இந்த வலைப்பதிவில் தேடு

``பரிசுத் தொகையில் கழிப்பறை கட்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்!"

திங்கள், 3 ஜூன், 2019



திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் ஆசிரியர் செல்வம். சமூக வலைதளங்களில் இவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். நட்சத்திர ஆசிரியர் என்றே இவரைச் சொல்லலாம். ஓய்வூதியத்திற்காகப் போராடிய ஆசிரியர்களுள் இவரும் ஒருவர். அந்தப் போராட்டத்தில் இவர் கைது செய்யப்பட்ட போது இவரை விடுவிக்கக்கோரி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் வைரலானது. எளிமையாய் மாணவர்களை நேசிக்கும் ஆசிரியர் செல்வ சிதம்பரம் தற்போது மாணவர்களுக்காக அவருடைய பரிசுத் தொகையில் கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம்.

தமிழக அரசு சார்பாக ஒவ்வோர் ஆண்டும் கனவு ஆசிரியர் விருது கொடுப்பாங்க. அப்படி எனக்குக் கடந்த ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருது கொடுத்தாங்க. விருதுடன் சேர்த்து பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையையும் கொடுத்தாங்க. அப்போவே அந்த செக்கை ஸ்கூல் செலவுக்காகக் கொடுத்துட்டேன். அரசுப் பள்ளிகளில் புதியதாக எல்கேஜி, யூகேஜி திறக்கிறாங்கங்குறதனால அந்தக் குழந்தைகளுக்குக் கழிப்பறை வசதி தேவைப்பட்டுச்சு. அரசு கொடுத்த பரிசுத்தொகையுடன் கூடுதலாக 15,000 ரூபாய்கிட்ட செலவு பண்ணி கழிப்பறை கட்டியிருக்கோம். குழந்தைங்க என்பதால கார்ட்டூன்லாம் வரைஞ்சிருக்கோம். பல ஸ்கூல் டீச்சர்ஸ் இதைப் பண்றாங்க. ஆனா, ட்விட்டரில் பதிவிட்டதால் இந்த விஷயம் வைரல் ஆகிடுச்சு.


இன்றைக்கு சமூக வலைதளம் பலருக்கும் பெரியதாக துணையிருக்குன்னே சொல்லலாம். நாம பதிவு பண்ற விஷயம் சரியானதாக இருந்தால் அதை எல்லோரும் மனம் விட்டுப் பாராட்டி பதிவிடுவாங்கங்குறதுக்கு இந்த நிகழ்வு ஆகச்சிறந்த உதாரணம். நான் ட்விட்டரில் கழிப்பறை கட்டின செய்தியைப் பதிவிட்டிருந்ததைப் பார்த்துட்டு தொடக்கப்பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாழ்த்துகள் கூறி என் பதிவை ஷேர் செய்திருந்தார் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.

கஜா புயல் சமயத்திலெல்லாம் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரை ட்விட்டரில் உள்ள ஃப்ரெண்ட்ஸ் மூலமா வாங்கி அவங்களுக்காகக் கொடுத்தோம். என்கிட்ட படிக்கிற பசங்க நாலு பேருக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கோம். இதைத் தவிர்த்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களால் முடிஞ்ச உதவிகளை செஞ்சோம். ட்விட்டரில் எனக்கு கொஞ்சம் ஃபாலோவர்ஸ் அதிகம். அவங்க சப்போர்ட்ல பணம் திரட்டி இல்லாத மக்களுக்கு உதவினோம். அதே மாதிரி சிலருக்கு ஆஸ்பெஸ்டாஸ் போட்டுக் கொடுத்தோம்.


கஜாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தோம். அதுமட்டுமல்லாமல், ஸ்கூல் பசங்க மேற்படிப்பு படிக்கிறதுக்கு உதவி பண்ணணுமான்னு யாராவது கேட்டாங்கன்னா கஷ்டப்படுற பசங்களை அடையாளம் காட்டுவேன். கிட்டத்தட்ட பத்துப் பசங்களுடைய படிப்புச் செலவுக்கு உதவி பண்ணியிருக்கேன். ஆனா, அதைப் பற்றி எந்த விஷயத்தையும் ட்விட்டரில் பதிவு பண்ண மாட்டேன். ஏன்னா, நம்ம செஞ்சு கொடுப்போம்னு நம்பி பலரும் வருவாங்க. அவங்க எதிர்பார்க்கிற மாதிரி சரியான பசங்களை அடையாளம் காட்டணும். உண்மையாகவே கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி போய்ச் சேரணும்னு நினைப்பேன். இப்போ பல இளைஞர்கள் கஷ்டப்படுறவங்களுக்கு உதவி பண்ண ரெடியா இருக்காங்க. அது ரொம்பவே வரவேற்கத்தக்கது. இல்லாதவங்களுக்கு உதவ நினைக்கிறதுக்குப் பெரிய மனசு வேணும். சமூக வலைதளங்களில் உதவி வேணும்னு பதிவு போட்ட அடுத்த நிமிஷமே உதவி செய்ய நிறைய நல்ல உள்ளங்கள் இருக்காங்க.. எல்லோருக்கும் நன்றி! என்றார்.
 

Popular Posts

Recent