இந்த வலைப்பதிவில் தேடு

பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள்

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019






தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது.





இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர், ``2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சில மாணவர்களின் கையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டப்பட்டிருந்ததைப் பார்த்தவர்கள், அதுகுறித்து விசாரித்துள்ளனர்.



சாதியக் கயிறுகளுக்குத் தடை
சாதியக் கயிறுகளுக்குத் தடை
`பள்ளியில் விளையாடும்போது டீம் பிரிப்பதற்காக மாணவர்களைத் தேர்வு செய்வோம். அப்போது, எங்கள் சமூக மாணவனை அடையாளம் காண்பதற்காகக் கையில் கயிறு கட்டியுள்ளோம். இந்த அடையாளத்தை வைத்து எங்கள் சமூகத்தவர்கள் மட்டுமே ஒரு டீமாக விளையாடுவோம்’ எனப் பதில் வந்துள்ளது. ஒருசில இடங்களில் ஒரே சாதி மாணவர்கள், ஒரே டிசைன் மோதிரம், ரப்பர் பேன்ட் அணிந்துகொள்வது, நெற்றியில் திலகமிட்டுக் கொள்வது எனச் செயல்படுவதையும் பார்த்துள்ளனர்.



திடுக்கிட்டுப் போன ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், இப்பழக்கத்தை உடனடியாகத் தடைசெய்யுமாறு தமிழக அரசுக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனடிப்படையில்தான் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சாதி அடையாளத்தை வெளிப்படுத்தும்விதமாக, கையில் பல வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டிக்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்தப் பள்ளிகளில் இதுபோன்ற கயிறு கட்டும் பழக்கம் உள்ளது என்பதையும் அறிக்கையாகத் தாக்கல் செய்யுமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்களைக் கேட்டுள்ளோம். சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாகச் செயல்படுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.





பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் இருந்து கடந்த ஜூலை 31-ம் தேதி அளிக்கப்பட்ட இச்சுற்றறிக்கைக்கு, அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனடியாகப் பதில் அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலகங்கள் கேட்டுக்கொண்டுள்ளன. ஒருசில அரசுப் பள்ளிகளில் சாதிய அடையாளக் கயிறுகளுக்குத் தலைமை ஆசிரியர்கள் தடைவிதிக்கும் பட்சத்தில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்பால் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் நிலை இருந்து வந்தது. தற்போது பள்ளிக் கல்வித்துறையே சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமான கயிறுகள் அகற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent