இந்த வலைப்பதிவில் தேடு

சென்னையில் நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல் அலைகளால் பரபரப்பு; என்ன காரணம்?

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019



சென்னை ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நேற்று (ஆக. 18) கடல் அலைகள் நீல நிறத்தில் மின்னியதாகத் தகவல் பரவியது. இதனால் ஏராளமான மக்கள் இரவில் கடற்கரையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைகளில் உள்ள ஈஞ்சம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கடலலைகள் நீல நிறமாக மாறி, மின்னுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இரவில் கடற்கரையில் குவிந்தனர்.

கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் போட்டோ, வீடியோக்களையும் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில் கடல் அலைகள் நீல நிறமாக ஒளிர்ந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் வறீதையாவிடம் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில் கேட்டோம்.

அதற்கு விரிவாகப் பேசிய அவர், ''ஒளிர்தல் என்ற நிகழ்வின் அடிப்படையில் இது நிகழ்ந்துள்ளது. இயற்கையாகவே நிறைய உயிரினங்கள் ஒளியை உமிழ்வதுண்டு. மின்மினிப் பூச்சிகள், வெப்பத்துக்குப் பதிலாக ஒளியை சக்தியாக வெளியிடுகின்றன.

ஒளி உமிழும் நுண்ணுயிரிகள் கடலில் காணப்படுகின்றன. அதுதவிர சில புழு இனங்கள் இனப்பெருக்க காலங்களில் ஒளியை உமிழும். ஆழக்கடல்களில் சூரிய வெளிச்சம் அதிகமாகப் படாத இடங்களில் சிலவகை மீன்களும் ஒளியை உமிழும்.



குறிப்பிட்ட சில பருவ காலங்களில், ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும்போதுதான் இந்த ஒளி உமிழ்தல் நடைபெறுகிறது. இது கமர் என்றும் வேறு சில இடங்களில் கவர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை உமிழும் பாக்டீரியாக்கள் சில நேரங்களில் வலையில் மாட்டிக்கொள்ளும். அப்போது வெளியாகும் ஒளியைக் கண்டு, மீன்கள் தப்பித்து விடும். உணவு சேகரிக்க, வேட்டையாட, எதிரியின் கவனத்தை திசை திருப்ப, இனப்பெருக்கக் காலத்தில் இணையை ஈர்க்க… இப்படிப் பல நோக்கங்களுக்கு ஒளி உமிழும் உறுப்புகள் உதவுகின்றன.

இந்த பாக்டீரியாவை உண்ணும் மீன்களின் எச்சத்தில் ஒளி உமிழும் பண்பு மிச்சமிருக்கும். அதுவும் சில நேரங்களில் ஒளி வீசும்.

சென்னையில் பெரிய அளவில் ஒளிர்தல் நடைபெறக் காரணம் என்ன?
நீண்ட காலமாக இங்கு ஒளிர்வு நடைபெறாமல் இருந்திருக்கலாம். குறிப்பிட்ட சிறிய அளவிலான காலநிலை மாற்றத்தால் நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். அதனால் தொலைதூர பாக்டீரியாக்கள் இங்கு வந்து ஒளிர்ந்திருக்கலாம்.

பாக்டீரியாக்கள் ஒன்றிணைந்து திட்டுத்திட்டாக இணைந்து ஒளியை உமிழ்ந்ததால் நீல நிறம் ஏற்பட்டிருக்கும்.

இது இயற்கையான நிகழ்வுதான். பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் எண்ணிப் பயம் கொள்ளத் தேவையில்லை'' என்றார் வறீதையா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent