இந்த வலைப்பதிவில் தேடு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு வராவிட்டால், காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

புதன், 30 அக்டோபர், 2019



போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள்  பணிக்கு வராமல் இருந்தால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.


மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை,வளாகத்தில் அரசு மருத்துவ சங்க கூட்டமைப்பினர், பல்வேறு, கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 6 தினங்களாக கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அரசு தரப்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அங்கீகாரம் பெற்ற அரசு மருத்துவர்கள் சங்கம் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தேவையான நடவடிக்கை எடுக்கிறது என்றார்.


ஏழை, எளிய மக்களுக்கான உயர்தர மருத்துவ சேவையில் தடை ஏற்பட அரசு அனுமதிக்காது என்று கூறிய அவர், போராட்டத்தை அரசு மருத்துவர்கள் உடனடியாக விலக்கி கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், காலிப் பணியிடங்களாக அறிவித்து மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு தயங்காது என அமைச்சர் எச்சரித்தார்.


தொடர்ந்து, மாவட்ட வாரியாக எத்தனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அந்தந்த மாவட்ட டீன் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார்...

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பினர், போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent