இந்த வலைப்பதிவில் தேடு

ரெட் அலர்ட் - நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

திங்கள், 21 அக்டோபர், 2019




தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் என்பது அரசு அதிகாரிகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது ஆகும். ஒரு நாளில் 22 செ.மீக்கு மேல் மழை பெய்தால் அதனை சிவப்பு எச்சரிக்கையாக வானிலை மையம் அறிவிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகவே பெய்து வருகிறது.



இந்த ஆண்டை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த 15ம் தேதி முதலே தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் இந்த மழையினுடைய தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதே நேரத்தில் 22ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு நேற்றைய தினம் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி அதோடு மட்டுமல்லாமல் மத்திய அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தில் நாளை மிக மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 



தமிழகம் மற்றும்  புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் பல பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதுவும் குறிப்பாக இன்று தொடங்கி அடுத்து 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் இதனை உறுதிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் தான் சற்று முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கான இந்த ரெட் அலர்ட்டை விடுத்திருக்கிறது.



நாளை ஒருநாள் மட்டுமே இந்த ரெட் அலர்ட். அதனை தொடர்ந்து மழை சற்று குறைய வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் அடுத்த சில தினங்களுக்கு இந்த மழை நீடிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் தனியார் வானிலை மைய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் காலையில் நல்ல மழை பெய்தாலும் கூட பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை பொறுத்தவரையில் சென்னை மாவட்ட நிர்வாகம் விடுமுறை என்பதை தவிர்த்தே வருகிறது. நாளைய தினம் இந்த ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருப்பதால் அதிகபட்சமாக 22 செமீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்திருப்பதால் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்பது பற்றி தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent