இந்த வலைப்பதிவில் தேடு

வங்க கடலில் உருவானது, 'புல் புல்' புயல்

புதன், 6 நவம்பர், 2019



'வங்கக்கடலில், புதிய புயலான, 'புல் புல்' உருவாகியுள்ளது; இது, ஒடிசாவை நோக்கி நகரும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.


வடகிழக்கு பருவமழையை ஒட்டி, அரபிக்கடலில் உருவான, 'கியார்' புயல், இரண்டு நாட்களுக்கு முன், ஓமனில் கரையை கடந்தது. அரபிக்கடலில் சுழலும் மற்றொரு புயலான, 'மஹா' இன்று, குஜராத்தில் கரையை கடக்கும் என, கணிக்கப்பட்டு உள்ளது.

அந்தமான்:


இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த பகுதி, புதிய புயலாக வலுப் பெற்றுள்ளது. இதற்கு பாகிஸ்தான் வழங்கியுள்ள, 'புல் புல்' என்ற, பெயர் சூட்டப்பட்டுள்ளது. 'புல் புல்' என்பது, அரபி மொழியில் அழைக்கப்படும், ஒரு வித பாடும் பறவை. புல் புல் புயல், படிப்படியாக வலுப்பெற்று, வங்கக்கடலின் வடமேற்கு திசையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை நோக்கிநகரும் என்றும், வங்கதேசத்தை ஒட்டி, கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மையம் கணித்துள்ளது.

கொந்தளிப்பு:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின், சென்னை மண்டல துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி:

வங்கக்கடலில் உருவாகியுள்ள, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, வடமேற்கு திசையில் நகரும். இது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்துக்கு இடைப்பட்ட பகுதியை நோக்கிநகர வாய்ப்புள்ளது. புயல் காரணமாக, வங்கக் கடலில் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்; சூறாவளி காற்று வீசும். எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு, மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு ஆந்திரா பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம். புல் புல் புயலால், தமிழகத்துக்கு எந்தவிதமான மழையும் இருக்காது. அடுத்த இரண்டு நாட்களில், தமிழகம், புதுச்சேரியில், பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.


சீற்றம்:

புல் புல் புயலால், கடல் பரப்பில் அலைகள் சீற்றமாக காணப்படும் என்பதால், நாகை துறைமுகத்தில், 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், 2, பேராவூரணி மற்றும் அரிமளத்தில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது.

10 நாட்களில் மூன்று புயல்கள்:


பசிபிக் பெருங்கடல், சீன பெருங்கடல் பகுதிகளில், அதிக அளவில் புயல்கள் உருவாகும். இந்திய பெருங்கடல் பகுதியில், புயல்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உருவாகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி, இன்னும் ஒரு மாதம் முடியாத நிலையில், இந்திய பெருங்கடலில் மூன்று புயல்கள் அடுத்தடுத்து உருவாகி உள்ளன. வடகிழக்கு பருவமழை, அக்., 16ல் துவங்கியது. அக்., 25ல் அரபிக்கடலில், 'கியார்' புயல் உருவானது. இந்த புயல், நேற்று முன்தினம் ஓமன் நாட்டில் கரையை கடந்தது. கரையை கடக்கும் முன், அரபிக்கடலில், அக்., 30ல், 'மஹா' புயல் உருவானது.கடந்த, 120 ஆண்டுகளில், ஒரே நேரத்தில் அரபிக்கடலில் இரண்டு புயல்கள் சுழன்றது, புதிய வரலாறு. மஹா புயல், நாளை குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில், புதிய புயல், 'புல் புல்' உருவாகியுள்ளது.இந்த புயல், அரபிக்கடல், வங்கக்கடல் மற்றும் குமரி கடலை உள்ளடக்கிய, இந்திய பெருங்கடலில், 10 நாட்களில் உருவாகியுள்ள மூன்றாவது புயல். இந்திய பெருங்கடலை ஒட்டிய வடக்கு பகுதியில், 10 நாட்களில், மூன்று புயல்கள் உருவாவது, இதுவே முதல் முறை. மேலும், மூன்று காற்றழுத்த தாழ்வு பகுதிகள், தொடர்ந்து புயலாக மாறியதும், இதுவே முதல்முறை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent