இந்த வலைப்பதிவில் தேடு

TRB - ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு: அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019



தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த தடைக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருப்பூரைச் சேர்ந்த பட்டதாரி கிருத்திகா தாக்கல் செய்த மனுவில், "ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் பணியிடங்களுக்கான தேர்வு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த ஜூன் 12-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையில் இந்த தேர்வு ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்தப்படும் எனவும், வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29-ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கணினி ஆசிரியர்களை தவிர்த்து மற்ற ஆசிரியர்கள் கணினியை கையாளும் பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்காமல் நேரடியாக ஆன்லைன் தேர்வு நடத்துவது தன்னை போன்ற பிற விண்ணப்பதாரர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆன்லைன் தேர்வுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்த தேர்வை வழக்கமான முறையில் எழுத்துத் தேர்வாக நடத்த உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவதற்கு எதிராக மனுதாரர் அளித்துள்ள கோரிக்கையைப் பரிசீலித்து தகுந்த முடிவு எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் பரிசீலிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent