''தமிழகத்தில் அரசு மேல், உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 144 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், கவனம் செலுத்தாத கல்வித்துறையால் மாணவர்சமுதாயம் பாதித்துள்ளதாக,'' தமிழ்நாடு மேல்நிலைபள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:கல்வித்துறையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் ஓய்வு மற்றும் இறப்பினால் ஏற்படும் காலி பணியிடத்தை முன்னரே கணக்கிட்டு, ஆசிரியர் பணியிட மாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்.
சமீபகாலமாக இந்த நடைமுறை மே மாதத்தில் இருந்து காலம் கடந்து ஆக., மாதம் என நீண்டு கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக நவ.,11 ல் கவுன்சிலிங் துவக்கினர். இதில் உயர், மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்,முதுநிலை ஆசிரியர் காலிபணியிடங்கள் வெளிப்படை தன்மையுடன் நிரப்ப பட்டது பாராட்டுக்குரியது.
அதே போன்று மாறுதலில் சென்ற முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிமூப்பு படி பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி, முதுநிலை ஆசிரியர் பணியேற்றனர்.இதற்கு பின்னரும் தமிழகத்தில் உயர், மேல்நிலை பள்ளிகளில் 17 பாடப்பிரிவுகளுக்கென 2 ஆயிரத்து 144 ஆசிரியர் காலி பணியிடங்கள் ஏற்பட்டன.
இதற்கு கடந்த செப்.,ல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களின், சான்றும் சரிபார்க்கப்பட்டு, பணிக்காக காத்திருக்கின்றனர்.அதே போன்று 841 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, நீதிமன்ற வழக்கில் முடிவு அறிவிக்காமல் நிலுவையில் உள்ளது. இதனால் மேல்நிலை பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதிதாக பணியிடங்கள் நிரப்ப தடை ஏற்படும். எனவே அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில் காலிபணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாகியுள்ள ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாட ஆசிரியர்கள் தேர்வானவர்களையும் நியமித்து, மேல்நிலை பள்ளி மாணவரின் நலன் காக்க வேண்டும்.
தமிழக கல்வித்துறை, மத்திய அரசுக்கு இணையாக தரமான புதிய பாடத்திட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், கல்வி ஆண்டின் இறுதி வரை ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பாமல் இருப்பது மாணவர் சமுதாயத்தை பாதிக்கும் விதத்தில் உள்ளது. அரசு விரைந்து ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்பவேண்டும், என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக