புற்றீசலாக துவங்கப்பட்டு வரும் கசாப்பு கடைகளில் விற்பனை செய்யப்படும் ஆடு மற்றும் கோழி கறிகள் ஆரோக்கியமானதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக உணவு முறையில் அசைவம் என்பது குறிப்பிட்ட நாட்களில் மட்டும் உண்ணும் பழக்கம் இருந்தது. அசைவ உணவிற்காக அறுக்கப்படும் ஆடுகள் ஆரோக்கியமானதா என கால்நடை மருத்துவர் சான்று அளித்த பிறகே, அதற்காக உள்ளாட்சி அமைப்புகளால் பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள ‘’ஸ்லாட்டர்’’ எனும் வதைக் கூடங்களில் மட்டுமே அறுக்கப்பட்டது.
திருவள்ளூர் நகரம் உட்பட்ட அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளில் ஆடுகள் அறுக்கும் ‘’ஸ்லாட்டர்’’ கூடத்தில் போதிய தண்ணீர் வசதி இல்லை. இதையே காரணமாக கூறி நகரில் அனைத்து வீதிகளிலும், கோயில் அருகாமையில் கூட திறந்த வெளியில் சாலை ஓரங்களில் கசாப்பு கடைகள் செயல்பட்டு வருகின்றன.
அண்மையில் சென்னையில் உள்ள அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் பல உணவகங்களில் ஆட்டுக்கறிக்கு பதிலாக கன்றுக்குட்டி, பூனை போன்றவற்றையும், கோழிக்கறிக்கு பதிலாக காகத்தின் கறியை பயன்படுத்துவதும், தயார் செய்து வைத்திருந்த கறிகளில் புழுக்கள் இருப்பதும், கசாப்பு கடைகளில் நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகளை அறுத்து கறியாக விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதே நிலை திருவள்ளூர் மாவட்டத்தில் பல நகரங்களில் அரங்கேறி வருகிறது.
இவ்வாறு சுகாதாரமற்ற அசைவ உணவுகளையும், ஆட்டுக்கறிகளை வாங்கி சாப்பிடுபவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்த்திட மாவட்டத்தில் புற்றீசலாக பெருகி வரும் கசாப்பு கடைகளை முறைப்படுத்தவும், ஆடுகளை மருத்துவ சான்று பெற்ற ஆடுகளை அதற்கென பிரத்யேகமாக உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்டுள்ள ‘’ஸ்லாட்டர்’’ கூடங்களில் அறுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ‘’ஸ்லாட்டர்’’ கூடங்களை தயார்படுத்த முன்வர வேண்டும். மக்களுக்கு சுகாதாரமான, தரமான அசைவ உணவு மற்றும் கறி கிடைக்க உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சிகளில் ஆடு வதை கூடம் அமைக்காமல் அலட்சியம்
பொதுமக்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்தும் விதமாக, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பை சேர்ந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் மட்டுமே, கால்நடைகள் வதை செய்யப்பட வேண்டும். குறிப்பாக, தயார் செய்யப்பட்ட இறைச்சி, தரமானதாக உள்ளது, என உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் சான்று வழங்கிய பின்னரே விற்பனை செய்ய வேண்டும். இதற்காக, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள, நகராட்சி, பேரூராட்சிகளில், பல லட்சம் ரூபாய் செலவில், நவீன ஆடு வதை கூடங்கள் கட்டப்படுகிறது.
இறைச்சிக்காக தேர்வு செய்யப்படும் ஆடுகள் முந்தைய நாள், வதை கூடத்தில் சேர்க்கப்படும். மறுநாள் கால்நடை டாக்டர்கள், இறைச்சிக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை பரிசோதித்து, ‘’நலமாக உள்ளது’’ என, தெரிவித்தால் மட்டுமே, இறைச்சிக்காக ஆடுகள் வதை செய்யப்படும். பின், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் உள்ள டாக்டர்கள், பரிசோதனை செய்து, சீல் வைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால், அரசின் விதிமுறைகள், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றுவது கிடையாது. மாறாக, ஊராட்சிகளில் ஆடு வதைக் கூடம் அமைக்க அரசின் உத்தரவை அதிகாரிகள் எவரும் பின்பற்றுவது கிடையாது. அதற்கான நிதி ஒதுக்கீடும், ‘’கையாடல்’’ செய்யப்படுகிறது. இதனால், ஊராட்சிகளில் திறந்தவெளியில் கால்நடைகள் வதை செய்யப்படுவதும், நோய் பாதித்த இறைச்சி விற்பனையும் அதிகரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக