இந்த வலைப்பதிவில் தேடு

2020, ஜனவரி, 1க்குள் இதை புதுப்பிக்காவிட்டால், உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும்' - ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

ஞாயிறு, 13 அக்டோபர், 2019



'வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிக்காவிட்டால், அந்த வங்கி கணக்கு முடக்கப்படும்' என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ, 'ஆன்லைன்' மூலமோ,பணப்பரிமாற்றம் செய்ய முடியாது என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



வாடிக்கையாளர்கள், வங்கிகளில் கணக்கு துவங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள, கே.ஒய்.சி., எனப்படும், சுய விபரக் குறிப்புகள் கொண்ட படிவத்தை சமர்ப்பிக்கும் நடைமுறை, பின்பற்றப்படுகிறது.இதன்படி, வாடிக்கையாளரின் அடையாள சான்று, இருப்பிட சான்று, தொலைபேசி மற்றும் 'மொபைல்' எண், 'இ - மெயில்' முகவரி, புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை, வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவு

இந்த, கே.ஒய்.சி., ஆவணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க வேண்டும் என, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.பணப் பரிமாற்ற மோசடிகளை தவிர்க்கவும், வங்கி கணக்கு மூலம், பயங்கரவாத அமைப்புகளுக்கு பணப் பரிமாற்றம் செய்யப்படுவதை தவிர்க்கவும், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்ற முறை மற்றும் இதர தன்மைகளின் அடிப்படையில், கே.ஒய்.சி., புதுப்பிப்பதற்கான கால அளவு மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு ஆண்டுகள், எட்டு ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்த, கே.ஒய்.சி., படிவம், புதுப்பிக்கப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.




சமர்ப்பிக்கவும்


'கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்க, கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று, அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, கேட்கப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. 'சுய விபரக்குறிப்பில் மாற்றம் எதுவும் இல்லாத வாடிக்கையாளர்கள், வங்கியின் இணைய தளத்தில், 'கே.ஒய்.சி.,யில் மாற்றமில்லை' என்ற இணைப்பை, 'கிளிக்'செய்வதன் மூலம், புதுப்பிக்கும் பணியை செய்து கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எஸ்.பி.ஐ., ஐ.டி.பி.ஐ., மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட வங்கிகள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இது தொடர்பான குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றன. அதில், வரும், 2020, ஜனவரி, 1க்குள், கே.ஒய்.சி., விபரங்களை புதுப்பிக்குமாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.'ஜனவரி, 1க்குள் புதுப்பிக்கப்படாத வங்கி கணக்குகள், முடக்கப்படும் என்றும், அந்த கணக்கில் இருந்து, நேரடியாகவோ அல்லது 'ஆன்லைன்' மூலமோ, பணப் பரிமாற்றம் செய்ய முடியாது' என, ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent