இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் தின ஸ்பெஷல்: நல்லாசிரியரின் நற்பண்புகள்! '

வெள்ளி, 6 செப்டம்பர், 2019




எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்', 'நாட்டின் எதிர்காலம் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தீர்மானிக்கப்படுகிறது', 'மாணவர்கள் கல் என்றால் ஆசிரியர்கள் சிற்பிகள்' போன்ற பொன்மொழிகள் ஆசிரியர்களின் திறமையை பறைசாற்றுகின்றன. நமது பள்ளிக் காலத்தில் மட்டுமின்றி, நமது வாழ்க்கை முழுவதுமாக யாரோ ஒருவர் நமக்கு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.



இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்நாளில், ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆசிரியரை நினைவு கூற வேண்டியது அவசியமாகிறது. ஆசிரியரின் பணி என்பது மகத்தான பணி என்று கூறக் காரணம், இந்தப் பணிக்கு பொறுமை, அர்ப்பணிப்பு, கடமையுணர்வு அனைத்துமே மிக அவசியம். 



நாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. தற்போதைய விஞ்ஞான உலகில், பெற்றோர்கள் குழந்தைகளை முழுவதுமாக கவனித்துக் கொள்வது என்பது அரிதான விஷயமாகிறது. தாய், தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் நிலையில், இரண்டு அல்லது மூன்று வயதிலேயே குழந்தைகள் ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடுகின்றனர். அந்த வகையில், நவீன காலகட்டத்தில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. ஆசிரியர்களில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி சற்று சவாலானது தான். 






ஒரு குழந்தையின் தொடக்கக் கல்வி சிறப்பாக அமையும் பட்சத்தில் அந்த குழந்தை இந்த சமூகத்தில் ஒரு வெற்றியாளனாக வர முடியும். குழந்தைக்கு கல்வியோடு ஆசிரியர்கள் ஒழுக்கம், பண்பு, வாழ்க்கை நடைமுறைகள் என அனைத்தையும் கற்றுத் தருகின்றனர். அதனை தொடக்கக் காலத்திலேயே கற்றுத்தருவது மிகச்சிறப்பு. சமூகத்தில் ஒரு மாணவன் வெற்றி பெறுகிறான் என்றால் அது ஆசிரியரின் வெற்றியாகவே கருதப்படுகிறது. ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? அனைத்து காலக் கட்டத்திலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டும். 


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தையருக்கு அடுத்து ஆசிரியரை வைத்துள்ளார்கள் நமது முன்னோர்கள். எனவே ஆசிரியர்கள், மாணவர்களுக்கு மற்றொரு தாயாகவோ, தந்தையாகவோ இருந்து வழிநடத்துவது அவசியம். மாணவர்களை தங்களது குழந்தைகள் போல கருதி, ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனி கவனம் செலுத்தி அவர்களின் வாழ்க்கைப் பாதையை காட்ட வேண்டும். 



 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்க வேண்டும். மாணவர்களின் சுக துக்கங்களைக் கேட்டு, அதில் இருந்து மீண்டு வர அவர்களுக்கு உதவ வேண்டும். ஒரு ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களிடம், சக ஆசிரியர்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறாரோ அந்த பண்புகளே மாணவர்களிடத்திலும் பிரதிபலிக்கும். எனவே, மாணவர்கள் முன்பாக ஆசிரியர்கள் சத்தம் போடுவது, கோபப்படுவது உள்ளிட்ட எதிர்மறையான செயல்களை செய்வதை தவிர்க்கலாம். அதே நேரத்தில் மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில், அதனை திருத்துவது அவசியம். ஆசிரியர் சிரித்த முகத்தோடு இருக்கும்போது மாணவர்களிடமும் அது ஒரு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசிரியர்கள் அனைத்து நற்பண்புகளையும் பெற்றிருத்தல் வேண்டும். சுயநலமற்ற, தியாக மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கும். அதனை நாம் வெளிக்கொணர அவருக்கு தூண்டுகோலாக இருக்க வேண்டும். சமூக வலைத் தளங்கள் தற்போது மாணவர்களை கட்டிப்போட்டுள்ளன. 




இந்த நேரத்தில் ஆசிரியர்களால் மட்டுமே மாணவர்களுக்கு அதன் நன்மை, தீமைகள் குறித்து எடுத்துரைக்க முடியும். இணையதளங்கள் வழியாக மாணவர்கள் தவறான வழிக்குச் செல்வதை தடுக்க அறிவுரைகளை வழங்குதல் அவசியம். வகுப்பறையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது மாணவர்களை வெளியில் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம். இது ஆசிரியர்கள் - மாணவர்கள் இடையே உள்ள ஒரு நட்புறவை மேலும் வலுப்படுத்தும். ஒரு ஆசிரியர் மாணவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் பாடங்களை கற்பிக்க வேண்டும். 


மாணவர்களுக்கு புரியாத பட்சத்தில், மாணவர்களின் நிலைக்கு இறங்கி வந்து செய்முறைகள் மூலமாக புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள் மூலமாகவும் எடுத்துரைக்கலாம். எந்த ஒரு விஷயத்தையும் தான் தெளிவாக கற்று உணர்ந்து கொண்டு அதன் பின்னர் மாணவர்களுக்கு எடுத்துரைப்பது நலம். புத்தகங்களில் உள்ள பாடங்களை மட்டுமன்றி குழந்தைகளுக்கு பொதுவான வாழ்க்கை முறைகளையும் கற்றுத் தரவேண்டும். சமூகப் பிரச்னைகளையும் மாணவர்களிடம் பேச வேண்டும். அதேபோன்று, ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

ஒரு சில விஷயங்களை மாணவர்களிடமும் இருந்து ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். தங்களது அறிவைப் பெருக்கிக் கொள்வதாலேயே ஒருவர் சிறந்த ஆசிரியராக தொடர்ந்து நீடிக்க முடியும். வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் தான் நாட்டின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கேற்ப ஒரு சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்றுபவரே நல்லாசிரியர். அதேபோன்று, பள்ளிக்காலத்தில் மட்டுமன்றி ஆசிரியரின் வழிகாட்டுதலை ஒரு மாணவர் தன் வாழ்நாள் முழுவதும் மனதில் வைத்து செயல்பட்டால் சமூகத்தில் சிறப்பான அஸ்தஸ்தைப் பெற முடியும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent