இந்த வலைப்பதிவில் தேடு

முதல் பருவ விடுமுறையில் அனைத்து ஆசிரியர்களும் செய்ய வேண்டிய, பணி சார்ந்த சில முக்கிய கடமைகள்

புதன், 25 செப்டம்பர், 2019





தற்போது கல்வித்துறையின் செயல்பாடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப் பட்டு வருகின்றன.

முக்கியமாக, பள்ளி சார்ந்த செயல் பாடுகள் அனைத்தும் இணைய வழியாக பதிவேற்றம் செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு நடைமுறை படுத்தப் பட்டு வருகின்றன.

தற்போது எமிஸ் இணையதளம் வாயிலாக மாணவர் விவரங்களை பதிவு செய்தல், மாணவர் சேர்க்கை - நீக்கல் தகவல்கள், ஆசிரியர் - மாணவர் வருகையை பதிவு செய்தல், விலையில்லா பொருள்களின் தேவைப்பட்டியல், வழங்கிய விவரம், வாராந்திர கால அட்டவணை பதிவேற்றம் போன்றவை நடைமுறை படுத்தப் பட்டு வருகின்றன.

அடுத்ததாக மாணவர் வருகையை குறுஞ்செய்தி மூலம் பெற்றோருக்கு தெரிவித்தல் திருச்சி மாவட்டத்தில் அறிமுக படுத்தப் பட உள்ளது.

இதனைத் தொடர்ந்து தினசரி பள்ளியில் நடத்தப்பட்ட பாடங்கள் விவரம், வீட்டுப் பாடம், மாணவர் பெற்ற மதிப்பெண்கள் போன்றவையும் எமிஸ் இணையதளம் வாயிலாக பெற்றோருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் திட்டமும் அரசிடம் உள்ளது.

ஆகவே இத்தகைய செயல்பாடுகள் அனைத்தையும், பள்ளித் தலைமை ஆசிரியரோ அல்லது கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியரோ பள்ளி முழுமைக்கும் பதிவேற்றம் செய்வது கடினம்.

ஆகவே இந்த விடுமுறை காலத்தில், எமிஸ் தொடர்பான தகவல்களை எவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்வது? பயோ மெட்ரிக் தொடர்பான தகவல்களை எவ்வாறு இணையத்தில் பதிவேற்றம் செய்வது? இணைய வழியாக எவ்வாறு விடுப்பு அல்லது மாற்றுப் பணி கோரி விண்ணப்பிப்பது? என்பது பற்றிய அறிவை மேம்படுத்திக் கொள்வதுடன், தெரிந்த ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றுக் கொண்டால், கல்வித் துறை நடைமுறை படுத்தும் இணைய வழி தகவல்கள் பதிவேற்றத்திற்கு, யாரையும் நம்பியிராமல், அவரவர் வகுப்புக்குரிய பணியை சம்பந்தப் பட்ட ஆசிரியரே மேற்கொள்ள முடியும்.



இதனால் தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் கணினி இயக்கத் தெரிந்த ஆசிரியர்களின் பணிச்சுமையும் குறையும்.


திருச்சி மாவட்டத்தைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களிலும், மாணவர் வருகை குறுஞ்செய்தி மூலம், பெற்றோருக்கு அனுப்பும் திட்டம் நடைமுறை படுத்தப் பட உள்ளதால், மாணவரின் பெற்றோர் தற்போது பயன்படுத்தும் கைபேசி எண்ணை பெற்று, எமிஸ் இணையத்தில் சரிபார்ப்பது நல்லது. மாற்றமிருந்தால், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஆதார் அட்டையில், அவர்கள் பெயருக்கு பின், தந்தை பெயரோ அல்லது கணவர் பெயரோ இடம் பெற்றுள்ளது.

தற்போது ஆதார் மிக முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், அவர்கள் பெயர் மட்டுமே (இனிஷியலுடன்) ஆதார் அட்டையில் இருக்குமாறு, மாற்றம் செய்து கொள்வது நல்லது.



இத்துடன் ஆதார் அட்டையில், கைபேசி எண் மாற்றம், முகவரி திருத்தம் மற்றும் பிற வகையான திருத்தங்களை, உரிய ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மேற்கொள்வது நல்லது.

வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சார்ந்த நிலுவையில் உள்ள பணிகளை முடித்தல், பணிப் பதிவேடு தகவல்கள் சரிபார்ப்பு, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஊதியம் மற்றும் இதர பணப்பலன்களை வங்கிக் கணக்கு புத்தகத்தில் சரிபார்த்தல், 2019-20 ஆம் நிதி ஆண்டிற்குரிய வருமான வரியை தோராயமாக, கணக்கிட்டு அதற்கேற்ப ஊதியத்தில் பிடித்தம் செய்திட திட்டமிடல், இரண்டாம் பருவத்திற்குரிய பாடங்களை நடத்துவதற்குரிய ஆயத்தப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளுடன், வழக்கமான உடல் நல பரிசோதனைகள், (முக்கியமாக இரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு இவற்றை கட்டுப்பாட்டில் வைத்தாலே, மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்) இவற்றுடன் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் செயல்களில் ஈடுபடுதல் நல்லது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent