இந்த வலைப்பதிவில் தேடு

கல்வி தொலைக்காட்சி - ஆசிரியர்கள் ஷாக்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019



மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பொறுப்பு தனியாரிடம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கல்விக்கென இப்போதுதான் அரசே பிரத்யேகமாக ஒரு தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது. முன்னதாக, சட்டப் பேரவையில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டது.

ஆனால் அந்த நிதி, ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடர்ந்து நடத்தும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. அதனால், கல்வித் தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறந்த ஆசிரியர்களை கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் கடந்த ஒரு மாதமாக ஒளிபரப்பி வந்தனர். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி ஒளிபரப்பாகிறது. காலை 12 நிகழ்ச்சிகளும், நண்பகலில் 6 நிகழ்ச்சிகளும், மாலை 14 நிகழ்ச்சிகளும் ஒளிபரப்ப உள்ளனர். இதுவரை இந்த நிகழ்ச்சிகளை மாவட்ட  முதன்மைக் கல்வி  அலுவலர்கள் தயாரித்து வழங்கி வந்தனர். ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சிகளை தயாரிக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார். 

இந்த குழுவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவர் தலைமையில் இரண்டு தனியார் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்கிரிப்ட் மட்டுமே இனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தயாரிப்பார்கள். அந்த ஸ்க்ரிப்ட் படி வீடியோ எடுக்கும் பொறுப்பு யார் கையில் போகும் என்பது இன்னும் முடிவாகவில்லை. வெளியில் இருந்து ஸ்பான்சர்ஸ் பிடிக்க அரசு திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. குறிப்பாக நேற்றைய தொடக்க விழாவின் போது மேடையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சில மட்டுமே அரசுப் பள்ளிகள் மூலம் தயாரிக்கப்பட்டவை. பெரும்பாலான நிகழ்ச்சிகள் தனியார் நிறுவனம் தயாரித்தவை என்று கூறப்படுகிறது.  

வீடியோ எடுக்கும் பொறுப்பை ஒப்படைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்போடவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கான செலவினங்கள் எந்த வகையில் வரும் என்பதும் தெரியவில்லை. மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்கள் மூலம் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படும்போது, அது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புரியும்படியும், அவர்கள் பாடங்களை ஒட்டியும் இருக்கும். ஆனால் ்தனியாரிடம் நிகழ்ச்சி தயாரிப்பு பொறுப்பு ெசன்றால், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஏற்ப நிகழ்–்ச்சிகள் ஒளிபரப்பாகும் என்று அச்சம் இப்போதே தொற்றியுள்ளது. 

தவிரவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தனியார் தயாரிக்கத் தொடங்கினால், அதற்கான செலவை அரசு கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது ஊழல் நடக்க வாய்ப்பு ஏற்படும். மேலும், அரசே பணம் கொடுக்கிறது என்ற நிலை உருவாகும் போது, தனியார் நிறுவனங்கள் இடையே போட்டி நிலவும். அதனால், நிகழ்ச்சிகள் தயாரிப்பில் பல குளறுபடிகள் ஏற்படும். நிகழ்ச்சிகளும் தரமாக இருக்காது. 

பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இருக்காது. அது தனியார் பள்ளிகளை சார்ந்து இருக்கும். அல்லது தனியார் பள்ளிகள் நிகழ்ச்சி தயாரிப்பில் மூக்கை நுழைக்கும் நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும், கல்வி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சிகளை தயாரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு தீவிரமாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent