இந்த வலைப்பதிவில் தேடு

ஒரே நேர்கோட்டில் 6 கிரகங்கள் - 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன?

வெள்ளி, 27 டிசம்பர், 2019



மனித வாழ்வின் வளர்ச்சிக்கு கிரகங்களின் சுழற்சி ஒரு காரணமாக அமைகின்றது என்று சொல்லி, நம் முன்னோர்கள் ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒரே நேர்கோட்டில் பல கிரகங்கள் சேரும்பொழுது எதிர்பாராத பல மாற்றங்களும், இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றது.



537 வருடங்களுக்கு முன்பு தனுசு ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணைந்ததாக சொல்கிறார்கள். ஆனால் 1962-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் மூன்றாம் நாள், எட்டு கிரகங்களின் சேர்க்கை மகர ராசியில் ஏற்பட்டது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்ரன், வியாழன், சனி, கேது ஆகிய எட்டு கிரகங்களும் மகரத்தில் இருக்க, ராகுபகவான் மட்டும் கடகத்தில் சஞ்சரித்தார். அப்பொழுது உலக மக்கள் எல்லாம் பீதி அடைந்து, ‘உலகம் அழிந்துவிடுமோ?’, ‘இயற்கை சீற்றங்களுக்கு ஆளாகி விடுவோமோ ?’ என்று பயந்தனர். நாடெங்கிலும் இதே பேச்சாக இருந்தது. பள்ளி, கல்லூரிகள் கூட விடுமுறைகளை விட்டனர். பயத்தின் காரணமாக ஒருசில நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இப்பொழுது, அதே போல் ஆறுகிரகங்களின் சேர்க்கை ஏற்படுகின்றது.

25.12.2019 மாலை 5.10 மணி முதல் 27.12.2019 இரவு 12.19 மணி வரை நெருப்பு ராசியான தனுசு ராசியில் சூரியன், சந்திரன், புதன், வியாழன், சனி, கேது ஆகிய ஆறு கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. காற்று ராசியான மிதுனத்தில் சஞ்சரித்து வரும் ராகுபகவான் அதைப் பார்க்கின்றார்.

எனவே நெருப்பிற்கும், காற்றிற்கும் உள்ள போராட்டமான அமைப்பை இந்த கோச்சார கிரகங்கள் ஜோதிட ரீதியாக நமக்கு வழங்கலாம் என்று மக்கள் நம்புகின்றார்கள். நாடெங்கிலும் இதைப்பற்றிய பேச்சே நிலவி வருகின்றது. நமக்கு என்னாகுமோ என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றார்கள்.

இருப்பினும், குருவின் சொந்த வீடான தனுசு ராசியில் இந்த கிரகச் சேர்க்கை ஏற்படுவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றே கருதலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மூன்று நாட்களிலும் முக்கியமான தெய்வீக நிகழ்ச்சிகளும் இருக்கின்றன.



புதன்கிழமை அனுமன் ஜெயந்தியும், வியாழக்கிழமை அமாவாசையும் வருகின்றது. சூரிய கிரகணமும் இருக்கின்றது. வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம் வருகின்ற சிறப்பான நாள். எனவே இந்தக் கதிர்வீச்சினால் வரும் பாதிப்புகளை நாம் தடுத்துக்கொள்ள நமக்கு இந்த மூன்று நாட்களும் இறையருள் பெறும் நாட்களாகவும், முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாகவும் இருக்கின்றது.

இந்த ஆறுகிரகச் சேர்க்கையினால் நேரும் பாதிப்புகளும், இயற்கை சீற்றங்களும் நம்மை அண்டாமல் இருக்க முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. குறிப்பாக கூட்டுப்பிரார்த்தனைகளின் ஆற்றல் மக்களைக் காப்பாற்றும். இந்தக் கிரகச் சேர்க்கையின் காரணமாக சூறாவளிக் காற்றுகள் அதிகம் வீசலாம். மழை,வெள்ளப் பாதிப்புகள், நிலநடுக்கங்கள் போன்றவை ஒருசில பகுதிகளில் ஏற்படலாம். ரிஷபம், கன்னி, மிதுனம், தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இயற்கைச் சீற்றங்களிலிருந்து விடுபடவும், இன்னல்கள் அகலவும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களுக்குரிய ஸ்தலங்களிலும், ஆங்காங்கு உள்ள இறைவழிபாட்டு ஸ்தலங்களிலும் கூட்டுப்பிரார்த்தனைகளை மேற்கொண்டால் எந்த நாளும் நமக்கு இனிய நாளாக அமையும்.

6 கிரக சேர்க்கையால் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.

மேஷம்



உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் ஒன்று சேருகின்றன. பிதுரார்ஜித ஸ்தானம் எனப்படும் 9-ம் வீட்டில் அந்த வீட்டிற்கு அதிபதியான குருபகவானோடு மற்ற கிரகங்கள் இணைவதால் பெரிய அளவில் உங்களுக்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படாது. இருந்தாலும், ஒரே நேர்கோட்டில் இணையும் அந்தக் கிரகங்களின் ஆதிக்கத்தால் எதிர்பாராத மாற்றங்கள் திடீரென உருவாகலாம்.

இந்தக்காலத்தில் பெற்றோர் வழி ஆதரவு கொஞ்சம் குறையலாம். உற்றார் உறவினர்களின் பகை உருவாகலாம். பயணங்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே இந்த கிரக சேர்க்கை காலத்தில் பயணங்களைத் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு முயற்சிகளில் அக்கறை காட்டுவதை தவிர்க்கலாம். உத்தியோகம் சம்பந்தமான செயல்பாடுகள் திருப்தியளிக்குமா என்பது சந்தேகம் தான்.

சூரியனின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் சகோதரர்களால் எதிர்பாராத விரயங்கள், சச்சரவுகள் ஏற்படலாம். சனி பகை கிரகத்தோடு கூடி லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகாமல் இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருங்கள். நிதி சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மூல முதற்கடவுளான ஆனைமுகன் வழிபாட்டையும், குலதெய்வ வழிபாடுகளையும் முறையாகச் செய்வதோடு, புதன்கிழமை அனுமன் ஜெயந்தி வருவதால் அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும், வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம் என்பதால் சந்திரன் வழிபாட்டையும் மேற்கொண்டால் இந்த மூன்று நாட்களிலும் ஏற்படும் முட்டுக்கட்டைகளைத் தவிர்க்கலாம்.

ரிஷபம்



உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் வலுப்பெறுகின்றன. நீங்கள் மிகமிக கவனத்தோடும், அதிக விழிப்புணர்ச்சியோடும் செயல்பட வேண்டிய நேரமிது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். எதிர்மறைச் சிந்தனைகள் அலைமோதும். இருப்பினும், குருவின் வீட்டில் இந்த கிரக சேர்க்கை ஏற்படுவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

இந்தக் கூட்டுக்கிரக அமைப்பினால் ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். உஷ்ணாதிக்க நோய்கள் உருவாகலாம். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், ஒவ்வாமை, விஷக்காய்ச்சல்கள், தூக்கமின்மை போன்ற பாதிப்புகள் வரலாம். கூர்மையான உபகரணங்கள், மின்சாரம் ஆகியவற்றை கையாளும்போது எச்சரிக்கை தேவை. 2-ல் ராகு இருப்பதால் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகி மகிழ்ச்சியைக் கொடுக்கும். சொத்துக்களாலும், சொந்தங்களாலும் தொல்லையுண்டு.

இக்காலத்தில் பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாக முடியலாம். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்யுங்கள். வாக்குவாதங்கள் உங்கள் வளர்ச்சியைத் தடுக்கும். பிறருடைய பேச்சை நம்பி செயல்படுவதால் பிரச்சினைகள் உருவாகலாம். பயணங்களைக் கூடத் தள்ளி வைப்பது நல்லது. குறிப்பாக இரவு நேரப் பயணங்களை தவிர்க்கலாம்.

எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தாலும், இடர்பாடுகளிலிருந்து விடுபட வேண்டுமானால் இறைவழிபாடு அவசியம் தேவை. எனவே முழு நம்பிக்கையோடு முருகப்பெருமான் வழிபாடும், புதன்கிழமையன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி வருவதால் அனுமன் வழிபாடும், வியாழக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும், இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வ வழிபாடுகளையும் முறையாக மேற்கொண்டால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு நல்ல பலன்களைக் காணலாம்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் வலுப்பெறுகின்றன. இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்பட வேண்டும். காரணம் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன், புதன், வியாழன், சனி, கேது, சந்திரன் ஆகிய ஆறு கிரகங்களும் உங்கள் ராசியையே பார்க்கின்றார்கள். பாம்புகிரகமான ராகு உங்கள் ராசியிலேயே உலா வருகின்றார். சூரியன்-சனி சேர்க்கையும், சூரியன்-கேது சேர்க்கையும் மிகமிக பாதிப்புகளை உருவாக்கும் விதத்தில் இருக்கின்றது.



இந்தக்காலத்தில் காரியத்தடைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழியே பிரச்சினைகள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மூன்று நாட்களும் மனகட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தனாதிபதி சந்திரன், அஷ்டமாதிபதி சனியோடு கூடியிருக்கின்றார். சகோதர- சகாய ஸ்தானாதிபதி சூரியனும் பகைக்கிரகமான சனியோடும் கேதுவோடும் இணைந்திருக்கின்றார். எனவே எதையும் அதிகாரத்தால் சாதிக்க இயலாது. அன்பால் சாதிக்கலாம். வீண்பிடிவாதத்தைத் தவிர்க்கவும். வீடுமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள், ஏமாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். சுவாசப் பிரச்சினைகள், தண்டுவடப் பிரச்சினைகள், அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் தோன்றலாம்.

இக்காலத்தில் குருவை வழிபடுவதோடு நரசிம்மர் வழிபாட்டையும் மேற்கொள்ளவேண்டும். சர்ப்பகிரகமான ராகு-கேதுக்களின் ஆதிக்கத்தில் சிக்கி இருப்பதால் விஷ ஜந்துக்களால் தொல்லைகள் வரலாம். எனவே, சிதறுகாய் உடைத்து செய்யும் விநாயகர் வழிபாடு பலன்தரும். புதன்கிழமை அனுமன் வழிபாடும், வியாழக்கிழமை முன்னோர் வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடுகளையும் மேற்கொள்வதன் மூலம், வந்த பிரச்சினைகள் வாசலோடு நிற்க வழிபிறக்கும்.

கடகம்



உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் 6-கிரகங்கள் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் எதிர்பாராத மாற்றங்கள் இல்லம் தேடி வரும்.வருமானம் வந்தாலும், வந்த மறுநிமிடமே செலவாகி விடும். மனநிம்மதி குறையும். ஒரு சிலருக்கு கடன்சுமை உருவாகும். அலைச்சலைக் குறைத்துக் கொள்ளுங்கள். அகால நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்த்து விடுங்கள். உழைப்பிற்கேற்ற பயன் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, உடனிருப்பவர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள், சினத்தை தவிர்த்திடுங்கள். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். பிறரை நம்பி ஏமாறும் வாய்ப்பும் உள்ளது. எனவே எதிலும் நிதானம் அவசியம். வாழ்க்கைத் துணைவழியே அனுசரித்து செல்வது நல்லது. வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.

உங்கள் ராசிநாதன் சந்திரன் 6-ல் இருப்பதால் தனக்குத் தானே எதிரியாகும் சூழ்நிலை உண்டு. உங்கள் செயலே உங்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கலாம். 6-ம் இடம் ஜீவன ஸ்தானமாகவும் கருதப்படுவதால் உத்தியோகம் மற்றும் தொழிலில் திடீர் மாற்றங்கள் உருவாகும். எதிலும் கையெழுத்திடும் போது கவனம் செலுத்துங்கள்.அலைபாயும் மனதை அடக்கிக் கொள்ளுங்கள். வரவு-செலவுகளை கவனித்தால் பங்குதாரர்களால் வரும் ஏமாற்றத்தை தவிர்க்க இயலும்.

எத்தனை பாதிப்புகள் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வைப்பது இறை வழிபாடு என்பதால் புதன்கிழமை அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை முன்னோர் வழிபாட்டையும், வெள்ளிக்கிழமை துர்க்கை வழிபாட்டையும், குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களையும் வழிபடுவதன் மூலம் துன்பங்களில் இருந்து விடுபட இயலும். இந்த மூன்று நாட்களிலும் முறையான வழிபாடும், நிதானமாக செயல்படுவதும் தான் உங்களுக்கு நிம்மதியை வரவழைத்துக் கொடுக்கும்.

சிம்மம்



உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் 6 கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் விளைவாக புத்திர ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்தில் கிரகங்கள் கூடுவதால், மனக்குழப்பங்களும், பிரச்சினைகளும் கொஞ்சம் அதிகரிக்கலாம். குறிப்பாக பஞ்சம ஸ்தானத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன், தனலாபாதிபதி புதன், 6,7-க்கு அதிபதியான சனி, விரயாதிபதி சந்திரன் மற்றும் கேது ஆகியவை கூடுவதால், அவைகளின் ஆதிபத்தியத்தில் நடைபெறும் செயல்பாடுகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை ஏற்படுகிறதே என்று கவலைப்படுவீர்கள். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு திடீரென பொறுப்புகள் மாற்றப்படலாம். பிள்ளைகளால் பண விரயங்கள் ஏற்படலாம். சகோதர உறவுகளில் கூட விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் மன நிம்மதி குறையும். வாழ்க்கை துணை வழியே பிரச்சினைகள் அதிகரிக்கும். வாங்கிய சொத்துக்களில் சில பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், ‘எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முடியவில்லையே’ என்று கவலைப்படுவர். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, உடலின் இடது பாகத்தில் உபாதைகள், நரம்பு, எலும்பு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் உருவாகலாம். அலட்சியம் செய்யாமல் ஆரம்பத்திலேயே கவனித்துக் கொள்வது நல்லது.

புதன்கிழமையன்று அனுமன் ஜெயந்தி என்பதால் அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை அன்று அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்வதோடு, குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களையும் வழிபட்டால் குழப்பங்களிலிருந்து விடுபட இயலும். கூட்டுக் கிரக சேர்க்கையால் நன்மைகளையும் காண இயலும்.

கன்னி



உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 6 கிரகங்களின் சேர்க்கை ஏற்படுகிறது. இதன் விளைவாக சுக ஸ்தானம் எனப்படும் 4-ம் இடம் பலமிழக்கிறது. எனவே இந்த கிரக சேர்க்கை காலத்தில் மிக மிக கவனத்தோடு செயல்பட வேண்டும். குறிப்பாக ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும். உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச் சார்ந்த குடும்பத்தினருக்கும் உடல்நிலை தொல்லைகளும் அதன் விளைவாக மருத்துவ செலவுகளும் ஏற்பட்டு மனக்கலக்கத்தை உருவாக்கலாம்.

பொதுவாக இந்த ஆறு கிரக சேர்க்கையில் முக்கிய இடம் பெறுவது உங்கள் ராசிநாதன் புதனும் ஒன்றாகும். அவரோடு 11-ம் இடத்திற்கு அதிபதியான சந்திரனும், கேதுவும் இணைவது அவ்வளவு நல்லதல்ல. வேலைப்பளு அதிகரிக்கும். பணியாளர்களின் தொல்லைகளால் பல வேலைகளில் பாதிப்புகள் ஏற்படலாம். பணப்பற்றாக்குறையின் காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலையும், கைமாற்று வாங்கும் சூழ்நிலையும் கூட வரலாம்.

இந்த மூன்று நாட்களிலும் நீங்கள் பயணங்களைத் தவிர்ப்பது அவசியம். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. முன் கோபத்தைக் குறைத்துக் கொள்வது முன்னேற்றப்பாதைக்கு செல்ல வழிவகுத்துக் கொடுக்கும்.

இக்காலத்தில் நவக்கிரக வழிபாடு நன்மைகளை வழங்கும். அர்த்தாஷ்ட சனியின் ஆதிக்கமும், அர்த்தாஷ்ட குருவின் ஆதிக்கமும் மேலோங்கி இருப்பதால், சனி பகவான் வழிபாடும், குருபகவான் வழிபாடும் முறையாக செய்ய வேண்டும். அனுமன் ஜெயந்தி வரும் புதன்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டு வந்தால், பிணிகளில் இருந்து விடுபடலாம். வியாழன் அன்று முன்னோர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

12 ராசிகள்

துலாம்



உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ஆறுகிரகங்கள் ஒன்று கூடுகின்றன. முன்னேற்றம் தருகின்ற இடம் மூன்றாம் இடமாகும். அந்த இடத்தில் முரண்பாடான கிரகங்கள் சேர்வது அவ்வளவு நல்லதல்ல. இக்காலத்தில் மனபயம் அதிகரிக்கும். விமர்சனங்களால் உறவில் விரிசல்கள் ஏற்படும். அரசுவழித் தொல்லைகளும், அதிகாரிகளால் கலக்கங்களும் உண்டாகலாம். வழக்குகளில் திடீர் திருப்பங்கள் உருவாகும்.

உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகமாகும். எனவே தாய் வழியில் பகை உருவாகலாம். பெற்றோர்களின் உடல்நலம் கருதி ஒருதொகையைச் செலவிடும் சூழ்நிலை ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. 9-ல் ராகு சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இடமாற்றங்கள் உறுதியாகலாம். ஊர் மாற்றங்கள், வீடு மாற்றங்கள் கூட ஒருசிலருக்கு உண்டு. ஆனால் அவை திருப்தியாக அமையுமா என்பது சந்தேகம் தான். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் திடீர் என தாய்நாடு திரும்பும் சூழ்நிலைகள் கூட உருவாகலாம். ஜீரணக் கருவிகளின் இயக்க குறைவால் வயிற்று உபாதைகளும், பற்களில் பிரச்சினையும் , நரம்பு சம்பந்தப்பட்ட தொல்லைகளும், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற உடல்நலக்குறைபாடுகளும் ஏற்படலாம். எதற்கான அறிகுறி தோன்றி னாலும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது நல்லது. தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பதே மேல். தட்டுப்பாடுகள் அதிகரிக்கும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் பெரும்பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.

புதன்கிழமை அனுமன் வழிபாடும், வியாழக்கிழமை முன்னோர் வழிபாடும், வெள்ளிக்கிழமை தெற்கு நோக்கிய அம்பிகை வழிபாடும் செய்து வந்தால் பாதிப்புகளிலிருந்து ஓரளவேனும் விடுபட இயலும்.

விருச்சிகம்



உங்கள் ராசிக்கு 2-ம் இடமான வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்தில் ஆறு கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் உலா வருகின்றன. இந்த மூன்று நாட்களிலும் தான் உண்டு, தன்வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அப்பொழுதுதான் மனநிம்மதி கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குருபகவான், 3,4 ஆகிய இடத்திற்கு அதிபதியான சனிபகவானோடு இணைவதால் சகோதர வழியில் ஒரு சுபச் செய்தி வந்து சேரும். வழக்குகளில் சாதகமான நிலை உருவாகும். பெற்றோர்களின் உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே அளவிற்கு அதிகமான செலவுகள் ஏற்படலாம். பணியாளர்கள் தொல்லை கொஞ்சம் அதிகரிக்கலாம்.

தொழில்புரிபவர்கள் பங்கு தாரர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த மூன்று நாட்களிலும் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், முகஸ்துதிக்காகப் பேசுபவர்களை நம்பி, மற்றவர்களைப் பற்றி விமர்சித்தால் அது பிரச்சினைகளை உருவாக்கி விடும். எனவே பேசும்போது கவனம் தேவை.

சூரியபலம் 2-ல் இருப்பதாலும், அவர் தன் சொந்த வீட்டில் உள்ள குருவோடு இணைந்திருப்பதாலும் பெரியஅளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் ஜீரணத் தொல்லைகள், கை வலி, முதுகு வலி போன்றவை உருவாகலாம்.

ஆனைமுகப்பெருமானையும், முருகப்பெருமானையும், குலதெய்வ வழிபாடு களையும் முறையாகச் செய்து வழிபட்டு வருவதோடு, புதன்கிழமையன்று அனுமன் வழிபாட்டையும், வியாழக்கிழமை அன்று முன்னோர் வழிபாட்டையும் செய்து வந்தால் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். இன்பங்கள் இல்லம் தேடி வரும்.

தனுசு



உங்கள் ராசியிலேயே ஆறு கிரக சேர்க்கை ஏற்படுகின்றது. இது அவ்வளவு நல்லதல்ல. இந்த மூன்று நாட்களும் எல்லா முயற்சியிலும் இடர்பாடுகள் வரும் என்பதால் மிகமிக கவனம் தேவை. ஜென்மத்தில் கேதுவும், 7- ல் ராகுவும் இருந்து நாகதோஷத்தின் பின்னணியில் சிக்கி இருக்கிறீர்கள். அஷ்டமாதிபதி சந்திரனும், தனாதிபதி சனியும் இணைவது அவ்வளவு நல்லதல்ல.

இக்காலத்தில் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத் தொல்லைக்கு அடிப்படைக் காரணமே நீங்கள் உண்ணும் உணவுதான். எனவே ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். தலைக்கவசம் இன்றி இருசக்கர வாகனங்களில் செல்ல வேண்டாம். இடுப்பு பிடிப்பு, இருதயதொல்லை, அடிவயிற்றுப் பிரச்சினைகள், பாதவலிகள் போன்றவை ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டு.

பணிபுரியும் இடத்தில் திடீரெனப் பிரச்சினைகள் உருவாகி வேலை மாற்றம் ஏற்படலாம். வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்பை நம்பி, இருந்த வேலையைவிட்டு விட்டு தடுமாற்றங்களை ஒருசிலர் சந்திப்பர். குடும்ப உறவில்அமைதி கிடைக்காது. வாங்கிய சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அதை விற்க நேரிடலாம். எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. இருந்தாலும் இக்காலத்தில் எதிரிகளின் பலம் கூடுவதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. காவல் துறையாலும் கலக்கங்கள் வரலாம். வாழ்க்கைத் துணை யாலும் பிரச்சினைகள் உருவாகலாம்.

எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுபட இறைவழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். புதன்கிழமையன்று அனுமன் ஜெயந்தி என்பதால் அனுமனையும், வியாழக்கிழமையன்று அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டையும், குரு வழிபாட்டையும் மேற் கொள்வதன் மூலம் துன்பங்கள் தீர வழிபிறக்கும்.

மகரம்



உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் ஆறுகிரகங்கள் ஒன்று சேர்கின்றன. அஷ்டமாதிபதி சூரியன், ஆறு, ஒன்பதுக்கு அதிபதியான புதன், சப்தமாதிபதி சந்திரன், சகாய- விரய ஸ்தானாதிபதியான குரு ஆகியவற்றோடு ராசிநாதனான சனியும், கேதுவும் இணைந்திருக்கின்றார்கள். எனவே செய்யும் தொழில்கள் திடீரென முடங்கலாம். தேசங்கள் மாறிச் சென்று பணிபுரிபவர்கள் சிக்கல்கள் ஏற்பட்டு தாய்நாடு திரும்பலாம். வீடு கட்டுவதில் தடை ஏற்படலாம். உறவினர்களிடையே உரசல்கள் வரலாம். தயக்கமும், தடுமாற்றமும் தானாக வந்து சேரும். கடன்சுமை கூடும்.

வாகனப் பழுதுகள் அதிகரித்து வாட்டம்கொள்ள வைக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்சினைகள் வந்து உங்கள் மீது வீண்பழிகள் ஏற்படலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கூடுதல் கவனம் தேவை. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை எடுக்க வேண்டாம். குடும்பப் பிரச்சினைகள் அதிகரிக்கும். வாசல் வரை வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம். தூக்கம் குறையும். துயரங்கள் கூடும்.

இதுபோன்ற காலங்களில் இறைவழிபாடு ஓரளவு கைகொடுக்கும். முடங்கிக் கிடந்த தொழில் மீண்டும் தொடங்கவும், முன்னேற்றத்தில் ஏற்பட்ட பாதிப்பு அகலவும், கூடிய கடன்சுமை குறையவும், கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் அகலவும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரவும், விநாயகப் பெருமானையும், அனுமனையும், விடாது வழிபட்டு வாருங்கள். புதன்கிழமை ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வருவது நல்லது. வியாழக்கிழமை முன்னோர் வழிபாட்டையும், குரு வழிபாட்டையும் மேற்கொண்டால் முத்தான வாழ்க்கை அமையும்.

கும்பம்

உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் ஆறுகிரகங்களின் சேர்க்கை ஏற்படுகின்றது. சூரியன், புதன், வியாழன், சனி, கேது, சந்திரன் ஆகிய ஆறு கிரகங்களும் குருவிற்கு சொந்த வீடான தனுசு ராசியிலேயே சேர்ந்திருக்கின்றார்கள். ஆயினும் 7-க்கு அதிபதி சூரியன், 12 -க்கு அதிபதி சனி, 6 -க்கு அதிபதி சந்திரன் ஆகியவை ஒன்றுகூடுவதால் முரண்பாடான கிரகங்களின் சேர்க்கை காரணமாக முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். மனக்குழப்பங்களும் உருவாகும்.

இந்த ஆறுகிரகங்களின் மீதும் மிதுனத்தில் இருக்கும் ராகுவின் பார்வை பதிவது அவ்வளவு நல்லதல்ல. வாழ்க்கைத்துணை வழியிலும், பிரச்சினைகள் ஏற்படலாம். இந்தக் கூட்டுக்கிரக சேர்க்கையின் பொழுது ஆரோக்கியத் தொல்லை கூடுதலாகவே இருக்கலாம். முறையற்ற வைத்தியம் பார்ப்பதன் விளைவாக உடல்நல சீர்கேடுகள் அதிகரிக்கும். சனியின் பார்வை ராசியில் பதிவதாலும், ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதியான சந்திரன் சனியோடு சேர்ந்திருப்பதாலும் ஜீரணத் தொல்லைகள், குடல் சார்ந்த பிரச்சினைகள், கண், காது, மூக்கு ஆகியவற்றில் தொல்லை, உஷ்ணாதிக்க நோய், நூதனக் காய்ச்சல், நரம்புப் பிடிப்புகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். பூர்வீகச் சொத்துக்களில் மீண்டும் பிரச்சினைகள் தலைதூக்கும்.

சந்தோஷ வாய்ப்புகளைத் தொடர்ந்து சந்திக்கவும், சிந்தித்த காரியங்களைச் சிறப்பாகச் செய்யவும், எந்த நாளும் இனிய நாளாக அமையவும், இறைவழிபாடு உங்களுக்கு கைகொடுக்கும். அந்த அடிப்படையில் புதன்கிழமை வரும் அனுமன் ஜெயந்தியன்று அனுமனை முறையாக வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமையன்று முன்னோர்கள் வழிபாட்டையும், குருதட்சிணாமூர்த்தி வழிபாட்டையும், மேற் கொள்வதன் மூலம் கூடுதல் நன்மை உங்களுக்கு கிடைக்கும்.

மீனம்



உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தனுசு ராசியில் புதன், வியாழன், சனி, சூரியன், கேது, சந்திரன் ஆகிய ஆறு கிரகங்களும் சேர்ந்து இருக்கின்றன. முரண்பாடான கிரக சேர்க்கையின் போது முன்னேற்றத்தில் குறுக்கீடுகள் வரலாம். 6-ம் இடத்திற்கு அதிபதியான சூரியன், பஞ்சமாதிபதி சந்திரனோடும் கேதுவோடும் இணைந்திருப்பதால் பல நல்ல வாய்ப்புகள் வந்தும் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் போகலாம்.

10- ல் குரு இருந்தால் பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள் உருவாகலாம். நீங்கள் தொழில் புரிபவராக இருந்தால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். ரோகாதிபதி சூரியன், ராசிநாதனோடும், பஞ்சமாதிபதியோடும் இருப்பதால் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நலத் தொல்லைகள் உருவாகலாம். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள், சிறுநீரகத்தொல்லை, வளர்ப்புப் பிராணிகளால் ஆபத்து, பெண்களாக இருந்தால் மாதாந்திர உபாதைகள் அதிகரிப்பு, தூக்கக்குறைவு, கால் வலி போன்றவை அதிகரிக்கலாம்.

இந்த ஆறுகிரக சேர்க்கையின் பொழுது சுக ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாயும் சஞ்சரிக்கின்றார்கள். இதனால் வாகன விபத்துக்களும், ரணசிகிச்சைகளும் கூட உருவாகலாம். விற்பனை செய்த வீடு அல்லது இடங்களில் இருந்து முறையாகப் பணம் வராமல் நிலுவையில் நிற்கலாம்.

இந்த ஆறு கிரக சேர்க்கையின் பொழுது புதன்கிழமையன்றுஅனுமன் ஜெயந்தி வருவதால் அன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள். அடுத்த நாள் வியாழக்கிழமை அமாவாசை என்பதால் முன்னோர் வழிபாட்டில் முறையாக கவனம் செலுத்துங்கள். வெள்ளிக்கிழமையன்று வெற்றி வடிவேலனை வணங்குங்கள். இனிய பலன்கள் இல்லம் தேடி வரும்.

கணித்தவர்: “எண்கலைவித்தகர்” “ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent