ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்திருப்பது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு காரணம் கேள்வித்தாளா அல்லது தேர்வு எழுதியோரின் திறமையின்மையா என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வித்துறையின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 32 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தனியார் சுயநிதி பள்ளிகள் 12 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 1 கோடியே 20 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். 2009ம் ஆண்டு மத்திய அரசும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அறிமுகம் செய்தது. 2010ம் ஆண்டில் மாநில அரசுகள் அதை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதின் பேரில், தமிழகத்திலும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள், தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கானது. இரண்டாம் தாள், 6 முதல் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கானது. ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோர் இடைநிலை ஆசிரியர்கள் டிடிஎட் (கல்வியியல் பட்டயத் தேர்வு) படித்து இருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பட்டப் படிப்புடன், பிஎட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபிறகுதான் ஆசிரியர் பணி நியமனம் பெற முடியும். தனியார் பள்ளிகளிலும் பணியாற்ற முடியும். இந்த சான்று 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோர் 7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுதி தகுதியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றுவிட்டால் பின்னர் அவர்கள் 7 ஆண்டுக்கு பிறகு தகுதித் தேர்வு எழுத வேண்டியதில்லை.
முதல் தாள் எழுதுவோருக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பாடங்கள் மற்றும் குழந்தைகள் உளவியல் பாடங்களும் வைக்கப்பட்டுள்ளன. பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாளுக்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் உள்ள பாடங்கள் மற்றும் உளவியல் பாடங்கள் வைக்கப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு வரை தகுதித் தேர்வில் இடம் பெற்ற பாடத்திட்டம் என்பது பழைய பாடபுத்தகங்களை அடிப்படையாக கொண்டது. தற்போது புதியதாக மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. புதிய பாடத்திட்டம் மிகவும் கடினமாக உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தகுதித் தேர்வில் சரியாக பதில் எழுத முடியாமல் போனதாக தேர்வு எழுதியோர் தெரிவிக்கின்றனர். மேலும், கேள்வித்தாளை வடிவமைக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கல்லூரி ஆசிரியர்கள். அவர்கள் கல்லூரி பாடங்களை அடிப்படையாகக் கொண்டு கேள்வித்தாளை தயாரித்து விட்டதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று அரசு அறிவித்த பிறகு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர்க்கை குறையத் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துவிட்டது. முன்பெல்லாம் கவுன்சலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடந்த காலம் போய், இப்போது, மாணவர்களின் வீட்டுக்கே தபால் அனுப்பி சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது. அதேபோல பட்டதாரிகளை பொருத்தவரையில் 6 லட்்சம் பேர் பிஎட் பட்டம் முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு கணக்கின்படி பார்த்தால் வேலைவாய்ப்பு அலுவலகத்தி–்ல மொத்தம் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்து ஆசிரியர் பணிக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் தான் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி வருகின்றனர்.
கடந்த முறை தகுதித் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால், 50 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டுக்கான தேர்வில் 99 சதவீதம் தேர்ச்சி பெறவில்லை.
இந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், இடம் பெற்ற இரண்டு தாள்களிலும் சுமார் 6 லட்சத்துத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆனால் 600க்கும் மேற்பட்டவர்கள் தான் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கல்வித்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பிஎட் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போரில் பெரும்பாலானவர்கள் கல்லூரிக்கு செல்லாமலேயே சான்றுகளை பெற்றுவிடுகின்றனர். பெரும்பாலான பிஎட் கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அது குறித்து கல்வியியல் பல்கலைக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை.
குறிப்பாக தமிழகத்தில் இயங்கும் 100க்கும் மேற்பட்ட பிஎட் கல்லூரிகள் நேற்றுவரை அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான கட்டணத்தை செலுத்தவில்லை. பிஎட் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்று அங்கீகாரத்தையும் புதுப்பிக்காமல் உள்ளனர். இதனால் பிஎட் பல்கலைக் கழகத்துக்கு பல கோடி கட்டணத் தொகை வராமல் நிலுவையில் உள்ளது. அங்கீகாரம் பெறமல் எப்படி ஒரு பிஎட் கல்லூரி இயங்க முடியும் என்று பல்கலைக்கழகம் தரப்பில் இருந்து இதுவரை யாரும் கேள்வி எழுப்பவே இல்லை. ஆனால் பிஎட் கல்லூரிகள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கின்றனர். தனியார் பிஎட் கல்லூரிகளை ஆண்டுக்கு ஒரு முறை நேரில் சென்று ஆய்வு செய்து அங்கீகாரம் புதுப்பிக்கும் சான்று வழங்க வேண்டிய பிஎட் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் மட்டுமே பல்கலைக் கழகத்தை நிர்வகித்து வருகின்றனர்.
பிஎட் கல்லூரிகளுக்கு ஆய்வுக் குழு அனுப்பி வைக்கும் அதிகாரிகள் தங்கள் விருப்பம் போல நடந்து கொள்கின்றனர். குறிப்பாக ஆண் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்லும்போது அவர்களுக்கு வேண்டிய பெண் அதிகாரிகளையும் உடன் அழைத்து செல்கின்றனர். அவர்கள் கல்லூரிகளுக்கு செல்வதற்கு பதிலாக தனியார் விடுதிகளில் அறை எடுத்து தங்குகின்றனர். அதற்கான செலவுகளை தனியார் பிஎட் கல்லூரி நிர்வாகத்தினர் கவனிக்க வேண்டும். ஆய்வு செய்து சான்று வழங்க வேண்டும் என்றால் ஆண் அதிகாரிகளுக்கு ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டும். பெண் அதிகாரிகளுக்கு விலைமதிப்புள்ள பட்டுப்புடவைகள் மற்றும் ரொக்கம் கொடுக்க வேண்டும். அப்ேபாதுதான் பிஎட் கல்லூரிகளுக்கான ஆய்வு சான்று கிடைக்கும். ஆய்வுக்கு சென்று விடுதிகளில் தங்கும் ஆண், பெண் அதிகாரிகள் அடிக்கும் லூட்டிகள் குறித்து பல்கலைக் கழகத்துக்கு புகார்கள் வந்தும் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை.
இதுபோல செலவுகளை செய்து ஆய்வு சான்றுகளை வாங்கும் கல்லூரி நிர்வாகத்தினர், அதை மாணவர்களிடம் தான் கறக்கின்றனர். அதனால் பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு வராமலேயே பட்டம் பெற்று வருகின்றனர். அவர்கள் தகுதித் தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதேபோல ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் நிலையும் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவில் படித்த ஆசிரியர் பயிற்சி மாணவர்களின் விடைத்தாளை திருத்திய அந்த மாநிலத்தின் தேர்வு வாரியம், விடைத்தாள் முழுவதும் மாணவர்கள் விடைக்கு பதிலாக, கேள்விகளை பக்கம் பக்கமாக எழுதியிருந்ததை கண்டுபிடித்தனர். அதற்கு பிறகு வெளி மாநிலத்தில் படித்து சான்று பெற்றால் ெ்சல்லாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதனால் தமிழக மாணவர்கள் தமிழகத்தில் ஆசிரியர்் பயற்சி முடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தமிழகத்தில் இயங்கும் சில தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பெரும்பாலான மாணவர்கள் பணம் செலுத்திவிட்டு பள்ளிக்கு செல்வதில்லை. ஆண்டு முடிவில் சான்று பெற்று வருகின்றனர். இப்படி சான்று பெற்று வரும் பெரும்பாலானவர்கள் தான் ஆசிரியர் தகுதித் தேர்வை அதே கண்ணோட்டத்தில் பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தான் ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடக்கின்றன என்கின்றனர். இதன்படி பார்க்கும்போது இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதியோரில் பலர் விடைத்தாளில் பல்வேறு சந்தேகத்துக்கு இடமான குறியீடுகளை எழுதி வைத்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியமே தனது அறிக்கையில் கூறியுள்ளது. பாடத்திட்டங்களை படிக்காமல் குறுக்கு வழியில் தேர்ச்சி பெறலாம் என்ற தவறான நோக்கில் பலர் இந்த தேர்வை அணுகியுள்ளனர்.
இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் எப்படி ஆசிரியர்களாக பாடம் நடத்துவார்கள் என்றும் கேள்வி எழுப்புகின்றனர். தமிழகத்தில் இதுவரை நடந்த போட்டித் தேர்வுகளில் இதுபோல 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த நிகழ்ச்சி இப்போதுதான் நடந்துள்ளது. இது நமது கல்வி மற்றும் கற்பித்தலுக்கு நேர்ந்துள்ள சவாலாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக