இந்த வலைப்பதிவில் தேடு

கல்வித் தொலைக்காட்சியில் இவையெல்லாம் இடம்பெறலாமே! சில எதிர்பார்ப்புகள்

புதன், 28 ஆகஸ்ட், 2019

கல்வி தொலைக்காட்சி குறித்து ஓர் அலசல்!


குழந்தைகளையும் தொலைக்காட்சியையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். காலையில் சாப்பிடுவது முதல், இரவு உறங்கச் செல்வது வரை டிவியின் முன்புதான். பள்ளியில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தால், அவற்றில் பெரும்பாலும் டிவியில் உள்ள நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள்தான் இருக்கும். இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டுமா... அல்லது முறைப்படுத்த வேண்டுமா என்ற கேள்வி, எல்லாப் பெற்றோர்களுக்குமே வருவது இயல்பானதுதான். மாணவர்கள் டிவி பார்க்கும் நேரத்தில் பயனுள்ள நிகழ்ச்சியை அளிக்க, தமிழக அரசு தொடங்கியுள்ளதுதான் கல்வி தொலைக்காட்சி. அதன் தொடக்க விழா தமிழக முதல்வர், துணை முதல்வர் கலந்துகொள்ள, நேற்று முன்தினம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் முதல் அரசு கேபிள்கள் உள்ளிட்டவற்றின் மூலம், கல்வி தொலைக்காட்சி தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கிவிட்டது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலான இந்த ஒளிபரப்பில் என்னென்ன நிகழ்ச்சி எனப் பெரிய பட்டியல் அரசுத் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில், கதை களஞ்சியம், கல்வி உலா, கார்ட்டூன், ஆங்கிலம் பழகுவோம், வேலை வாய்ப்புச் செய்திகள். கலைத்தொழில் பழகு, கைத்தொழில் கற்றுக்கொள்வது, சூப்பர் டேலன்ட்ஸ் என மாறுபட்ட நிகழ்ச்சிகளை அளிக்க முடிவெடுத்திருக்கிறது. கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் எப்படி உள்ளன... இத்தொலைக்காட்சியின் வருகை மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்குமா என்று சிலரிடம் கேட்டோம்.

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும் ஆசிரியருமான சு.மூர்த்தி,

"பாடநூல் என்ற எல்லைக்கு வெளியிலிருந்து மாணவர்கள் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கற்றுக்கொள்வதற்கு கல்வி தொலைக்காட்சி பயன்படும். கல்வி தொலைக்காட்சியைத் தொடங்க அக்கறை எடுத்துக்கொண்ட பள்ளிக் கல்வி அமைச்சரின் முயற்சி பாராட்டுக்குரியது. தனியார் பள்ளிக் குழந்தைகளுக்கு தனிப்பயிற்சி, சிறப்பு வகுப்புகள், போன்ற வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைக்கப்பெறாத அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி தொலைக்காட்சியால் வகுப்பறைக்கு வெளியில் கற்றலுக்கான வாய்ப்பை உருவாக்குவது மிகத் தேவையான ஒன்று. இதன் வழியாக, தனியார் பள்ளிக் குழந்தைகளும் சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் போன்ற கடுமையான நிலையிலிருந்து விடுபட வாய்ப்பு அமையும் என்ற நம்பலாம். இப்படிப்பட்ட நம்பிக்கைகளை கல்வி தொலைக்காட்சி நனவாக்க வேண்டும்.

சு.மூர்த்தி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு

குறிப்பாக, குழந்தைகளின் தாய் மொழி அறிவை செழுமைப் படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைய வேண்டும். தனியார் பள்ளிகள், ஆங்கில மொழி ஆதிக்கம் நிகழ்ச்சிகளில் பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உரையாடல்களில் மொழிக் கலப்பு இல்லாமல் இருப்பதை அடிப்படை நெறியாகப் பின்பற்ற வேண்டும். கல்வி என்பது கருத்தை அல்லது தகவலைத் திணிப்பதாக இல்லாமல் குழந்தைகளின் படைப்பாற்றலை வெளிப்படுத்த செய்வதற்கு முதன்மை அளிக்க வேண்டும்.

நிகழ்ச்சித் தயாரிப்பில் மிகுந்த கவனம் அவசியம். அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நிகழ்ச்சித் தயாரிப்பில் முதன்மையான பங்கு இருக்க வேண்டும். ஏற்கெனவே பல்வேறு பொறுப்புச் சுமைகளுடன் உள்ள கல்வித்துறை ஆய்வு அலுவலர்களிடமிருந்து கல்வி தொலைக்காட்சி தனித்துச் செயல்படுவதும் அவசியமானது. அதே சமயம் தனியார் நிறுவனங்களை இப்பணியில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். ஏற்கெனவே சிறந்த வகையில் கல்வி தொலைக்காட்சியை நடத்தும் பிற நாடுகளிடம், நிறுவனங்களிடம் ஆலோசனைகள் பெறலாம். தொழில் நுட்ப ஆலோசனைகள் தவிர நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் வடிவம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதில் அனுபவம், ஆர்வம் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களை முறையாகப் பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் பங்களிப்பு, விருப்பம், தேடல் எல்லாவற்றையும் கல்வி தொலைக்காட்சி பிரதிபலிக்க வேண்டும்" என்று தம் கருத்தைப் பகிர்ந்துகொள்கிறார்.

கல்வியாளர் சங்கமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் பேசுகையில்,

"கல்விக்காக ஒரு தொலைக்காட்சி என்பது ரொம்ப நல்ல முயற்சி. ஆனால், அதைச் செயலாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கிறன. குறிப்பாக, பள்ளியில் மாணவர்களை டிவி பார்க்கச் சொல்வது. மாலை 3 மணியிலிருந்து மாணவர்களை கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க அறிவுறுப்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் அந்த நேரத்தில் விளையாட்டு வகுப்புகளாக இருக்கக்கூடியது. அந்த நேரத்தில் அறையில் அமர்ந்து டிவி பார்க்கச் சொல்வது சரிதானா என்ற கேள்வி எழுகிறது.

சதீஷ்குமார், கல்வியாளர் சங்கமம்
பாடங்களை டிவி மூலம் வித்தியாசமாகக் கற்றுத்தருவது என்பது கற்றல் முறையில் சில குழப்பங்களை விளைவிக்கலாம். மேலும், டிவி ஆசிரியரோடு, வகுப்பாசிரியரை ஒப்பிடும் மனநிலை மாணவர்களுக்கு வரக்கூடும். இவற்றைத் தவிர்க்க, மாலையில் வீட்டுக்குச் சென்று பார்ப்பது மட்டுமே என்றிருந்தால் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்" என்கிறார்.

கல்வியாளர் ஹெலிக்ஸ் செந்தில்குமார்,

"கல்வித் தொலைக்காட்சி என்பது, நிச்சயமாக வரவேற்கவும் பாராட்டவும் வேண்டிய நல்ல முயற்சி. பெரும்பாலும் அரசுப் பள்ளியின் செயற்பாடுகளை முன்னிறுத்தி நிகழ்ச்சிகள் அமைக்கப்படும். இதில் பாடப் புத்தகம் சார்ந்த நிகழ்ச்சிகளாக மட்டுமே அமைத்துவிடாமல், அதன் பார்வை விரிவடைந்ததாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மாணவர்களைச் சிந்திக்க வைப்பதற்கான நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும். தற்காலத்தில் பல வித புதிய திறன்கள் வந்துள்ளன. உதாரணமாக, டேட்டா அனலிடிக்ஸ் என்ற துறை வேகமாக வளர்ந்துவரும் படிப்பு. இதைக் கல்லூரியில் படிப்பதற்கான அடித்தளத்தைப் பள்ளிகளிலிருந்தே தொடங்க வேண்டும். மேலும், தொழிற்கல்வியை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சிகள், அப்பகுதி சார்ந்த தொழில் பயிற்சி வீடியோக்களுடன் அமைக்க வேண்டும்.

ஹெலிக்ஸ் செந்தில் குமார்

வேடிக்கையும் மாணவர்களுக்குத் தேவை. அதையும் ஃபைன் ஆர்ட்ஸ், 3D மாதிரியான விஷயங்களை மகிழ்ச்சியோடு கற்றுக்கொள்ள உதவும் நிகழ்ச்சிகள் வேண்டும். அதேபோல, மிக நல்ல குழந்தைகள் சினிமா, சிறுவர் எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் படிப்பதுபோல... என இன்னும் என்னென்ன ஆக்கபூர்வமாக இருக்கின்றனவோ அனைத்தையும் இதில் சேர்த்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்" என்கிறார்.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent