தஞ்சாவூர், வீரசிங்கம்பேட்டை அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 140 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்; எட்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். காந்தியின், 150வது பிறந்த நாளையொட்டி, அக்டோபர், 2ல், பள்ளியில், ஆள் இல்லா கடையை ஆசிரியர்கள் திறந்தனர்.மாணவர்களின் மனதில் நேர்மையை விதைக்கும் விதமாக, இந்தக் கடையை ஆசிரியர்கள் துவக்கியுள்ளனர்.கடையில், மாணவர்களுக்கு தேவையான பேனா, பென்சில் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத கடலை மிட்டாய், எள்ளுருண்டை போன்ற தின்பண்டங்களை வைத்து, அந்தந்த பொருளின் விலையை, துண்டு சீட்டில் எழுதி வைத்துள்ளனர்.மாணவர்கள், தேவையான பொருளை எடுத்து, அதற்குரிய பணத்தை, அங்குள்ள கல்லா பெட்டியில் போட்டுச் செல்கின்றனர்.
இதில் சேரும் பணத்தில், 15 நாட்களுக்கு ஒருமுறை, புதிய பொருட்களை வாங்கி வைக்கின்றனர்.தலைமையாசிரியர் மிசேல்தாஸ் கூறியதாவது:சிறு வயதில், மாணவர்களின் மனதில் எதை விதைக்கிறோமோ, அவை ஆழமாக பதிந்து விடும். மாணவர்களின் மனதில் நேர்மையையும், அது பற்றிய விழிப்புணர்வையும் விதைக்க நினைத்து, ஆள் இல்லா கடையை திறந்தோம்.சில நாட்களுக்கு பின், எவ்வளவு பொருட்கள் எடுக்கப்பட்டுள்ளன எனவும், அதற்குரிய பணம் சரியாக இருக்கிறதா எனவும் கணக்கு பார்த்தோம். ஒரு பைசா கூட குறையாமல் சரியாக இருந்தது.இதனால், சில நாட்கள் மட்டும் நடத்த திட்டமிட்டிருந்த கடையை, ஆண்டு முழுவதும் நடத்த முடிவு செய்து,
தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதை, பாடமாகவும் நடத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.அரசு பள்ளி ஆசிரியர்களின் இந்த முயற்சியை, பெற்றோரும், கல்வித்துறை அதிகாரிகளும் பாராட்டி வருகின்றனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக