இந்த வலைப்பதிவில் தேடு

10 மாணவர்கள் உள்ள பள்ளி ஆசிரியர்கள் வேறு இடத்திற்கு மாற்றம்: பள்ளிகல்வித்துறை உத்தரவு

புதன், 11 செப்டம்பர், 2019





தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள், அதற்குகீழான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்து, அங்கு உடனடியாக பணியில் ஈடுபட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது ஆசிரியர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.



மாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் நிதி அயோக் அறிவுறுத்தல்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல்படியாக 46 பள்ளிகள் நூலகமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் பள்ளிகளை மூடும் அடுத்த கட்டநடவடிக்கை இருவாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.  

அதன்படி இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வௌியானது. இதற்காக 10 மாணவர்கள், அதற்குகீழ் மாணவர்கள் பள்ளிகள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில் குறிப்பிட்ட உத்தரவால் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும், பள்ளிகளில் அதிக பணி அனுபவம் உள்ள ஆசிரியரை அதே பள்ளியில் தொடர வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணி அனுபவம் குறைவாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள ஆசிரியர்களை  அழைத்து பேசியுள்ளனர். புதிய பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  தொடர்பாக ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் வழங்கியுள்ளனர்.



ஏற்கனவே ஒன்றிய அடிப்படையிலும், அதற்கடுத்தபடியாக மாவட்ட அடிப்படையிலும் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி அனுபவம் அடிப்படையில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் குறிப்பிட்ட ஆசிரியர்களை அதே ஒன்றியத்துக்குள் பணியிடமாற்றம் செய்யாமல் வேறு ஒன்றியத்துக்கு பணியிடமாற்றம் செய்வதால் குறிப்பிட்ட ஆசிரியர்கள் சீனியாரிட்டி பாதிக்கப்படும்.  இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர், விடுப்பு எடுக்கும்பட்சத்தில் மற்றொரு ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். 



இந்நிலையில் இவற்றை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றும்பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போதை நடவடிக்கையால் கல்வித்தரம் மேலும் குறையும் அபாயம் உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றி, அங்கு உடனடியாக பணியில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை நேற்று மாலை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent