இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவது சரியானதுதானா?

வியாழன், 28 மே, 2020

அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுடன் ஒப்பிடுவது சரியானதுதானா?



மு.சிவகுருநாதன்



“ஊருக்கு எளச்சவன் பள்ளிக்கூடத்து வாத்தி”, என்றொரு சொலவடை உண்டு. நீதிமன்றங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்குமா என்ன? ஆசிரியரின் வருகைப் பதிவிற்காக பயோ மெட்ரிக் உடன் ஆதாரை இணைக்கப் பிறப்பித்த (அக். 25, 2019) அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆர்.அன்னாள் என்பவர் தொடுத்த வழக்கில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு (ஏப். 15, 2019) வழக்கிற்குத் தொடர்பில்லாத பலவற்றைத் தொடுகின்றன.

இவ்வாண்டு நடைபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆளும்கட்சியினர் எதிர்கொண்டதைப் போல இந்த நீதிமன்ற உத்தரவு உள்ளது. மேலும் இவை யாரைத் திருப்திப்படுத்த என்ற வினாவும் முன்னெழுகிறது.



வழக்கு விசாரணைகளின்போது நமது நீதிபதிகள் தொடர்பில்லாமல் கருத்துரைப்பது வாடிக்கையான ஒன்று. தமிழ் சினிமாவில் வரும் நகைச்சுவைப் பாதை போல; இது வழக்கின் தீர்ப்பில் எதிரொளிப்பதில்லை. ஆனால் இங்கு நடந்ததோ வேறு.

ஆதார் பற்றி உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பைத் தந்துள்ளது. ஐந்து பேரடங்கிய அரசியல் சாசன அமர்வில் நால்வர் ஒருமித்தும் நீதிபதி சந்திரசூட் மாறுபட்டும் தீர்ப்ப்பெழுதியுள்ளனர். வருகைப்பதிவுடன் ஆதாரை இணைக்கும் போது அது அடிப்படை மனித உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் ஊறு ஏற்படுகிறது என்பதே வழக்கின் வாதம். அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் குடிமகன்/மகள் ஆக கருதப் படமாட்டார்கள், குடிமக்களுக்குரிய உரிமைகள் இவர்களுக்குப் பொருந்தாது என்று ஏதோ சொல்லி வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கலாம்.

ஆசிரியர்களிடையே ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது, குறித்த நேரத்திற்குப் பள்ளிக்கு வருவதில்லை, வேறு தொழில் செய்கின்றனர், அதிக ஊதியம் பெறுகின்றனர், தனியார் பள்ளி ஆசிரியர்களைப் போன்று உழைப்பதில்லை, கடமைக்குப் பணியாற்றுகின்றனர், வருமானத்திற்கு அதிக சொத்து சேர்த்துள்ளனர், லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று உத்தரவில் அடுக்கிக்கொண்டே செல்கிறார். இது தொடுக்கப்பட்ட வழக்கிற்குத் தொடர்புடையதா என்று சட்ட நிபுணர்கள் கண்டு, விண்டுரைக்க வேண்டும்.




மேலே கண்ட பொதுக் கருத்துகள் நீதிபதிக்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ இருக்குமானால் அதுகுறித்த வழக்கு வரும்போதோ அல்லது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்வது விசாரிப்பதும் உத்தரவிடுவதும் நலம். வழக்கிற்குத் தொடர்பில்லாத நீதிபதி நினைக்கும் பொதுக்கருத்துகள் எல்லாவற்றையும் வழக்கில் நுழைக்கும் அதிகாரம் இந்த நீதிபதிக்கு எப்படி வந்தது?

மேம்போக்குப் பார்வையில் அரசுப்பள்ளிகளையும் தனியார் சுயநிதிப்பள்ளிகளையும் ஒப்பிடும் அபத்தத்தைப் பலர் செய்கின்றனர். இது அடைப்படையில் தவறு. மாணவர்களின் சமூக, பொருளியல் காரணிகளைப் புரிந்துகொள்ளாமல் இவ்வாறான ஒப்பீடு நிகழ்த்தப்படுகிறது. இரண்டிலும் படிப்பவர்கள் ஒருபடித்தானவர்களும் அல்ல. அரசுப்பள்ளிகள் சமூக நீதிக்காக இயங்குபவை; சுயநிதி தனியார் பள்ளிகளுக்கு லாப நோக்கம் மட்டுமே உண்டு.

தற்போது +2, 10 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்ச்சி விழுக்காட்டை வைத்து இரண்டையும் ஒப்பிடுவதும் கேலிக்கூத்து. இருப்பினும் அரசுப்பள்ளிகளும் தேர்ச்சியில் சாதனைகள் புரியவேச் செய்கின்றன. இருப்பினும் கல்வி என்பது வெறும் மதிப்பெண்ணை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.

நீதிமன்றங்கள் மூலம் அமைக்கப்பட்ட ஆணையங்களே சுயநிதிப் பள்ளிக் கட்டணத்தை வரையறுக்கின்றன. அங்கு ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியம் வழங்குவதை அரசும் நீதிமன்றமும் கண்டுகொள்ளாமல் தடுப்பது எது? சம வேலைக்கு சம ஊதியம், பாலின வேறுபாடுகளின்றி சம ஊதியம் ஆகியவற்றில் நீதிமன்றங்கள் என்றாவது செயல்பட்டிருக்கின்றனவா?



அரசுப்பள்ளி மாணவர்கள் விடுமுறை நாள்களில் குழந்தைத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து, தனது குடும்பத்தைப் பாதுகாத்து, படிக்கவும் செய்கின்றனர். குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் முறையான நடைமுறைப்படுத்தப்படுவதை இந்த நீதிமன்றங்கள் ஏன் ஆய்வு செய்வதில்லை?


தனியார் பள்ளிகளில் 9, +1 வகுப்புகளில் குறைந்த அளவு மதிபெண்கள் பெறுபவர்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படுகின்றனர். நூற்றுக்கணக்கான தனியார் பள்ளிகள் உரிய அரசு அங்கீகாரமின்றிச் செயல்படுகின்றன. மாணவர்களிடம் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. சென்னை போன்ற பெருநகரத்திலும் எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற வணிக வளாகம் மற்றும் வீடுகளில் அங்கீகாரமின்றி நடத்தப்பட்ட ‘A SCHOOL’ களை சில ஆண்டுகளுக்கு முன்பு உண்மையறியும் குழுவின் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தினோம். தமிழகம் முழுவதுமுள்ள சுயநிதித் தனியார் பள்ளிகளின் நிலை இதுதான்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 6 முதல் 14 வயதெல்லைக் குழந்தைகளுக்கு பள்ளிகளில் நுழைவுத்தேர்வு வைப்பதைத் தடை செய்கின்றன. ஆனால் தனியார் பள்ளிகள் இதை மதிப்பதில்லை. மாற்றுத்திறன் குழந்தைகளை இவை கல்வி பயில அனுமதிப்பதில்லை. நீதிமன்றத்தால் வரையறை செய்யப்பட்ட கட்டணத்தை மீறி அதிகம் வசூலிக்கின்றன. ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான ஊதியம் வழங்குகின்றன. மாணவர்களுக்குத் தண்டனைகள் அளிக்கின்றன. வளரிளம் பருவ மாணவர்கள் பலர் ஆண்டுதோறும் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.



மாறாக அரசுப்பள்ளிகள் அடித்தட்டு, ஏழை மக்களின் குழந்தைகளின்பால் கவனம் செலுத்துகிறது. வீடுகளில் படிப்பதற்கான சூழல் இல்லாத நிலையிலும் பெற்றோர்கள் உரிய வழிகாட்ட முடியாத நிலையிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணி வெறும் கடமைக்காக இருப்பதில்லை. அவர்களை உயர்கல்விக்குத் தயார் செய்வதும் முழு ஆளுமை மிக்கவர்களாக சிக்கல்களை எதிர்கொண்டு சமூகத்தில் நடைபோடவும் கூடுதல் கவனத்துடன் பணியாற்றுகிறார்கள். சிலர் செய்யும் தவறுகளைப் பொதுமைப்படுத்துவது நீதியின் மாண்பைக் குலைக்கும் செயலாகும்.

ஊழல்கள் இல்லாத துறைகள் இல்லை. நீதிபதிகள் மீது கூட ஊழல் புகார்கள் உண்டு. அவை தண்டனை எல்லை வரை சென்றதில்லை. நீதிமன்ற மாண்பைக் காக்க பதவி விலகல் எனும் துருப்புச்சீட்டுப் பயன்படுத்தப்படுகிறது. (எ.கா.) நீதிபதி ராமசாமி மீதான புகார்கள் மற்றும் பதவி விலகல்.

ஆசிரியர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர், அவற்றை விசாரிக்க வேண்டுமாம்! நல்லதுதான்! அதற்கு முன்னதாக வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இந்த நீதிமன்றங்கள் எவ்வாறு நடந்து கொண்டன என்பதை அறிவது நல்லது.


முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூபாய் 10 கோடி அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். இதன் மேல்முறையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி போலியாகப் பொய்க்கணக்குக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்தார். உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணை முடிந்து ஓராண்டாகியும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்வரை தீர்ப்பு வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. சசிகலா முதல்வராகத் தேர்வானதும் மூன்று பேருக்கும் மட்டும் தண்டனை வழங்கிய தீர்ப்பும் வந்தது. இந்த நீதிமன்றத் தந்திரங்கள் ஒன்றும் பாமரர்களுக்கு விளங்காமலில்லை. இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவே சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பான முன்னுதாரணமாகும்.



மாத ஊதியத்தைத் தவிர வேறு வழியில்லாத ஆசிரியர்கள் எப்படி ஊழல் செய்திருக்க முடியும்? ஆசிரியர்கள் என்ன மாதிரியான ஊழல்கள் செய்கின்றனர்? யாரிடம் லஞ்சம் பெறுகின்றனர்? என்பதையும் உத்தரவில் சற்று விளக்கியிருக்கலாம். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் குழந்தைகள், அவர்களது பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் உள்ளனர். இவர்கள் ஆசிரியர்களுக்கு லஞ்சம் வழங்கி நாட்டில் எத்தனைபேர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர்?

அரசுப்பள்ளிகளுக்காக அரசு பணத்தைத் தண்ணீராக வாரி இறைக்கிறதாம்! 50% பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகள் இல்லையென்று நீதிமன்றங்கள்தான் சொன்னது. தண்ணீராய் வாரி இறைக்கும் பணத்தில் ஊழல் இருக்கிறது. உண்மைதான். இந்த ஊழலுக்குக் காரணமானவர்கள் யார்?

பள்ளிக் கட்டிடங்கள் கட்டுதல், சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், தளவாடங்கள் வாங்குதல், பாடநூல்கள் அச்சிடுதல், கற்றல் உபகரணங்கள் கொள்முதல் செய்தல், மடிகணினி, மிதிவண்டி, சீருடைகள், கணிதவியல் கருவிப்பெட்டிகள், பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்குதல் மற்றும் அனைத்து விலையில்லாப் பொருள்கள் கொள்முதல் போன்றவற்றில் பெருமளவு ஊழல் இருக்கிறது. தரமற்றப் பொருள்களே இதற்குச் சாட்சி. இந்த ஊழலைச் செய்தவர்கள் யார்? இவற்றை ஆசிரியர்கள் எப்படிச் செய்திருக்க முடியும்? ஒருமுறை ‘அழிப்பான்’ தரமற்றது எனத் திரும்பப் பெறப்பட்டது. பிற பொருள்கள் தரமானது என்று எவ்விதம் முடிவு செய்யப்படுகிறதோ!



அரசியல்வாதிகள், அலுவலர்கள் என பலமட்டங்களில் இந்த ஊழல்கள் நடைபெறுகின்றன. அனைவருக்கும் தொடக்கக் கல்வி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி, ஒருங்கிணைந்த கல்வித் திட்டங்களிலும் பெருமளவு ஊழல் மயமே. இவற்றில் ஆசிரியர்கள் எப்படி ஈடுபட்டிருக்க முடியும்? என்பதை விளக்கிவிட்டு பிறகு உங்களது நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.

ஆசிரியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று, பணிப்பதிவேட்டில் பதிவு செய்து அசையும், அசையா சொத்துகளை வாங்குவது கிடையாது. எனவே அனுமதி பெறாமல் வாங்கப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துகளை ஊழல் மூலம் சேர்த்தவை என்று கருதுகிறதா என்பது விளங்கவில்லை. விதிகளை மீறிய கட்டிடங்களுக்கு பின்னேற்பு வழங்குவதைப்போல இதற்கு சாத்தியமில்லையோ!



ஆசிரியர்களில் ஒரு பிரிவினரிடத்தில் பணி அறமில்லை என்பது உண்மையென்றால் அவற்றைக் கண்காணிக்க வேண்டிய நிர்வாக அமைப்புகள் என்ன செய்கின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானது. இதற்கு நிர்வாகத்தைச் சீர் செய்ய வேண்டுமே தவிர லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய ஏவப்பட வேண்டியதில்லை. இவைகள் செல்ல வேண்டிய இடம் வேறு; அவற்றை மறைத்து மடைமாற்ற இத்தீர்ப்பு பயன்படும் என்பதே வேதனைக்குரிய உண்மை.

ஆசிரியர்களைத் திட்டுவதன் மூலம் அரசின் நன்மதிப்பைப் பெறுவதும் வருங்காலப் பலன்களைத் திட்டமிட்டு இவ்வாறு செய்வதும் நீதியின் மாண்பிற்கும் நீதிமன்றத்தின் சட்ட நடைமுறைகளுக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதில் அய்யமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent