அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என விதிகள் கொண்டு வந்தால் என்ன? ... ஏன் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரக் கூடாது?
தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 207 இடங்களும் நிரப்பப்படாததால், அவை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல் முருகன் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `மூன்று கட்ட கலந்தாய்வுக்குப் பின், காலியிடங்கள் இருந்தால் ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். ஆனால், அந்தப் பட்டியலின் அடிப்படையில் நிரப்பப்பட்டதா என்பது தெரியவில்லை’ என்றார். தொடர்ந்து தமிழக அரசு தரப்பில், `வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பாக நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்’ தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `207 இடங்களும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது’ எனக் குற்றம்சாட்டினார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், `பள்ளிப்படிப்புக்குத் தனியார் பள்ளிகளுக்குச் செல்பவர்கள், மருத்துவப் படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளை நாடுவது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பினர். மேலும், `அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கும் வகையில் ஏன் விதிகள் வகுக்கக் கூடாது.
தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றனர். இதையடுத்து விசாரணை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நீதிபதி கிருபாகரன், ``எல்லோரும் டாக்டராக வேண்டும் என்று விரும்புவார்கள். நான்கூட டாக்டராக வேண்டும் என்று விரும்பினேன். நல்ல மதிப்பெண் எடுக்காததால் நீதிபதி ஆகிவிட்டேன்!” என்று கூறியிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக