இந்த வலைப்பதிவில் தேடு

தேர்தல் அலுவலர்கள்...2 நாட்களாக உணவு, தண்ணீரின்றி அவதி

வெள்ளி, 19 ஏப்ரல், 2019



தேர்தல் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், மாற்று தேர்தல் அலுவலர்கள், இரண்டாவது நாளாக உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி தவித்தனர்.

கடலுார் லோக்சபா தொகுதியில் 2,300 ஓட்டுச்சாவடி மையங்களில், நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், கடலுார் சட்டசபை தொகுதியில் உள்ள 227 ஓட்டுச்சாவடிகளில் 1,159 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இந்த அலுவலர்களுக்கு கடலுார் மஞ்சகுப்பம் செயின்ட் ஜோசப் பள்ளியில், நேற்று முன்தினம், பணி ஆணை வழங்கப்பட்டது.அப்போது, மாற்று தேர்தல் அலுவலர்கள் 150 பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். அந்த அலுவலர்கள் செயின்ட் ஜோசப் பள்ளியிலிருந்து, நேற்று முன்தினம் மதியம் 2:50 மணிக்கு, கடலுார் டவுன் ஹாலுக்கு மாற்றப்பட்டனர். 


அங்கு, சுப நிகழ்ச்சிக்காக டவுன் ஹாலை புக்கிங் செய்தவர்கள், அலுவலர்களை வெளியேற்றியதால், பரபரப்பு ஏற்பட்டது. பின், மஞ்சகுப்பம் அண்ணா ஸ்டேடியம் விளையாட்டு மேம்பாட்டு பயிற்சி கட்டடத்திற்கு அலுவலர்கள் மாற்றப்பட்டனர். நேற்று முன்தினம் மதிய மற்றும் இரவு உணவு, தண்ணீர் எதுவும் அலுவலர்களுக்கு தேர்தல் துறை சார்பில் வழங்கப்படவில்லை. இரண்டாவது நாளான நேற்று காலை மற்றும் மதிய உணவு, தண்ணீர் ஆகிய எதுவும் அலுவலர்களுக்கு வழங்கவில்லை.



நேற்று லோக்சபா தேர்தலையொட்டி, கடலுார் நகரில் ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தது. இதனால், உணவு, தண்ணீர் கிடைக்காமல் இரண்டாவது நாளாக அலுவலர்கள் கடும் அவதியடைந்தனர். இது குறித்து மாற்று தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'இரண்டு நாட்களாக உணவு, தண்ணீரின்றி தவித்து வருகிறோம். அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் இரண்டு நாட்களாக துாங்காமல் பணியில் இருப்பதாக பதில் கூறுகின்றனர். எங்களின் கோரிக்கைகள் மீது செவி சாய்க்கவில்லை. கழிப்பிட வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளோம். அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண் அலுவலர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என தெரிவித்தனர். கடலுாரில் தேர்தல் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு, மாற்று தேர்தல் அலுவலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent