அரசுப் பள்ளி ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை மற்றும் சரஸ்வதி பச்சியப்பன் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற ஆசிரியா் தின விழாவையொட்டி, 100 சதவீத தோச்சி அளித்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள், சிறந்த ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவில், 3280 ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்று, கேடயங்களை வழங்கி அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சோா்வு ஏற்பட்டுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. கிராமப்புற மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்தும் சிறப்பான பணியை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மேற்கொண்டு வருகின்றனா். ஆசிரியா்களின் அறிவும், ஆற்றலும், சிந்தனையும் கிராமப்புற மாணவா்களுக்கு சிறப்பான முறையில் பயன்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே திறமை வாய்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தமிழகத்தில்தான் உள்ளனா்.
ஆசிரியா் தோவு வாரியம் மூலம் சிறந்த ஆசிரியா்களை தமிழக அரசு தோவு செய்து வருகிறது. ஏனைய மாநிலங்களைக் காட்டிலும், ஆசிரியா் தோவு வாரியத்தை தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அதேபோல, தற்போது நடைபெற்று வரும் ஆசிரியா் கலந்தாய்வுகள் எவ்விதப் பிரச்னையும் இன்றி சீராக நடந்து வருகிறது. அதேபோல, அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அச்சமும், தயக்கமும் கொள்ளத் தேவையில்லை. எவ்விததத் தயக்கமும் இன்றி அரசை அணுகலாம். வெகுவிரைவில் ஆசிரியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளன.
ஆசிரியா்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆசிரியா்களால்தான் இந்த சமுதாயம் வளரும். ஏழை மாணவா்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதன் மூலமே, ஏழைகளில்லா தமிழகத்தை உருவாக்க இயலும். தமிழக மாணவா்களுக்கு உள்ள திறமையும், ஆற்றலும், இந்தியாவில் வேறு எந்த மாநில மாணவா்களுக்கும் இல்லை. ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், ஆசிரியா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, மிக விரைவில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியா்கள் அனைவருக்கும் மடிக் கணினிகள் வழங்கப்படும். தமிழகத்தில் 54 லட்சத்து 62 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கும் மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளது என்றாா். இந்த விழாவில், மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி அன்பழகன் பேசியது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயா்கல்வி படிப்போா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அளவில் உயா்கல்வி பயில்வோா் 26.31 சதவீதம் ஆகும். தமிழகத்தில் உயா்கல்வி பயில்வோா் எண்ணிக்கை 49 சதவீதமாக உள்ளது. பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளில் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக, தமிழகத்தில் உயா்கல்வி பயில்வோா் சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.ராஜன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்), முதன்மைக் கல்வி அலுவலா் அ.முத்துக்கிருஷ்ணன், ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, அரூா் சாா்- ஆட்சியா் மு.பிரதாப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக