இந்த வலைப்பதிவில் தேடு

சந்திரயான் 2, நிலவுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது.. அடுத்தது என்ன? ஒரு சிறப்பு பார்வை..

செவ்வாய், 23 ஜூலை, 2019



ஜூலை-22.

இன்று-சந்திரயான் 2,
நிலவுக்கு  வெற்றிகரமாக ஏவப்பட்டது..ஒரு சிறப்பு பார்வை..

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் சந்திரயான் 2  வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும்.
இந்த வரலாற்று  சாதனை படைத்துவிட்டது இந்தியா. யாரும் இதுவரை நினைத்து கூட பார்க்காத நிலவின் தென் துருவத்தை இந்தியா இன்னும் சில நாட்களில் தொட போகிறது.

 சந்திரயான் 1 வெற்றியை தொடர்ந்து சரியாக பத்து வருடங்கள் கழித்து தற்போது சந்திரயான் 2 வெற்றி பெற்றுள்ளது.

தொழிநுட்பகோளாறு:-

15.07.2019 அதிகாலை செலுத்த திட்டம் தீட்டி தடைபட்டது.

மதிப்பு:-

சந்திரயான் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டையும் சேர்த்து 960 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 வருடங்களில் மிக கடுமையான உழைப்பை போட்டு சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள். 

சந்திரயான் 2 விண்கலம் சிறப்பம்சங்கள்:-

இந்தியாதான் முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதிக்கு ஆய்வு கலம் ஒன்றை அனுப்புகிறது.

சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. 

அதன்படி ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.

 நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. 

இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று.

ஏவுதல்:-

சந்திரயான் 2 விண்கலம், இன்று (22.07.2019) மதியம் 2.45 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் 2வை கிரயோசனிக் எஞ்சின் கொண்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் விண்ணில் கொண்டு சென்றது. இதில் இருக்கும் கிரயோசனிக் எஞ்சின் முன்பு இருந்ததை விட 15% அதிக பவரில் செயல்பட்டு சந்திரயானை சுமந்து சென்றது.

செல்லும் விதம்:-

இந்த ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதை முடியும் வரை மட்டுமே சந்திரயான் 2வை கொண்டு செல்லும். அதன்பின் சந்திரயான் 2 தானாக இயங்க தொடங்கும். சரியாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் 2 ராக்கெட்டில் இருந்து பிரிந்து பூமியின் வட்டப்பாதையில் சுற்றும். அதன்படி சந்திரயான் 2 ஏற்கனவே புவி வட்டப்பாதையை அடைந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரயான் 1 சென்றது போல இது இயற்கையின் இயற்பியல் விதிகளை வைத்து பூமியை சுற்றி சுற்றி சென்று பின் நிலவையை அடையும். பூமியின் வட்டப்பாதையை தாண்டியவுடன் (48000 கிமீ) சந்திரயான் 2 உடனடியாக எஞ்சின் மூலம் வேகமாக செயல்பட்டு நிலவை நோக்கி நகர தொடங்கும். அதற்கு முன் பூமியை சந்திரயான் 2 சுற்றி வரும்.

சுற்றும் முறை:-

முதலில் மிக குறைவான புவி வட்டப்பாதையான் 170 கிமீ சுற்றுவட்டப்பாதைக்கு செல்லும். அதன்பின் அங்கிருந்து நீள் வட்டப்பாதையில் சந்திரயான் 2 சுற்றும். நீள்வட்ட பாதையில் சுற்றி இயற்பியல் விதியின்படி 45000 கிமீ தூரத்தை சந்திரயான் 2 அடையும். அந்த பகுதியை அடைந்த அடுத்த நொடி நிலவை நோக்கி சந்திரயான் 2 இயங்க தொடங்கும். இதன் மூலம் எரிபொருள் குறைவாக பயன்படுத்தப்படும்.

நிலவை நோக்கி சந்திரயான் 2 நகர்தல்:-

🚀சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின்கள் செயல்பட தொடங்கியதும், அதில் இருந்து வரும் உந்து சக்தி மூலம் நிலவை நோக்கி சந்திரயான் 2 நகரும்.

🚀நிலவு பூமியை சுற்ற கூடியது. இதனால் நிலவிற்கு ஏற்றபடி சந்திரயான் 2 அடிக்கடி திசையை மாற்ற வேண்டி இருக்கும். இதனால் நிலவு நகரும் இடத்தை நோக்கி சந்திரயான் 2 கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி மாறி செல்லும்.

🚀நிலவை நோக்கி 48 நாட்கள் நெடும் பயணத்தை சந்திரயான் 2 செய்ய இருக்கிறது.

🚀செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும்.

🚀சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை குறைக்கும். இதனால் விபத்து தவிர்க்கப்படும்.

🚀சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டார் எனப்படும் ஆராய்ச்சி செயற்கைகோள் நேரடியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.

🚀விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். இது பாராசூட் மற்றும் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும்.

🚀செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும்.

🚀இரண்டும் 14 நாட்கள் ஆராய்ச்சி செய்யும். ஆர்பிட்டார் சேட்டிலைட் மட்டும் 1 வருடம் ஆராய்ச்சி செய்யும்.

அடுத்தது என்ன?

ஆய்வுகள்:-

இன்னும் 45 செப்டம்பர் 7ம் தேதி நிலவில் இந்தியாவின் ரோவர் பிரக்யான் கால் வைத்து சாதனை படைக்கட்டும்..

புவியின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள சந்திரயான் -2 விண்கலத்தின் அடுத்தடுத்த கட்ட பணிகள் என்னென்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சந்திரயான் -2 விண்கலம் அடுத்த 16 நாட்கள் பூமியை சுற்றி வரும். இந்த பயணத்தின் போது அதன் பறக்கும் உயரம் மெல்ல, மெல்ல அதிகரிக்கப்படும். 16 வது நாளில் சந்திரயான் -2, நிலாவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும். பூமியில் இருந்து 3,84,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவை சந்திரயான் -2 ஐந்து நாட்களில் சென்றடையும். மெல்ல, மெல்ல சுற்றி வந்து நிலவின் சுற்று வட்டப் பாதையில் சந்திரயான்-2  நுழையும். இதற்கு அந்த விண்கலம் 27 நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

பூமியில் இருந்து ஏவப்பட்ட 48 வது நாளில், சந்திரயான் -2 விண்கலம் நிலாவுக்கு மேல் 100 கிலோ மீட்டர் உயரத்தில் இருக்கும். அப்போது அதில் இருந்து விக்ரம் கலம் பிரியும். சந்திரயான்-2 விண்கலத்தை பிரிந்த பின்னர் நான்கு நாட்கள் விக்ரம் கலம், நிலாவை சுற்றி, சுற்றி வந்து, தரையிறங்கும் இடத்தை ஆராயும். இதனிடையே 2379 கிலோ எடையும், நாள் ஒன்றுக்கு 1000 வாட்ஸ் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து உருவாக்கும் வல்லமையும் கொண்ட சந்திரயான்-2 விண்கலம், நிலாவின் துருவ வட்ட பாதையில் 100 கிலோ மீட்டர் உயரத்தில் தனது பயணத்தை தொடங்கி இருக்கும்.

நிலாவின் தென் துருவத்தை ஆராய்ந்து தரை இறக்கும் இடத்தை தேர்வு செய்யும் விக்ரம் விண்கலம், தென் துருவத்தில் உள்ள மேன்சினஸ் சி மற்றும் சிம்ளியஸ் என்  என்ற இரு பெருங்குழிகளுக்கு இடையே தரை இறங்கும். 1471 கிலோ எடையும், 650 வாட்ஸ் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யும் சக்தி வாய்ந்த விக்ரம் கலம், தரையிறங்கி ஆராயும்.

விக்ரம் கலம் தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்கு பின் அதிலிருந்து பிரக்யான் விண்கலம் நிலாவில் தரையில் இறங்கி ஊர்ந்து செல்லும். 27 கிலோ எடையும், ஆறு சக்கரங்களும் கொண்ட அந்த விண்கலம், 50 வாட்ஸ் மின்சக்தியை நாள் ஒன்றுக்கு சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. பிரக்யான், விக்ரம் கலத்தின் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து சென்று ஆராயும். 

விக்ரம், பிரக்யான் விண்கலங்கள் 14 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடும். பிரக்யான் கலம், தன்னில் கொண்டுள்ள  லேசரால் இயங்கும் ஸ்பெக்ட்ரோ மீட்டர், நீர்ம மூலக்கூறுகளை கண்டறியும் எக்ஸ் ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் ஆகியவை மூலம் நிலாவில் ஆய்வு மேற்கொள்ளும். தனது ஆய்வில் கண்டறியும் தகவல்களை விக்ரம் கலத்திற்கு அனுப்பி வைக்கும்.

இந்திய விண்வெளி ஆய்வின் முன்னோடி விஞ்ஞானியான விக்ரம் சாராபாயின் பெயரை தாங்கிய விக்ரம் கலம் , நிலாவில் ஏற்படும் நில அதிர்வுகளை ஆராயும் செல்ஸ்மோ மீட்டர், நிலாவின் வெப்பத்தை ஆராயும் கருவி, நிலாவின் மேற்பரப்பில் உள்ள தனிமங்களை கண்டறியும் கருவி ஆகியவற்றை கொண்டு ஆய்வு மேற்கொள்ளும். அந்த கலம் தனது ஆய்வில் கிடைக்கும் தகவல்கள், பிரக்யான் விண்கலம் சேகரிக்கும் தகவல்கள் ஆகியவற்றை சந்திரயான் -2 கலத்திற்கு அனுப்பி வைக்கும்.

நிலாவை ஓராண்டு காலத்திற்கு சுற்றி, சுற்றி வந்து ஆராயும் சந்திரயான் -2 விண்கலத்தில் ஆய்வு பணிக்கு ஏற்ற வகையில், மிகப்பெரிய பரப்பளவையும் ஊடுருவி ஆராயும் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், நிலாவின் பரப்பில் உள்ள தனிமங்களை கண்டறியும் சூரிய சக்தியால் இயங்கும் எக்ஸ் ரே கண்காணிப்பு கருவி, குறுகிய மற்றும் நீண்ட அலைவரிசை ரேடார், நிலாவின் பரப்பை படம் பிடிக்கும் ஐ.ஆர்.ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலாவின் எலக்ட்ரான்களை அளவிடும் கருவி, நிலாவில் விழும் சூரிய கதிர் குறித்து ஆராயும் மாஸ் ஸ்பெக்ட்ரோ மீட்டர், நிலாவின் பரப்பை முப்பரிமாணத்தில் படம் எடுக்கும் கேமிரா, தண்ணீர் மூலக்கூறுகளை கண்டறிய உதவும் கருவி ஆகிய 8 கருவிகள்  இருக்கும்.

அந்த விண்கலம் தனது ஆய்வில் கிடைக்கும் தகவல்கள், விக்ரம், பிரக்யான் கலங்கள் திரட்டி தரும் தகவல்கள் ஆகியவற்றை, கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அருகில் பையாலுவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு நொடிக்கு,நொடி அனுப்பி வைக்கும். 

நிலாவில்  நீர்ம மூலக்கூறுகள் குறித்து மேலும் ஆராய்வதே சந்திரயான்-2 திட்டத்தின் தலையாய நோக்கமாகும். இது தவிர நிலாவின் தென் துருவத்தில் ஆராய்வதன் மூலம் இந்த பூமி எப்படி உருவானது என்பதற்கான கூடுதல் ஆதாரங்களை திரட்ட இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

இது தவிர நிலாவின் தரையில் சில மீட்டர் ஆழம் வரை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் ஊடுருவி ஆராய்வது, மெக்னீசியம், கால்சியம், இரும்பு உள்ளிட்ட தனிமங்கள் எந்த அளவுக்கு நிலாவின் தரையில் உள்ளன என்பதை கண்டறிவது,நிலாவின் பரப்பில் எந்த அளவுக்கு எலக்ட்ரான் கலந்து உள்ளன, சூரிய கதிர் வீச்சால் நிலாவின் மேல் பரப்பில் அயனிகள் மாற்றம் எப்படி நடக்கிறது ஆகியவற்றையும் இஸ்ரோ ஆராய உள்ளது.  

சந்திரயான் -2 திட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நிறைவேறினால், அடுத்ததாக சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும். நிலாவுக்கு சென்று, தரையிறங்கி, அங்குள்ள மண், பாறை மற்றும் தனிமங்களை சேகரித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் மாபெரும் திட்டமே சந்திரயான் -3. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent