மதுரையில் உள்ளாட்சி அமைப்புகளின் 'மவுனம்' காரணமாக அரசு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய சிறப்பு துாய்மைப் பணிகள் கேள்விக்குறியாவதாக தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
மழைக் காலம் துவங்கவுள்ளதால் பள்ளி மாணவர்களை டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொது சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் முதல் வாரம் புதன் தோறும் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பு துாய்மைப் பணி (மிஷன் மோட் மாஸ் கிளீன் அப்) மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சியில் கைவிரிப்பு
இப்பணிகளுக்கு அந்தந்த மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் துாய்மை பணியாளர், நுாறு நாள் திட்டப் பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதியுடன் பயன்படுத்திக்கொள்ளலாம். கலெக்டர்களுக்கும் இதுதொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் துறை செயலாளர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தலைமையாசிரியர்கள் ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களை (பி.டி.ஓ.,) அணுகியபோது 'அதுபோன்ற சுற்றறிக்கை எதுவும் வரவில்லை' என கைவிரிக்கின்றனர். இதனால் சிறப்பு துாய்மைப் பணிக்கான செலவு தலைமையாசிரியர் தலையில் விழுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மழைக்காலம் துவங்கும் நிலையில் பள்ளி மாணவர்களின் உடல்நலம், பாதுகாப்பை உறுதி செய்ய இந்த சிறப்பு துாய்மைப் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணி செய்ய ஒரு பள்ளிக்கு 5 - 10 பணியாளர்கள் தேவை. ஊராட்சி, பி.டி.ஓ., அலுவலகங்களை தொடர்பு கொண்டால் 'இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எங்களுக்கு உத்தரவு வரவில்லை' என்கின்றனர்.
இதனால் சிறப்பு துாய்மை பணி கேள்விக்குறியாகி வருகிறது. ஏற்கனவே பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட துாய்மைப் பணியாளர்களுக்கான 3 மாதம் சம்பளம் பி.டி.ஓ., அலுவலகங்களில் இருந்து இன்னும் வழங்கியபாடில்லை. அவர்களுக்கும் தலைமையாசிரியரே பண உதவி செய்யும் சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் சிறப்பு துாய்மைப் பணியும் சோதனையாக மாறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனே உத்தரவிட்டு, உரிய பணியாளர்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக