புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த 6 வழிகாட்டுதல்களுடன் வரைவு கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய தேசிய கல்வி கொள்கையை கஸ்தூரி ரங்கையன் தலைமையிலான குழு உருவாக்கி, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம் ஒப்படைத்தது. இதனை அமல்படுத்துவதற்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இதனை அமல்படுத்தும் வகையில் 6 வழிகாட்டுதல்களுடன் புதிய வரைவு கொள்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இந்த இறுதி வரைவு கொள்கை விரைவில் மத்திய மந்திரிசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
எந்த கொள்கையும் அதனை அமல்படுத்தும்போது தான் அது சிறப்பானதாக அமையும். இதுபோன்ற அமல்படுத்துதலுக்கு பலகட்ட முயற்சிகளும், நடவடிக்கைகளும் அவசியம். இதனை பல்வேறு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் முறையான வழியில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
முதலில் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள உற்சாகம் மற்றும் கொள்கையின் நோக்கம் மிக தீவிரமான பிரச்சினை. கொள்கையில் தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டதும், கொள்கையின் நோக்கம் மற்றும் உற்சாகம் மிக முக்கிய கருத்தாக அமையும்.
இரண்டாவதாக கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக இருக்க வேண்டியது முக்கியம். கொள்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் பலகட்டங்கள் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் முந்தைய கட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தப்படுவது முக்கியம்.
மூன்றாவதாக கொள்கையின் திட்டங்களுக்கு உகந்த வரிசைமுறையை உறுதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது முக்கியம். மிகவும் தீவிரமான மற்றும் அவசர நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும். இதன்மூலம் ஒரு வலுவான தளத்தை அமைக்க முடியும்.
கல்வி என்பது ஒருங்கிணைந்து செய்யப்பட வேண்டிய விஷயம். எனவே இதற்கு கவனமான திட்டமிடல் தேவை. மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையே இணைந்து கண்காணிப்பது மற்றும் கூட்டாக சேர்ந்து அமல்படுத்துதல் வேண்டும்.
மத்திய, மாநில அளவில் உள்ள மனிதவளம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஆகிய துறைகள் ஒரே நேரத்தில், உரிய நேரத்தில் செயலாற்றுவது கொள்கையை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்கு முக்கியம். பலதரப்பட்ட, இணையான அமலாக்க நடவடிக்கைகளுக்கு இடையே உள்ள இணைப்புகளை கவனமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.
இதனை மதிப்பிட போதிய அவகாசம் வழங்கப்படும். பின்னர் இதில் பெரிய மாற்றங்கள் அல்லது மேலும் மெருகூட்டுவது தேவைப்பட்டால் செய்யப்படும். 2030-ம் ஆண்டு இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டு இருப்பதை மதிப்பீடு செய்ய கூட்டாக ஆய்வு செய்யப்படும்.
2030-40-ம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த கொள்கையும் இயங்கும் நிலையில் இருக்கும். அதனைத் தொடர்ந்து மேலும் ஒரு கூட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் தொடர்ந்து வருடந்தோறும் ஆய்வுகள் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக