இந்த வலைப்பதிவில் தேடு

பணியிட மாறுதல் கவுன்சலிங் உடனே நடத்த வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

சனி, 5 அக்டோபர், 2019




ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றினால் அவர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டத்துக்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கவுன்சலிங் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், இந்த ஆண்டுக்கான கவுன்சலிங் இதுவரை நடக்கவில்லை. இதனால் பணியிட மாறுதல் கவுன்சலிங்கை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த காலங்களில் ஆசிரியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றுக்கு மே மாதத்தில் கவுன்சலிங்கை நடத்தும். அதற்கு பிறகு ஜூன் மாதத்தில் ஆசிரியர்கள் பணியேற்பார்கள். அதனால் வகுப்புகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் கற்றல் கற்பித்தல் பணி தடையில்லாமல் நடந்தது.


இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் தடைபட்டுள்ளது. ஆசிரியர்கள் கடந்த ஆண்டு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பிறகு, ஆசிரியர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை எடுத்து வருவதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக பணி நிரவல் என்ற பெயரில் பணி மூப்பு பெற்ற ஆசிரியர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்கின்றனர். பதவி உயர்வு வழங்குவதிலும், பணி மூப்பு பெற்றவர் இருக்க இளைவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. 

இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் அதிகாரிகள் மவுனமாக இருக்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், பணியிட மாறுதல் கவுன்சலிங்கை நிறுத்தி வைத்துள்ளதாக கருதவேண்டி இருக்கிறது. இதன் காரணமாக, போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களின் கல்வி தான் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கல்வி அதிகாரிகள் உணர்ந்தார்களா இல்லையா என்பது புரியாமலே உள்ளது.


குறிப்பாக அரசின் தவறான முடிவால், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருந்தால் மட்டுமே இடமாறுதல் வழங்குவது என்பதில் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் காரணமாக கவுன்சலிங் நடக்காமலே காலாண்டுத் தேர்வும்  முடிந்துவிட்டது. போதிய ஆசிரியர்கள் இல்லாமல் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கவுன்சலிங் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் முடித்து வைத்து இறுதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. பதவி உயர்வு, பணி நிரவல் பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆண்டு என்ற விதிமுறையை தளர்த்தி 2019-20ம் ஆண்டு கவுன்சலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வி நலனைக் கருதி பணியிட மாறுதல் கவுன்சலிங், பதவி உயர்வுக்கான கவுன்சலிங் ஆகியவற்றை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்கின்றனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent