பள்ளி மாணவர்கள் நலன் கருதி அதிகரிக்கப்பட்ட உடற்கல்வி பாடவேளைகள் அமலுக்கு வந்த நிலையில் அதற்கு தேவையான உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு படிப்புடன் விளையாட்டும் முக்கியம் என்ற அடிப்படையில் அக்., 13ல் நடந்த கல்வி அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வகுப்புகள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். அதன்படி அதிகரிக்கப்பட்ட பாட வகுப்புகளுக்கான அட்டவணையும் அமலுக்கு வந்துள்ளது.
புதிய அட்டவணைப்படி வாரத்தில் 6 - 12ம் வகுப்புக்கு மூன்றும், 1 - 5ம் வகுப்புக்கு ஐந்து நாட்களும் உடற்கல்வி பாடவேளைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு ஏற்ப உடற்கல்வி ஆசிரியர் எண்ணிக்கையில் மாற்றம் செய்யவில்லை.
மாநில அளவில் 6 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், 8,500 நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியரே இல்லை என்பது தான் கல்வித்துறை நிலைமை. இதனால் உடற்கல்வி பாடவேளைகளை அதிகரித்தாலும் பயனில்லை என்பது தலைமையாசிரியர்களின் ஆதங்கம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்க மாநிலத் தலைவர் சங்கரப்பெருமாள் கூறியதாவது:
விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து உடற்கல்வி பாடவேளைகளை அதிகரித்தது வரவேற்கத்தக்கது. ஆனால் 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேல்நிலைப் பள்ளிகளில் இப்பாடம் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது.
இங்கு உடற்கல்வியில் பி.ஜி., முடித்தவர்களையே உடற்கல்வி இயக்குநர்களாக நியமிக்க வேண்டும். ஆனால் 2,700க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உடற்கல்வி பணியிடங்களே இல்லை.
தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைப்படி, '250க்கு மேல் மாணவர் எண்ணிக்கை இருந்தால் 1 ஆசிரியர், 550க்கு மேல் இருந்தால் 2 ஆசிரியர், 850க்கு மேல் இருந்தால் 3 உடற்கல்வி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும்.
ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை மாணவர் உள்ள பள்ளிக்கும் அதிகபட்சம் 3 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்படும்' என்பதை ரத்து செய்து மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கும் முடிவை எடுக்க வேண்டும். அப்போது தான் அரசின் முயற்சி பயனுள்ளதாக இருக்கும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக