்களின் மாறுதல், பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வுகள் எமிஸ் இணையதளம் வாயிலாகவே நடத்தப்படும் என்பதால் இப்பணியில் கூர்ந்து கவனம் செலுத்தி இப்பணிகளை 25ஆம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும்.

மேலும், தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முதல் இரவுக் காவலர் வரையிலான பணியாளர்கள் எண்ணிக்கையும், எமிஸ் இணையதளத்தில் உள்ள பதிவுகள் எண்ணிக்கையும் சரியாக உள்ளதா என்பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து அனுப்பி வைக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent