இந்த வலைப்பதிவில் தேடு

புதிய புத்தகங்களில் அதிக பாடங்கள் - 5, 8ம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம் - கல்வித்துறை செயலரிடம் அளித்துள்ள மனு

திங்கள், 9 டிசம்பர், 2019

 'இளம் மாணவர்களின் படைப்பாற்றலை தடுத்து, அழுத்தம் தரும் மனப்பாட கல்வியை ஊக்குவிக்கும், பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழக அரசை, தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலர் நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை செயலரிடம் அளித்துள்ள மனு:

புதிய பாடத் திட்டம், இந்த ஆண்டு அமலான நிலையில், பாட புத்தகங்கள் தாமதமாகவே வழங்கப்பட்டன. புதிய புத்தகங்களில், புதிய முறையில் அதிக பாடங்கள் இருப்பதால், அவற்றை மாணவர்களுக்கு புரிய வைத்து, பாடம் நடத்த கூடுதல் அவகாசம் தேவை.


இந்நிலையில், ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு திடீரென பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மாணவர்களின் புரிந்து படிக்கும் திறனை தடுப்பதுடன், அவசரமாக பாடங்களை நடத்தி முடித்து, மாணவர்களுக்கு மனப்பாடம் செய்ய, பயிற்சி அளிக்க துாண்டும் வகையில் உள்ளது. இதன் காரணமாக, மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை துாண்டும் முறைகளை, ஆசிரியர்கள் தொடர முடியாது.

பொது தேர்வுக்கு மனப்பாடம் செய்ய வேண்டியுள்ளதால், அவர்கள் பாடம் சாராத மற்ற இணை செயல்பாடுகளான, விளையாட்டு, யோகா, கைவினை போன்ற, பல்வேறு தனித்திறன் பயிற்சிகளை விட்டு விலகும் அபாயம் உள்ளது.


புதிய பாட திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ள நோக்கத்தையும், இந்த பொதுத்தேர்வு முறை பாதிக்கும். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு விரிவாக ஆலோசனை செய்து, குழந்தைகள் நிலையில் உள்ள, இளம் மாணவர்களின் வயது, அவர்களின் உடல், மனத்திறன்களை மருத்துவ அடிப்படையில் ஆய்வு செய்து, முடிவு எடுக்க வேண்டும். மேலும், அவர்களின் கற்பனையான படைப்பாற்றல், சிந்தனை திறனை வளர்க்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent