இந்த வலைப்பதிவில் தேடு

வலுப்பெறுகிறது 'மஹா' புயல் - 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

வெள்ளி, 1 நவம்பர், 2019



அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து தென் மாநிலங்களில் பரவலாக பெய்து வருகிறது. இந்திய பெருங்கடலில் புயல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு ஓமன் நாடு வழங்கியுள்ள 'மஹா' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: குமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மாறும்; பின் புயலாக வலுப்பெறும்.இந்த புயல் அரபிக் கடலின் வடமேற்கு திசையில் லட்சத்தீவை கடந்து செல்லும். மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு அரபிக்கடலுக்குள் செல்ல வேண்டாம். குமரி கடல் பகுதி தெற்கு கேரள பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு போன்ற பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். 

24 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யும். நேற்று வரை சராசரியாக 17 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 20 செ.மீ. மழை பெய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


கலெக்டர்களுக்கு உத்தரவு

வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு 770 படகுகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சென்றன. அவற்றில் 763 படகுகள் கரை திரும்பி விட்டன; ஏழு படகுகள் கடல் பகுதியில் உள்ளன. இரண்டு படகு களுக்கு தகவல் கொடுத்து விட்டோம். மீதமுள்ள ஐந்து படகுகள் குறித்து கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 525 படகுகள் கடலுக்கு சென்றன. இதில் 520 படகுகள் திரும்பி விட்டன. இரண்டு படகுகளை தொடர்பு கொண்டுள்ளோம். மூன்று படகுகளை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறோம். அந்த படகுகள் பாதுகாப்பான பகுதிகளில் உள்ளன.மாநில பேரிடர் படை தேசிய பேரிடர் படை ஆகியவற்றில் பயிற்சி பெற்ற வர்கள் தயார் நிலையில் உள்ளனர். 


அரக்கோணத்தில் 18 கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளனர். மீன் வளத் துறையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் அனைத்திலும் இன்று கன மழை இருக்கக் கூடும். வட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை இருக்கும். அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மழை விடுமுறைமழை பெய்யும் நாட்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டர் களுக்கு வழங்கப் பட்டுள்ளது.


மழை வரும் மாவட்டங்கள்திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலுார், விழுப்புரம், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent