ஒரு காலத்தில் ஒருவருக்கு லேசாகத் தொப்பை விழுந்தால், `என்னப்பா... நாப்பது வயசுக்குள்ளயா?’ என்று ஆச்சர்யமாகக் கேட்பார்கள். இன்றைக்கு இளம் வயதினரைக்கூட விட்டுவைக்காமல், பரவிக்கொண்டேயிருக்கிறது தொப்பை. அதோடு உடல் பருமன் பிரச்னையும் அதிகமாகியிருக்கிறது. பல உடல்நலக் கோளாறுகளுக்கு அடித்தளமாக இருப்பவை இந்த இரு பிரச்னைகளும். உடல் பருமனைக் குறைக்கவும், தொப்பையைக் குறைக்கவும் யோகாவில் சில வழிமுறைகள் இருக்கின்றன.
உடல் பருமன் மட்டுமல்ல, ஒருவருக்குத் தொப்பை போடுவதற்கும் உடல் உழைப்பு இல்லாமல் பல மணி நேரம், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதுதான் முக்கியக் காரணம். அதோடு, சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமலிருப்பது, அளவுக்கு அதிகமாக உண்பது, நேரம் தவறித் தூங்குவது, உடலுக்குக் கேடு விளைவிக்கும் உணவுகளைத் தேடித் தேடி உண்பது, அதிக கெட்டக் கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்பது போன்றவையும் உடல் பருமன், தொப்பைக்கு முக்கியக் காரணங்கள். இன்னும் மனஅழுத்தம், ஹார்மோன் குறைபாடுகள், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு உடல் எடை அதிகரித்தல்... என வேறு சில காரணங்களும் இருக்கின்றன.
உடல் எடையைக் குறைக்க தினமும் சில பயிற்சிகளைச் செய்யவேண்டியது முக்கியம். யோகா, உணவுக் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாகக் கடைப்பிடித்தால் ஒரே மாதத்தில் இரண்டு கிலோ வரை எடை குறைக்கலாம். அதே நேரத்தில் எடை குறைதல் என்பது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு தொடங்குவது நல்லது.
சில யோகா பயிற்சிகள், பலன்கள்...
மற்ற பயிற்சிகளைப்போல் இல்லாமல் யோகா பயிற்சிகளில் மிக மெதுவாகத்தான் எடை குறையும். ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் பயிற்சிகளே உடல் எடையைக் குறைக்கப் போதுமானவை. ஒரே ஒருநாள் பயிற்சி செய்துவிட்டு, எடை மெஷினில் ஏறி நின்று எடை பார்ப்பது உதவாது. தினமும் தவறாமல் யோகா பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
கீழே குறிப்பிட்டிருக்கும் சில பயிற்சிகளைச் செய்தால் தொப்பை குறையும்; இடுப்பைச் சுற்றியிருக்கும் ஊளைச்சதைகள் குறையும். யோகா பயிற்சிகளை ஏற்கெனவே தெரிந்துவைத்திருப்பவர்கள், அவற்றை வீட்டிலேயே செய்யலாம். ஆனால், புதிதாக கற்றுக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முறையாக யோகா செய்வதே சிறந்தது.
சூர்ய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் மொத்தம் 12 நிலைகளைக் கொண்டது. சூரிய நமஸ்காரத்தின் அனைத்து ஆசனங்களும் சூரியனுக்கு நன்றி செலுத்துவதுபோல் அமைந்தவை.
முதலில் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வதுபோன்ற நிலை. நேராக நிமிர்ந்து நின்று கைகளைக் கூப்பி மூச்சை உள்ளிழுத்து வெளியேவிட வேண்டும். இரண்டாம்நிலை - இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தி பின்னோக்கி வளைய வேண்டும். மூன்றாம் நிலை - முன்னோக்கி வளைய வேண்டும்; வளைந்து, இரு கைகளாலும் குதிகாலின் பின்புறம் பிடித்து, முகத்தை கால்களோடு ஒட்டியநிலையில் வைக்க வேண்டும். நான்காம் நிலை - இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி ஒரு காலை மட்டும் பின்னோக்கி வைக்க வேண்டும் (படத்தில் காட்டியுள்ளதுபோல்).
ஐந்தாம் நிலை - இரண்டு கைகளையும் ஊன்றி, இரண்டு கால்களையும் உயர்த்திவைக்க வேண்டும்; இப்போது கைகளை லேசாக வளைத்து, உடலைக் கீழே இறக்க வேண்டும். ஆறாம் நிலை - முழங்கால் தரையிலிருக்க, நெஞ்சுப்பகுதியை உயர்த்த வேண்டும். ஏழாம் நிலை - முந்தைய நிலையில் இருந்தபடி மேல்நோக்கிப் பார்க்க வேண்டும். எட்டாம் நிலை - இரண்டு கால்களையும் உயர்த்தி படத்தில் காட்டியுள்ளதுபோல் நிற்க வேண்டும். கடைசி நான்கு நிலைகளையும் முதல் நான்கு நிலைகளைப்போல் செய்ய வேண்டும்.
ஒரு நிலையிலிருந்து கடைசிநிலை வரை செல்லும்போது முழுத் தண்டுவடத்துக்கும் அனைத்து மூட்டுகளுக்குமான ஒரு பயிற்சியாக இருக்கும். சூரிய நமஸ்காரம் எலும்புகளைப் பலப்படுத்தும்; தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கும்.
பாதஹஸ்தாசனம்
நின்று கொண்டு செய்யும் பயிற்சி. நேராக நிமிர்ந்து நின்று, கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி, மூச்சை வெளியிட்டபடி முன்னோக்கி வளைய வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்தால் அடிவயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு குறையும்.
ஜானுசிரசாசனம்
அமர்ந்த நிலையில் செய்யும் பயிற்சி. ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு, ஒரு காலை நீட்டி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி முன்னோக்கி வளைய வேண்டும். வளைந்து படத்தில் காட்டியுள்ளதுபோல் ஒரு கையால் இன்னொரு கையைப் பற்றிக்கொள்ள வேண்டும். 30 விநாடிகள் இதே நிலையில் இருக்க வேண்டும். இதேபோல் இரண்டு பக்கமும் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி, தொப்பை குறைக்க உதவும்.
பவனமுக்தாசனம்
படுத்த நிலையில் செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் கோர்த்துப் பிடித்து இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் செய்ய வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும்.
தனுராசனம்
குப்புறப்படுத்து செய்யும் பயிற்சி. படத்தில் காட்டியுள்ளதுபோல் இரண்டு கால்களையும் மடித்து கைகளால் கோத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். இயல்பான சுவாசத்தில் 30 விநாடிகள் அப்படியே இருக்க வேண்டும். இதேபோல் மூன்று முறை செய்ய வேண்டும். இந்தப் பயிற்சி வயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.
உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க மிக எளிமையாக செய்யக்கூடியது யோகா. இந்தப் பயிற்சிகளைத் தனியாக வீட்டில் செய்வது நல்லது. இந்தப் பயிற்சிகளை யோகா மருத்துவர்களிடம் கற்றுக்கொண்டு செய்யவேண்டியது அவசியம்.
யோகா பயிற்சிகளுடன் நடைப்பயிற்சியும் செய்தால், விரைவில் பலன் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு இரண்டு கிலோ வரை எடை குறைப்பது நல்லது, சரியானது. அதற்குப் பதிலாக நிறையப் பயிற்சிகளைச் செய்து, வேகமாக எடையைக் குறைத்து, மீண்டும் வேகமாக எடையை அதிகரிப்பது நல்லதல்ல. பயிற்சிகளுடன் முறையான உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதோடு போதுமான உறக்கமும் வாழ்வியல் முறை மாற்றங்களும் தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக