இந்த வலைப்பதிவில் தேடு

பெண்களுக்கு திடீர் மரணம் - காரணம், 'ஸ்காட்!'

திங்கள், 6 மே, 2019



'ஸ்காட்' என, சுருக்கமாக அழைக்கப்படும், 'ஸ்பான்டெனியஸ் கரோனரி ஆர்டெரி டிஸ்செக் ஷன்' என்ற இதய நோய், பெண்களுக்கு திடீர் மரணத்தை வரவழைக்கும்.
'மாரடைப்பு, மார்பு வலி, திடீர் மரணம் போன்றவற்றிற்கு, இதயத்திலுள்ள ரத்தத்தை கொண்டு செல்லும், 'கரோனரி' தமனி ரத்தக் குழாய் இறுக்க நோய் தான் காரணம். இதை, 'அத்ரோஸ்குளோரோசிஸ்' என்பர்.

இந்த தமனி இறுக்க நோயில், ரத்த நாளத்தின் உட்பகுதியில் கொழுப்பு படர்ந்து கட்டியாகிறது. இதை, ஆங்கிலத்தில், 'பிளாக்' என்பர்.ரத்தக்குழாய், மூன்றடுக்கு சுவர்களால் ஆனது. ரத்த நாளத்தின் உள் சுவர், 'இன்டிமா' என்ற மெல்லிய திசுவால் பரவப்பட்டு இருக்கும்.நடுச்சுவர் விரியும், சுருங்கும் தசைகளால் ஆனது. மூன்றாவது சுவர், வெளிச்சுவர், ரத்த நாளத்தின் மேல், சுவர் போல பரவியிருக்கும்.

வீட்டு சுவரில், உள்ளே இருக்கும் சிமென்ட் சுவர்; நடுவில் இருக்கும் செங்கல்; வெளியே இருக்கும் சிமென்ட் போட்டு பரவி இருக்கும் சுவர் போன்றது தான், ரத்த நாளத்தின் அமைப்பு.இது நாள் வரை, மார்பு வலி, மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வர, பிளாக் எனப்படும் அடைப்பு காரணம் என்பதை அறிந்திருந்தோம்.ரத்தத்தின் மேல் படர்ந்துள்ள, மெல்லிய திசுக்கள் உடைந்து, தட்டணுக்கள் அதன் மேல் படர்ந்து, ரத்தம் கட்டியாகி, உறைந்து, முழு அடைப்பு ஏற்படுகிறது. இதை, 'மையாகார்டியல் இன்பார்க் ஷன்' என்பர். இதனால், திடீர் மரணம் ஏற்படலாம்.


மேலும், ரத்தத்தை செலுத்தும் இதய தசைகள் பழுதடைந்து, இதயத்தின், 'பம்பிங்' வேலை குறைந்து, ரத்த அழுத்தம் குறையும். இது, 'எஜெக் ஷன் பிராக் ஷன்' என்ற, இ.எப்., என, அழைக்கப்படும். இதயத் துடிப்பு குறைந்து, பம்பிங் ரத்த அழுத்தம் குறைந்து, மூச்சு முட்டல் ஏற்பட்டு, திடீர் மரணம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை, 'ஸ்டெமி' என்பர். அதாவது, இ.சி.ஜி., இதய வரைபடத்தில், மாரடைப்புக்கு அறிகுறியான, எஸ்.டி., எலிவேஷன் என, இதை கருதலாம். 

மேலும், 'நான் ஸ்டெமி' என்ற ஒரு வகையும் உண்டு. இதில், இ.சி.ஜி., இதய வரைபடத்தில், எஸ்.டி., எலிவேஷனை அவதானிக்க முடியாது. இந்த இரண்டிற்கும் ஆதாரமாக, 'டிராப்டி' என்ற ரத்த பரிசோதனை மூலம் அவதானிக்கலாம்.இதற்குரிய காரணிகளாக, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன உளைச்சல், அதிக கொழுப்பு போன்றவை உள்ளன. இதய நோய்களை, இ.சி.ஜி., - டி.எம்.டி., எனப்படும், 'டிரெட் மில் டெஸ்ட், எக்கோ கார்டியோகிராம்' போன்ற ஆய்வுகளின் மூலம் அவதானிக்கலாம்.

ஸ்காட் என்ற இதய நோயால்,மார்பு வலி வரும்.அப்போது, ரத்த நாளத்திலுள்ள உட்சுவர் 
விரிசல் ஏற்பட்டு, உட்சுவர், நடுச்சுவரிலிருந்து பிரிந்து,ரத்த நாளத்தின் உள்ளே அடைப்பை ஏற்படுத்தி விடும். இதனால் நெஞ்சு வலி ஏற்படும்; கொஞ்ச நேரத்தில் மரணத்தை வரவழைக்கும்.

யார் யாருக்கு வரும்?

கடந்த, 10 ஆண்டுகளில், 'மேயோ கிளினிக்'கில், இந்த ஸ்காட் ஆய்வை, டாக்டர் ராஜிவ் குலாடி, டாக்டர் ஷரோன் ஹைஸ் ஆகிய இருவரும், பெண்களின் இதய நோயை ஆய்வு செய்து கூறிய கருத்துகள்:கடந்த கால ஆய்வையும், இன்றைய ஆய்வையும் ஒப்பிடுகையில், பெண்கள் குறிப்பாக, 20 - 35 வயதில் வரும் மார்பு வலியின் போது, 'கரோனரி ஆஞ்சியோகிராம்' செய்து பார்த்ததில், கொழுப்பு கட்டியால் அடைப்பு இல்லை என்பது தெரிந்தது.


மேலும், இந்த பரிசோதனையின் மூலம், ரத்த நாள உட்சுவர் விரிசல் ஏற்பட்டு, குழாயின் உள் விட்டத்தை, அது அடைத்து, ரத்த ஓட்டத்தை குறைத்து இருப்பதை காண முடிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.இதில், 20 முதல், 35 வயது வரையுள்ள பெண்களுக்கும், 35 முதல், 45 வயது வரையுள்ள பெண்களுக்கும், ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அடைப்பை கண்டறிய முடியவில்லை. இது, ஓ.சி.டி.,யின் மூலமாகவும், 'ஐவஸ்' மூலமாகவும் கண்டறியப்பட்டது. 

எல்லா மார்பு வலியும், மாரடைப்பும், ரத்த நாள கொழுப்பு கட்டி அடைப்பு என்று நினைத்து, ஆஞ்சியோகிராம் செய்யக்கூடாது.குறிப்பாக, இ.சி.ஜி., - டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம் ஆகிய ஆய்வுகளை முதலில் செய்ய வேண்டும். அதன் பிறகு தேவையிருந்தால், ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும். அப்போது தான், இந்த, ஸ்காட் என்ற உட்சுவர் பிளவிலிருந்து, ரத்த ஓட்டம் அடைத்திருப்பதை கண்டறிய முடியும்.

இதில், ரத்த ஓட்டம் குறைவாக அல்லது தடைபட்டிருப்பதை காணலாம். இது, ஆஞ்சியோகிராமில், மற்ற கொழுப்புக்கட்டி அடைப்பு போலவே காட்சியளிக்கும்.ஐவஸ், ஓ.சி.டி மூலம், இந்த, டிசக் ஷன் என்ற உட்சுவர் பிளவை காணலாம். இதற்கு தகுந்தாற்போல், சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எல்லா மாரடைப்பு பிரச்னைகளையும், அடைப்பு என நினைத்து, ஆஞ்சியோ செய்தால், ஸ்காட் அடைப்பும், பிளாக் அடைப்பை போலவே, ஒரே மாதிரியாக இருக்கும்.

இதை கவனிக்காமல், அவசர அவசரமாக, ஸ்டென்ட் சிகிச்சை செய்தால், செய்த சில மணி நேரங்களில் மீண்டும் மார்பு வலி வரும்.காரணம், அது, 'ஸ்காட்' ஆக இருக்கலாம். அதில், உட்சுவர் பிரிந்துள்ள பகுதி, சிறியதா அல்லது நீண்டுள்ளதா என, அறிய வேண்டும். இல்லையெனில், பல ஸ்டென்ட்களை வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.


பிரச்னையை நன்கு அறியாமல், கம்பியை உள்ளே விடும் போது, ரத்த நாளப்பிளவு ஏற்பட்ட உட்சுவரைப் பிரித்து, கம்பி மேலே செல்லும் போது, விளைவுகள் மோசமாகும். உட்சுவரில் ரத்தம் உறைந்து, முழு அடைப்புக்கு வழி வகுக்கும்.இது, மிகவும் அபாயகரமானது. இதை, ஐவஸ் எனப்படும், 'இன்ட்ரா வஸ்குலர் அல்ட்ரா சவுண்ட்' மற்றும் ஓ.சி.டி., எனப்படும், 'ஆப்டிகல் கோஹெரன்ஸ் டொமோகிராபி' மூலம் துல்லியமாக அடைக்க முடியும்.

பெண்களுக்கு வரும் அடுத்த வகை மார்பு வலி, கரோனரி சுருக்க நோய். ரத்த நாளத்தில், ரத்த ஓட்டத்தை நிறுத்தி, இதய தசைகளுக்கு ரத்தம் கிடைக்காமல், 'இஸ்கிமியா' ஏற்பட்டு, தாறு மாறாக இதயம் துடித்து, உடனே மரணம் ஏற்படும் நிலை வரும்.இவர்களுக்கு முன்கூட்டியே, ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., - டி.எம்.டி., எக்கோ கார்டியோகிராம், ஆஞ்சியோகிராம் எடுத்தால், எந்த குறைபாடும் இருக்காது. இதை, கரோனரி ரத்த நாள சுருக்கம், ஸ்பேசம் என்பர்; இதற்கு முறையாக வைத்தியம் பார்க்க வேண்டும்.



ஸ்காட் வர காரணம்

சிலருக்கு, 'பைப்ரோ மஸ்குலர் டிஸ்பிளேசியா' எனப்படும், மரபணுக்கள் சார்ந்து இருக்கலாம். இதை, கால் தொடையிலுள்ள, ரத்த நாள, ஆஞ்சியோவில் அறிந்து கொள்ளலாம்.பெண்கள், 25 முதல், 35 வயது வரை வீட்டிலும், பணியிடத்திலும், வேலைப்பளுவால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி வருகின்றனர். இதனாலும், மார்பு வலி வர வாய்ப்புண்டு.மகப்பேறு காலத்திலும் பல வித, 'ஹார்மோன்'கள் சுரக்கின்றன. இதுவும், ரத்த குழாயை பாதிக்கலாம் என, ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக, குழந்தை பெற்ற பின் தான், ஸ்காட் வர வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிகிறது.

தடுக்கும் வழிமுறைகள்

தினமும் உடற்பயிற்சி, யோகா செய்து, கட்டுப்பாடான உணவுடன் நல்ல துாக்கம் மேற்கொள்ள வேண்டும்.அமெரிக்காவில், 45 முதல், 50 வயது வரையுள்ள நிறைய பெண்கள், மாரடைப்பு ஏற்பட்டு, ஆண்டுக்கு, 15 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.இளம் பெண்கள் மார்பு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, பல் வலி, தொடை வலி என்றால், மாரடைப்பு வலியாக இருக்கலாம் என்பதை உணர வேண்டும். 

-பேராசிரியர்
டாக்டர் சு.அர்த்தநாரி,எம்.பி.பி.எஸ்., - எம்.டி., 

- டி.எம்.,டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக், 

ராயப்பேட்டை, சென்னை - 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent