இந்த வலைப்பதிவில் தேடு

ஏழை மாணவர்களுக்கு உதவும் கனவு ஆசிரியை

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019



எழுத்தாளராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் ஓர் அரசுப்பள்ளி ஆசிரியை, வசதியில்லாத மாணவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்.
சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி என்ற சிற்றூரில் வசித்து வரும் ம.ஜெயமேரி ஏழை மாணவர்ளுக்கு உதவி செய்யும் ஆசிரியை. அவரிடம் பேசியதில்இருந்து...


"விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள க.மடத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறேன்.

என் ஒரு வயதில், எனது தந்தை இறந்து விட்டார். எனது அம்மா தீப்பெட்டி ஒட்டி, மாவரைத்துக் கொடுத்து, இட்லி அவித்து விற்று, என்னையும் எனது உடன்பிறந்தவர்களையும் வளர்த்தார். வறுமையால் என் உடன்பிறந்தவர்களால் பெரிய அளவில் படிக்க முடியவில்லை.

ஆனால், என்னை ஆசிரியராக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவிற்கு இருந்தது. ஆனாலும், பணமில்லாததால் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உடனடியாக சேர்க்க முடியவில்லை. மேல்நிலை படிப்பு முடிந்த பின்னர் சில வருடங்கள் நானும், அம்மாவும் சேர்ந்து பல்வேறு வேலைகளைச் செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன்.

என் வாழ்க்கையில் ஏற்பட்ட இத்தகைய சம்பவங்கள்தான், நான் ஆசிரியரான பின்னர், வறுமையால் சிரமப்படும் மாணவர்களுக்கு உதவி செய்யும் எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. ஆனாலும், கிடைக்கும் ஊதியம் குடும்ப செலவுகளுக்குப் போதுமானதாக இருந்த நிலையில், பெருமளவு பணத்தை ஏழை மாணவர்களுக்காகச் செலவிட முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது.


பொதுவாகவே, எழுத்து, பேச்சு உள்ளிட்டவற்றில் எனக்கு அதிக நாட்டம் இருந்ததால் அவற்றின் மூலம் கிடைக்கும் பணத்தை மாணவர்களுக்காக செலவிடுவது என முடிவு செய்து அதன்பின் தொடர்ந்து இதழ்களில் எழுதவும், பட்டிமன்றங்களில் பேசுவதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். முதல்முதலாக நான் எழுதிய படைப்பிற்கு கிடைத்த பணத்தை கல்லூரி மாணவி ஒருவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்தினேன். அந்தப் பணம் அவருக்கு அன்றைய நிலையில் மிக பெரிய பணமாக இருந்தது. அவரின் மகிழ்ச்சியை உணர்ந்த நான், அதைத் தொடர்ந்து பிற பணிகளின் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு மாணவர்களுக்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு, உண்டு, உறைவிடப்பள்ளி மாணவர்களுக்கு என அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் புரிந்து கொண்டு வாங்கி கொடுக்கத் தொடங்கினேன்.

மாணவர்களுக்கும், பள்ளிக்கும் நான் செய்து வரும் பணிகளைப் பாராட்டி 2018 - ஆம் ஆண்டு தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது' எனக்கு வழங்கப்பட்டது. விருதுடன், பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்தது. அத்துடன், பட்டிமன்ற பேச்சாளருக்கு கொடுக்கப்படும் வெகுமதியைக் கொண்டு பள்ளிக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வாங்கி கொடுத்தேன்.


தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது', "ஒளிரும் ஆசிரியர் விருது', "லட்சிய ஆசிரியர் விருது', "வைர மங்கை விருது', "பாரதி விருது', "அப்துல் கலாம் விருது', "லயன்ஸ் கிளப் விருது' உள்ளிட்ட எண்ணிலடங்கா விருதுகளைப் பெற்றுள்ள இவர், "விருதுகளைப் பெறும் போது கிடைக்கும் சந்தோஷத்தை விட ஒரு மாணவருக்கு உதவும் பொழுது கிடைக்கும் சந்தோஷமே அதிகம். மேலும், செய்யும் உதவி சிறிதென்றாலும், அன்றையச் சூழலில் மாணவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கு பெரும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்'' என்கிறார் மகிழ்ச்சியாக.

புதிய பாடத் திட்ட மாநில கருத்தாளராகவும், மதுரைப் பண்பலை வானொலியில் தொடர்ந்து தன்னம்பிக்கை உரை நிகழ்த்துபவராகவும், மாவட்ட, ஒன்றிய ஆசிரியர் கருத்தாளராகவும், பன்முகத் திறமைகளுடன் வலம் வரும் இவரின் ஓர் ஆசை... இன்னும் பல கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் பலர் காலை உணவு சாப்பிடாமலேயே பள்ளிக்கு வரும் நிலையிலுள்ளனர். அத்தகையவர்களுக்காக காலையிலும் உணவு வழங்கும் திட்டத்தை அரசு பள்ளிகளில் கொண்டு வந்தால் ஏழை மாணவர்களின் கல்வி மேம்படும் என்பதுதான்.
- வி.குமாரமுருகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent