இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளி முதல் கல்லூரி வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு - ஐகோர்ட்டு உத்தரவு

சனி, 28 செப்டம்பர், 2019




தமிழகத்தில் கடந்த ஆண்டு 320 சிவில் நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்ற 3 பேர், தாங்கள் சட்டப்படிப்பை தமிழில் படித்ததாகவும், தேர்வுகளை தமிழில் எழுதியதாகவும் கூறி, தங்களுக்கு தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.க்கு) கோரிக்கை விடுத்தனர்.


இவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டை கோர முடியுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி, இதுதொடர்பாக 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கை பரிந்துரை செய்தனர்.

அதன்படி, இந்த வழக்கை விசாரித்த நீதிபகள் ஆர்.சுப்பையா, சி.வி.கார்த்திக்கேயன், சி.சரவணன் ஆகியோர் கொண்ட முழு அமர்வு விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அரசு வேலைவாய்ப்புகளில் தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதியதை மட்டும் ஆதாரமாக வைத்துக்கொண்டு இந்த இடஒதுக்கீட்டை பெற உரிமை கோர முடியாது. தமிழ் வழியில் படித்ததற்கான உரிய சான்றிதழ்களை அந்தந்த கல்வி நிறுவனங்களிடம் பெற வேண்டும்.


அவ்வாறு சான்றிதழ் பெறாதவர்களும், இந்த இடஒதுக்கீட்டு சலுகையை பெற முடியாது. ஒருவர் பள்ளி, கல்லூரி தேர்வுகளையும், போட்டித்தேர்வையும் தமிழில் எழுதினால் மட்டும் இந்த சலுகையை கோர முடியாது. அந்த பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அந்த மாணவர் தமிழ் வழியில் தான் படித்தார் என்பதற்கான சான்றிதழை பெற வேண்டும்.

அப்போது அந்த சலுகைகளை பெற முடியும். எனவே, ஒரு மாணவர் பள்ளி முதல் கல்லூரி வரை முழுமையாக தமிழ் வழியில் பயின்று இருந்தால் மட்டுமே, அவருக்கு வேலை வாய்ப்பில் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக வழங்கப்படும் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent