பள்ளி மாணவர்களுக்கான 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆத்திகம் குறித்து தவறான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியலின் குடிமையியல் இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சமயச் சார்பின்மை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 149-ம் பக்கத்தில் ஆத்திகம் குறித்துக் கூறப்பட்டுள்ளது.
ஆத்திகம்: கடவுள் அல்லது கடவுளர்கள் மீது நம்பிக்கையற்று இருத்தல் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத் திட்டம்
கடந்த 2017-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடத் திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் கருத்துகளும் பெறப்பட்டன. அதை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.
2017 அரசாணையிலேயே 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 2018-19-ம் ஆண்டில் பாடப் புத்தகங்கள் வழங்கவும், 2, 7, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-20-ம் கல்வியாண்டில் வழங்கவும், 3, 4, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களை 2020-21 கல்வியாண்டில் வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அனைத்து வகுப்புகளுக்குமான பாடத் திட்டங்கள் இந்த ஆண்டிலேயே மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக கண்ணக்கன்காடு பட்டதாரி ஆசிரியர் ரவி கூறும்போது, ''அடுத்த ஆண்டு வெளியாவதாக இருந்த 8-ம் வகுப்புப் புத்தகங்கள் தற்போதே வெளியாகி உள்ளதால்தான் பிழைகள் ஏற்பட்டிருக்கக் கூடும். புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில், புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமூக அறிவியல் மட்டுமல்லாது, அறிவியல், ஆங்கிலப் பாடங்களிலும் பிழைகள் உள்ளன. அனைத்துத் தரப்பில் இருந்தும் கருத்துகள் கேட்கப்பட்ட பிறகு, தவறான தகவல்கள், முரண்பட்ட கருத்துகள் ஆகியவை திருத்தப்பட்டு, அச்சிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு இதுதான் புத்தகமாக இருக்கும், தேவைப்படும்போது முக்கிய நிகழ்வுகள் மட்டும் சேர்க்கப்படும்'' என்றார்.
அவசரமாக பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, அச்சடிக்கப்பட்டதால் ஏராளமான பிழைகள் ஏற்பட்டுள்ளதாகக் குரல்கள் எழுந்துள்ளன. இதனால் இந்த ஆண்டு மாணவர்களின் கல்வி மட்டுமல்லாது போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக