இந்த வலைப்பதிவில் தேடு

இதனை செய்தால் கல்வியில் தமிழகம் முதலிடம் பெறும்: தமிழகம் வந்த பின்லாந்து கல்விக் குழு அறிவிப்பு

செவ்வாய், 3 டிசம்பர், 2019



நம்முடைய பாடத்திட்டத்தில் தியரி, பிராக்டிகல் கல்வி முறை ஆகிய இரண்டும் இணைந்தால் தமிழகம் கல்வியில் முதலிடம் பெறும் என்று பின்லாந்து கல்விக் குழு தெரிவித்துள்ளது.



தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் சமீபத்தில் பின்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள கல்வி முறை குறித்துக் கேட்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6 பேர் அடங்கிய பின்லாந்து நாட்டு கல்விக் குழு இரு வாரப் பயணமாக தமிழகம் வந்தது.



தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளை பார்வை யிட்டு ஆசிரியர்கள் கற்பிக்கும் வழிமுறை, மாணவர்களின் கற்றல் திறன் தொடர்பாக ஆய்வு நடத்தியது. அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 150 ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக் குழு, கற்பித்தல் முறை குறித்துப் பயிற்சி அளித்தது.

அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பின்லாந்து குழுவினர் சென்றனர். வகுப்பறைக்கு நேரில் சென்ற அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர்கள் கற்றல், கற்பித்தல் முறையை அறிந்து கொண்டனர். பின்னர் மாணவர்களுடனும் கலந்துரையாடினர். தொடர்ந்து கற்பித்தல் பணிகள் இடையே மாணவர்களுடன் அவ்வப்போது உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என பின்லாந்து கல்விக் குழு ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது.



இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ள பயோ அகாடமியின் தலைமைச் செயல் அதிகாரி லீசா டோய்வானின், ''தமிழக மாணவர்கள் திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கற்பதில் ஆர்வமாக இருக்கின்றனர். கல்வித் தரத்தை அரசு அதிகரிக்கும் பட்சத்தில் மாணவர்கள் தாமாகச் சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்வர்'' என்றார்.

பின்லாந்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது, ''தமிழகத்தில் தியரி முறை சிறப்பாகக் கையாளப்படுகிறது. பின்லாந்து நாட்டில் பிரபலமான பிராக்டிகல் முறையைத் தமிழகத்தில் அமல்படுத்தலாம். இதன்மூலம் தமிழக பள்ளிக்கல்வியின் தரம் மேம்படும்; முதலிடம் பெறும்'' என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent